வியாழன், 8 ஏப்ரல், 2010

ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் கைகலப்பில் போராடிய பிரிகேடியர் கடாபி

ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் கைகலப்பில் போராடிய பிரிகேடியர் கடாபி



புலிகளின் அணியில் எவ்வளவு பேர் தப்பி காட்டிற்குள் சென்றனர். புலிகளின் முதன்மைத் தளங்கள், வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் என்பன குறித்து இவரிடம் கடும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. சந்தர்ப்ப வசத்தால் எதிரியின் கைகளில் கடாபி வீழ்ந்தாலும் அவர் வீரமும், ஆயுதம் முடிந்தபின்னரும் இலங்கை இராணுவத்துடன் கைகலப்பு யுத்தத்தில் ஈடுபட்ட மனத்தைரியமும், போராட்ட வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.

குறிப்பாகச் சொல்லப் போனால், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் பல மூத்த தளபதிகள் சிறையில் உயிருடன் இருக்கின்றனர், சிலர் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும்.

அதிர்ந்த ஆனந்தபுரச் சமர்: காவிய நாயர்களுக்கு வீரவணக்கம்

அதிர்ந்த ஆனந்தபுரச் சமர்: காவிய நாயர்களுக்கு வீரவணக்கம்

கடந்த வருடம் போர் உச்சக்கட்டமடைந்திருந்த வேளை, ஏப்பிரல் மாதத்தில் ஆனந்தபுரத்தில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை பெட்டி அடித்து அதனைச் சுற்றி வளைத்த இலங்கை இராணுவத்திற்கு எதிராக கடும் போர் மூண்டது. கேணல் தீபன் தலைமையில் முதலாவது அணி களமிறங்க, இராணுவ முன் நகர்வு வெகுவாகத் தடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சமரை சமாளிக்க முடியாத இராணுவத்தினர், மேலதிக துருப்புக்களை வரவழைத்து முன்னேற முயன்றவேளை, தீபன் காயமுற்றார். அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தளபதி, விதுசா, மற்றும் துர்க்கா ஆகியோர் களமிறங்கினர்.

தலைவர் தங்கியிருந்த வீட்டை பெட்டியடித்து தாக்கி வந்த இராணுவத்தை, எதிர்த்து தாக்குதல் களத்தில் குதித்தனர் விதுசா மற்றும் துர்க்காவின் அணிகள். அகோரத் தாக்குதல் காரணமாக, பல இழப்புக்களைச் சந்தித்த இராணுவத்திற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இச் சமரில் கடாபி நேரடியாக களமிறங்கி பெட்டியடித்த இராணுவத்தை சுற்றி தாம் ஒரு பெட்டி அடித்து பாரிய தாக்குதலை தொடுத்தார். (அதாவது இராணுவத்தை சுற்றிவளைத்தார்) இதனை சற்றும் எதிர்பார்க்காத இராணுவம் பல இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது.

இந்த நேரத்திலேயே இலங்கை இராணுவம் உலகப் போர் மரபுகளை மீறும் வண்ணம் ஒரு ஈனச் செயலில் ஈடு படத் துணிந்தது. எதிரியை சமாளிக்க முடியவில்லை என்றதும் பேடித்தனமான செயலை அரங்கேற்றத் நினைத்தது இராணுவம். உடனடியாக தனது இராணுவத்தை 2 கி.மீட்டர் பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தது. சமரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனே தமது நிலைகளில் இருந்து பின் வாங்கி சுமார் 3 கிலோ மீட்டர் பின் நகர்ந்தனர். அப்போது இராணுவம் இழப்புக்களை தாங்க முடியாமல் பின் வாங்குவது போன்ற தோற்றப்பாடே மேலோங்கி இருந்தது.

இராணுவம் பின் வாங்கிய சிறிது நேரத்திலேயே அங்கே பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன, நச்சுவாயுக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் அவ்விடத்தில் மழையாகப் பொழிந்தன. இத் தாக்குதலில் காயமுற்றிருந்த கேணல் தீபன் வீரச்சாவை தழுவ, நச்சுக் குண்டின் தாக்குதலில் தளபதி விதுசா, துர்க்கா ஆகியோர் வீரச்சாவடைந்தனர். கடாபியின் அணிமீது எரிகுண்டு வீழ்ந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதிநேரத்தில் 2 கால்களையும் அவர் இழந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நடைபெற்ற கால கட்டத்தில், விடுதலைப் புலிகள் நச்சு வாயுக் குண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள் என பல முறை பொய்யான பரப்புரைகளை இலங்கை மேற்கொண்டு வந்தது. எனினும் இலங்கை அரசே நச்சுவாயுக் குண்டுகளை ஆனந்தபுரச் சமரில் பாவித்திருந்தது. மாறாக புலிகள் எச் சமரிலும் பேரளிவைத் தரும் இவ்வாறு உலகில் தடைசெய்யப்பட்ட எந்த ஆயுதங்களையும் பாவிக்கவில்லை.

கடுமையான யுத்தத்திற்கு மத்தியில் ஆனந்தபுரத்தில் இருந்து தலைவரை புதுமத்தளான் பகுதிக்கு கொண்டு சென்றனர் எஞ்சியிருந்த கடாபியின் சகவீரர்கள். இன்றுடன் அவர்கள் வீரச்சாவடைந்து ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இம் மறவர்களுக்கு அதிர்வு இணையம் சிரம் தாழ்த்தி எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

--------------------------------------------------------------------