சம்பவம் நடந்த காலப்பகுதியைப் பற்றிய சுருக்கமான விவரிப்பு:
இது 1998 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதி. வன்னியில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. தொடக்கத்திலேயே எதிரி நெடுங்கேணியைக் கைப்பற்றியிருந்தான். பின் கண்டிவீதி வழியாக நகர்ந்து புளியங்குளத்தைத் தாண்ட முடியாமல் திணறியதால் கண்டிவீதிக்குக் கிழக்குப்புறமாக காடுகளால் முன்னகர்ந்து மாங்குளம் – ஒட்டுசுட்டான் சாலையில் கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான்.
அதன்பின் சண்டையின்றியே புளியங்குளம், பிறகு கனகராயன் குளம் என்பவற்றைக் கைப்பற்றியநிலையில், மாங்குளத்துக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருந்தான். கண்டிவீதி வழியான நகர்வுகள் சரிவராத நிலையில் அவன் மாங்குளத்தைக் கைப்பற்ற கரிப்பட்டமுறிப்பிலிருந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமிருந்தான்.
மாங்குளம் – ஒட்டுசுட்டான் சாலையில் தனது கட்டுப்பாட்டுப்பகுதியை அதிகரிப்பதற்காக எதிரி கடுமையாகச் சண்டையிட்டான். அதனால் ஒலுமடுப்பகுதியைக் கைப்பற்ற சில எத்தனங்களை சிறிலங்கா அரசபடை செய்தது.
சண்டையென்றால் இறுதிப்போரில் நடந்தது போலில்லை. அப்போதெல்லாம் ஒரு முன்னேற்ற முயற்சி தோல்வியடைந்தால், இராணுவம் போதிய அவகாசமெடுத்துத்தான் அடுத்த முன்னேற்ற முயற்சியைச் செய்யும். அது சிலவேளை ஒருமாதமளவு இடைவெளியாகக்கூட இருக்கும்.
ஜெயசிக்குறு தொடங்கிய சில காலத்திலேயே புலிகள் முறியடிப்புச் சமரில் தேர்ந்தவர்களாகி விட்டார்கள். கனரகப் பீரங்கிகளை ஒருங்கிணைத்து எதிரிக்கு உச்ச இழப்பைக் கொடுப்பதில் புலிகள் வல்லவராய் மாறியிருந்தனர்.
முன்னரண் பகுதியொன்றை உடைத்துக்கொண்டு எதிரி உள்நுழைந்துவிட்டால் புலிகளின் முறியடிப்பு அணிகள் பீரங்கிச் சூட்டாதரவுடன் இழந்த காவலரண்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி மீள இணைப்பை ஏற்படுத்துவதும், பின்னர் உள்நுழைந்திருக்கும் எதிரியணிமீது எறிகணைத் தாக்குதலைச் செய்வதும், தப்பியோடும் இராணுவத்தினரைத் தாக்கியழிப்பதும் அடிப்படைத் தந்திரமாக இருந்தது.
புலிகளின் அதிகரித்த பீரங்கிப் பயன்பாடும் துல்லியமான எறிகணைத் தாக்குதலும் எதிரிக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியது. முறியடிப்புத் தாக்குதலில் புலிகளின் ஆளிழப்பு வெகுவாகக் குறைந்திருந்தது.
இந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் ஒலுமடுவை நோக்கி ஏற்கனவே இரண்டு, மூன்று நகர்வுகளைச் செய்து அவை தோல்வியில் முடிவடைந்திருந்தன. மீண்டும் பெருமெடுப்பில் ஒரு நகர்வைச் செய்ய இராணுவத் தலைமை தீர்மானித்தது.
1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள். அன்று அதிகாலை ஐந்து மணியளவில் ஒலுமடுவைக் கைப்பற்றவென இராணுவம் முன்னேறியது. வழமைபோல் சில காப்பரண்களை உடைத்துக்கொண்டு இராணுவம் முன்னேறியது. புலிகள் மீளவும் காப்பரண்களைக் கைப்பற்றி உள்நுழைந்த எதிரியின் தொடர்பைத் துண்டிக்க முற்பட்டனர். அதேநேரம் உள்நுழைந்த படையினர் மீது எறிகணைகளைப் பொழிந்தனர்.
இம்முறை எதிரி அதிகநேரம் முரண்டுபிடிக்கவில்லை. இழக்கப்பட்ட காவலரண்களைப் புலிகளின் முறியடிப்பு அணிகள் முழுமையாக கைப்பற்றி திரும்பிச் செல்ல பாதையில்லாத நிலை வருமுன்பே தன் அணிகளைப் பின்வாங்கத் தொடங்கியது படைத்தரப்பு.
புலிகளின் முறியடிப்பு அணிகளுக்குப் பலத்த எதிர்ப்பைக் கொடுத்து பின்வாங்குவதற்கான பாதையைத் தக்கவைத்துக் கொண்டது இராணுவம். காயப்பட்டவர்களைத் தூக்கிக்கொண்டு சிறிலங்காப் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பினர். சண்டை முடிந்தபோது படைத்தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் ஆறுபேர் வீரச்சாவடைந்திருந்தனர்.
வீரச்சாவடைந்த ஆறுபேரில் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பெயர் மேகநாதன்.
மேகநாதன் சிறுத்தைப் படையணியில் இருந்தான். 1997 இன் தொடக்கத்தில் – தைமாதம் ஒன்பதாம் திகதி ஆனையிறவு மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து – சிறுத்தைப் படையணியின் நூறு பேர் கொண்ட ஓரணி கொஞ்சக்காலம் எங்களோடு நின்றது. அதில் மிகப்பெரும்பான்மையானோர் புதிய போராளிகள். அப்போதுதான் அவனைத் தெரியும். சிறிதுகாலம் எங்களோடு இணைந்து பணியாற்றியபின் மீளவும் அவன் சிறுத்தைப் படையணியிலேயே இயங்கினான். ஒலுமடுவில் மறிப்புச்சமர் செய்துகொண்டிருந்த சண்டையணிகளுள் மேகநாதன் இருந்த அணியும் இருந்தது.
நாங்கள் அப்போது கற்சிலைமடுவில் இருந்தோம். கற்சிலைமடுவென்பது ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புச் சாலையில் அமைந்திருக்கும் ஓரிடம். அச்சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துவரும் மக்கள் குடியிருப்பு கற்சிலைமடு தான். வன்னியின் மன்னன் பண்டார வன்னியனோடு தொடர்புபட்டு இவ்விடம் கொஞ்சம் பிரபலம்.
அன்று காலையே செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. இரண்டு தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வந்தன. ஒலுமடுவில் முன்னேறிய இராணுவம் மீதான முறியடிப்புத் தாக்குதல் ஒரு செய்தி. பருத்தித்துறையில் சிறிலங்காக் கடற்படையினரின் இரு கலங்கள் மீதான தாக்குதல் இன்னொரு செய்தி.
22/02/1998 அதிகாலை இரண்டு மணியளவில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து ‘பபதா’, ‘வலம்புரி’ ஆகிய தரையிறக்குக் கலங்கள் மீது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவ்விரு கலங்களும் மூழ்கடிக்கப்பட்டன. ‘பபதா’ கடற்கலம் மீது ஏற்கனவே ஒருமுறை வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு அது சேதமாக்கப்பட்டிருந்தது. பிறகு அது திருத்தப்பட்டுப் பயன்பாட்டில் இருந்தது.
போராளிகளைப் பொறுத்தவரை மிகப்பெரும்பான்மையான தாக்குதல்கள் துக்கமும் மகிழ்ச்சியும் நிரம்பியவை. எதிரியின் இழப்பும் களத்து வெற்றியும் மகிழ்ச்சியென்றால் அதையடைய எமது தரப்பில் ஏற்பட்ட இழப்பு துக்கம் நிறைந்தது. இது போராளிகளுக்கு மட்டுமன்றி போராளிகளைச் சார்ந்த மக்களுக்கும் பொதுவானது.
அன்றைய நாளில் ஒலுமடுச் சண்டையில் மேகநாதன் வீரச்சாவென்ற செய்தி எமக்குக் கிடைத்துவிட்டது. கற்சிலைமடுவை அண்டியே சிறுத்தைப் படையணியின் நிர்வாகம் செயற்பட்டு வந்ததும், நாம் அவர்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்ததும் எமக்கு உடனடியாகவே விவரங்கள் கிடைக்க உதவின.
மேகநாதனின் குடும்பம் தற்போது இருப்பது ‘கெருடமடு’ என்ற தகவலும் கிடைத்தது. நானும் இன்னுமிரு போராளிகளும் அன்று பற்பகல் மேகநாதனின் வீட்டுக்குப் போனோம்.
கெருடமடு என்ற இடம்
கற்சிலைமடுவுக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையிலுள்ள ஓரிடம். இராமாயணக் கருடனோடு தொடர்புபட்டு ஏதோவொரு கதையுண்டு அவ்விடத்துக்கு. பிரபலமான கோயிலொன்றும் உண்டு. ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புச் சாலையைப் பேராறு குறுக்கறுத்துப் பாய்வது கெருடமடுவில்தான். ‘பேராற்றுப் பாலம்’ என அழைக்கப்படும் பெரிய பாலமொன்றுண்டு (வன்னியில் இதுமட்டும் தான் பேராற்றுப் பாலமன்று).
பேராற்றுப் பாலத்துக்கு அருகில் ஒட்டுசுட்டான் பக்கமாக இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் குடியிருப்பொன்று அப்போது இருந்தது. கிடுகால் வேயப்பட்ட சிறுகுடிசைகள் வரிசையாக இருக்கும். இங்கிருப்பவர்கள் ஜெயசிக்குறு தொடங்கப்பட்டபின் இடம்பெயர்ந்த மக்கள். இவர்களில் யாருக்கும் இது முதலாவது இடப்பெயர்வன்று. சிலருக்கு இது பத்தாவதாகக் கூட இருக்கலாம்.
இங்கிருப்பவர்களில் பலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஓரிடத்தில் ஓராண்டு கூட வசிக்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்த பல குடும்பங்களை எனக்குத் தெரியும். இங்கிருக்கும் ஒரு குடிசையொன்றில்தான் மேகநாதனின் குடும்பமும் வசித்து வந்தது. நுட்ப ரீதியில் இதை வீடென்று சொல்ல முடியாதுதான். ஆனால் வசிப்பவர்களுக்கு அது வீடுதான்.
மேநாதனின் வீட்டை நெருங்குகிறோம். நிறையப்பேர் வெளியே இருந்தனர். பந்தல் ஒன்று போடும் முயற்சியில் பலர் ஈடுபட்டிருந்தனர். இப்போது வித்துடல்* வந்திருக்காது. அனேகமாக இரவு வந்து சேரும்.
வீட்டை நெருங்குகையில் கடற்புலிப் போராளிகள் சிலரை அடையாளங் கண்டேன். அவர்களுள் எனக்கு மிக நெருக்கமான பழக்கமுள்ளவர்கள் இருவர் இருந்தனர். ஒருவன் எங்களோடு இருந்து பின்னர் கடற்புலியாகச் சென்றவன். அவர்கள் அங்கிருந்தது எனக்கு அசாதாரணமாகப் பட்டது. பக்கத்து வீடுகளில் ஏதாவது வீரச்சாவோ எனப் பார்க்கிறேன்.
மேகநாதனுக்குக் கடற்புலித் தொடர்பு இருக்கவில்லை. சிலவேளை அவனின் சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் யாராவது கடற்புலியாக இருக்கலாம், அவரோடு இவர்களும் வந்திருக்கலாமென்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
என்னைக் கண்டதும் அவ்விரு கடற்புலிப் போராளிகளும் என்னிடம் வந்தனர். நானே உரையாடலைத் தொடங்கினேன்.
‘என்னடாப்பா, கண்டு கனகாலம். எப்பிடியிருக்கிறியள்? என்ன இஞ்சால் பக்கம்?’
‘நாங்கள் நல்லாயிருக்கிறம். இஞ்சயொரு வீரச்சாவு. அதுதான் வந்தனாங்கள்’.
‘ஓ… நானும் மேகநாதன்ர வீரச்சாவுக்குத்தான் வந்தனான். முந்தி கொஞ்சக்காலம் எங்களோட நிண்டவர். அவரின்ர சொந்தக்காரர் ஆரும் உங்களோட இருக்கினமோ?’
‘இல்லை, நாங்கள் வந்தது வள்ளுவன்ர வீரச்சாவுக்கு. இஞ்ச வந்தப்பிறகுதான் இப்பிடியெண்டு தெரியும்.’
எனக்கு ‘எப்படி’யென்று இன்னும் விளங்கவில்லை. எனது முகத்தைப் பார்த்ததுமே அவர்களுக்கு விளங்கிவிட்டது எனது சிக்கல்.
‘பருத்துறையில விடிய நடந்த சண்டையில வீரச்சாவடைஞ்ச கரும்புலிகளில ஒருத்தன் வள்ளுவன். இஞ்ச வந்தப்பிறகுதான் எங்களுக்குத் தெரியும் தம்பியார் விடிய ஒலுமடுவில வீரச்சாவு எண்டு.’
எனக்குத் தலைசுற்றியது. ‘கூடப் பிறந்த தமையன் தம்பியோ?’
‘ஓம். வள்ளுவன் மூத்த தமையன்.’
இப்படி நடப்பது இதுதான் முதல்முறையோ தெரியவில்லை. ஒரேவீட்டில் இரண்டுபேர், மூன்றுபேர் என்று மாவீரர்கள்* ஆகியிருக்கிறார்கள். ஆனால் ஒரேநாளில் நடந்திருக்கிறதா தெரியவில்லை.
ஒரு வீட்டில் பலர் போராளிகளாயிருப்பதொன்றும் புதிதன்று. ஒருவர் களத்தில் நின்றால் மற்றவர்களைக் களங்களிலிருந்து அப்புறப்படுத்தி பின்தள நிர்வாகங்களில் வைத்திருப்பதுதான் அப்போதைய இயக்க நடைமுறை. ஆனால் இது சற்று வித்தியாசமானது. மேகநாதன் சண்டைக்களத்தில் நின்றிருக்கிறான். ஆனால் தமையன் கடற்கரும்புலி. கடற்கரும்புலியென்றால் களத்தில் நிற்பதாகக் கருதுவதில்லை. பலர் கரும்புலியணியில் இணைந்தபின் பல வருடங்கள்கூட காத்திருந்துள்ளார்கள் தங்கள் இலக்குக்காக.
இது தற்செயலாக நடந்துவிட்ட ஒன்று. அதிகாலை இரண்டுமணிக்கு தமையன் கரும்புலித் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைய அன்றைய நாளே ஒலுமடுவில் முன்னேறிய படையினருக்கு எதிரான மோதலில் தம்பி வீரச்சாவடைந்து விட்டான்.
அழுகைச் சத்தங்கள் ஏதும் பெரிதாகக் கேட்கவில்லை. அழுது ஓய்ந்துவிட்டதா தெரியவில்லை. இன்றிரவு மேகநாதனின் வித்துடல் கொண்டுவரப்படும்போது நிறையப் பேர் கதறியழுவார்கள். பந்தல் போடப்பட்டுக் கொண்டிருக்குமிடத்தில் குந்தியிருந்த ஒருவரைக் காட்டி அவதான் தாயார் என்றார்கள்.
எட்டத்திலிருந்தே பார்த்தேன். நான் பார்க்கும் போது அவ அழுதுகொண்டிருக்கவில்லை. ஏற்கனவே அழுது ஓய்ந்திருப்பாவோ தெரியவில்லை. ஏதோ யோசித்துக் கொண்டிருப்பது போற்பட்டது.
எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பா?
எவனுக்காக அழுவது என்றா, எவனைப் பற்றி முதலிற் சொல்லி அழுவது என்றா?
===============================
22/02/1998 பருத்தித்துறையில் கடற்கலங்களை மூழ்கடித்த தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் வள்ளுவனோடு
கடற்கரும்புலி லெப்.கேணல் கரன்
கடற்கரும்புலி மேஜர் சுலோஜன்
கடற்கரும்புலி மேஜர் தமிழினியன்
கடற்கரும்புலி மேஜர் குமரேஸ்
கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை
கடற்கரும்புலி கப்டன் தமிழன்பன்
கடற்கரும்புலி கப்டன் மேகலா
கடற்கரும்புலி கப்டன் நங்கை
கடற்கரும்புலி கப்டன் வனிதா
கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி
ஆகிய பதினொரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். அனைவருக்கும் எமது வீரவணக்கம்.