தீயில் கருகிய தியாகவேந்தர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வு
சிறிலங்கா இனவாத அரசாங்கத்தினால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர இன அழிப்புப்போரை உடனடியாக நிறுத்தக்கோரி தமிழ்மக்கள் நடத்திய அமைதிப்பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்ங்களைப் பாராமுகமாக அலட்சியப்படுத்திய உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துத் தமிழின விடுதலைக்கு வழிகோருவதற்காகத் தம்முடல்களைத் தீயுடன் சங்கமமாக்கி இன்னுயிர்களை ஈகம் செய்த முத்துக்குமார் தொடக்கம் முருகதாஸ் வரையான தியாகதீபங்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 14.02.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ஆறு மணி முதல் பத்து மணி வரை Rushgrove Avenue, Colindale, London என்னும் முகவரியல் அமைந்துள்ள St. Mathias மண்டபத்தில் நடைபெற்றது.
முத்துக்குமார், ரவி, ராஜா, ரவிச்சந்திரன், அமரேசன், தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம்,கோகுலகிருஸ்ணன், சீனிவாசன், எழில்வளவன், ஆனந்த், ராசசேகர், பாலசுந்தரம், மாரிமுத்து, சிவானந்தன், சுப்பிரமணி, முருகதாஸ் ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவு நினழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. பொதுச்சுடரினை ஜெனிவாவில் தீக்குளித்துத் தன்னுயிரை ஈகம் செய்த ஈகைப்பேரொளி முருகதாஸின் தந்தை திரு. வர்ணகுலசிங்கம் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து திருவுரவப்படத்திற்கு முருகதாஸின் தாயர் திருமதி. வர்ணகுலசிங்கம் மலர்மாலை அணிவித்தனர்.
நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு, மலர்வணக்கமும், தீபவணக்கமும் செலுத்தினர். உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்தமூர்த்தி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் பேராசிரியர் தீரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி. வே.சௌந்தரராசன் அவர்களின் கவிதையும், ஈழக்கவிஞர் திரு. பாலரவி அவர்களின் தலைமையில் ஒரு கவியரங்கும், நடனநிகழ்ச்சிகளும் தமிழ் இளையோர் அமைப்பினரின் பேச்சு,கவிதை மற்றும் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
இறுதியாகத் தமிழரின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மூன்று முறை எழுச்சியுடன் முழங்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக