Vimalkanth
1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சுமார் 300-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா படையினரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பெற்றோர்களுக்கு தெரியாது என்றும் கூட்டமைப்பு எடுத்துக் கூறியுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்றது.
1,500 மக்கள் கொல்லப்ட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக நாடுகள் இன்று வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது வேதனை அளிக்கின்றது என சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட உங்களால் உண்மை நிலைமைகளை அறிந்திருக்க முடியாது.
ஏனெனில் மொழிபெயர்ப்பாளர்கள் கூட அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். அரசாங்கம் உங்களுக்கு கடிவாளம் இட்ட நிலையில் மக்களின் அவல நிலைமைகளை காண்பித்திருக்கின்றது. அது ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்தி கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்னார்.
30 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஏமாற்றி தற்போது அனைத்துலக நாடுகளை ஏமாற்றி வருகின்றது சிறிலங்கா அரசாங்கம்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு சரத்துகளில் கையொப்பம் இட்டு இன்று அவற்றை எல்லாம் மீறியுள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றிய ஜெனீவா தீர்மானங்களுக்கு அமைவான ஒப்பந்தங்களில் கைசாத்திட்ட விடயங்கள் எல்லாவற்றையும் மீறி சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை கொலை செய்து வருகின்றது என விளக்கி கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கனரக அயுதங்களை பாவிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் கூட மீறப்பட்டு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களின் வாழ்விடங்கள் மீது கனரக ஆயுதங்களினால் சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலகம் எப்படி நம்புகின்றது? தமிழர்கள் என்ன செய்வது? என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டிடம் கேள்ளி எழுப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
அதேவேளையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தனியான நிர்வாகம் ஒன்றின் கீழ் இருந்த தமிழர்களை 1948 இல் சிங்கள தேசியத்தின் அரசியல் யாப்புக்குள் இணைத்துவிட்ட குற்றம் பிரித்தானியாவுக்கே உரியது.
அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை நிவர்த்திக்க தற்போதைய பிரித்தானிய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விரிவாக கூறினார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் நிலைமைகளை நேரில் அறிவதற்கே கொழும்புக்கு வந்ததாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் சொன்னார்.