ஈழப்போராட்டத்தில் சீலன் என்ற ஆளுமை
சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர். தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி 'நாராயணசாமியும்' எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை. பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது. இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.) புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.) அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, 'அதோ அந்தப்பறவை போல…'. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார். அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது. புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் 'இதயச்சந்திரன்'. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான். புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது. சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை. ----------------------------------------------------- சீலனினதும் ஆனந்தினதும் நினைவாக மீசாலையில் நிறுவப்பட்டிருந்த நினைவிடமும் சிறுவர் பூங்காவும் சிங்களப் படையினரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த இடத்தில் நினைவிடம் மட்டும் நிறுவப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நினைவிடமே இது. |