இலங்கைத் தமிழரின் நாட்டுப்பற்று
-செங்கோடன்-
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே. முற்காலத்தில் இலங்கைத் தமிழர் தாய்நாட்டுப் பற்றுடன் வாழ்ந்த படியால் மூன்று தமிழ் நாடுகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. தமிழர் நாட்டுப்பற்றினை இழந்தபடியால் மூன்று நாடுகளையும் இழந்தனர். தமிழருக்குச் சொந்தமாக ஒரு நாடு இருந்தது என்று சொல்வதற்குக் கூட வரலாற்றைப் பேணவில்லை. நாட்டுப்பற்று உள்ளவர்களினால்தான் வரலாற்றைப் பேணவும் நாட்டைப் பாதுகாக்கவும் முடியும். தமிழர்களின் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் தமது தவறுகளை மறைப்பதற்காக வரலாற்றினை மறைத்தார்கள். நாட்டைக் காக்கப் போராடிய வீரவேந்தர்களின் வரலாற்றை அந்நியர்கள் மறைத்தார்கள். தமது தவறுகளை மறைப்பதற்காக தமிழ்த் தலைமைகள் உலகம் வியந்த ஈழத்தமிழ் நாட்டின் வரலாற்றை மறைத்தார்கள். சுயநலம் காரணமாக சுயசரிதைகளை எழுதினார்கள். இருந்தும் நாட்டைக் காப்பாற்ற சிலர் நாட்டின் வரலாற்றினை எழுதினார்கள்.
வாய்மையே வெல்லும். உண்மையை சில நாட்களுக்கு மறைக்கலாம் அழிக்க முடியாது. நாடு என்றால் என்ன? எல்லைகளால் வரையறுக்கப்பட்ட நிலம் குடிமக்கள் அரசன் இவை மூன்றும் உள்ளது நாடு. அப்படி என்றால் இலங்கைத்தமிழரின் நாடு எது? அதன் பெயர் என்ன? அதன் எல்லைகள் எவை? குடிகள் யாவர்? அதன் அரசர்கள் யார்? இவற்றைத் தெரிந்து கொண்டால் தான் பிரச்சினையை தீர்க்க முடியும். இலங்கைத் தமிழருக்குச் சொந்தமாக நாடு இருந்ததா? இல்லையா?ஈழத்தில் தமிழருக்குச் சொந்தமாக ஒரு நாடு இருந்ததில்லை என்று கருதும் வரலாற்றாளர்களும் தலைமைகளும் தான் நாட்டின் பெயரைக் கூறாமல் பாரம்பரிய தாயகம் என்று கூறினார்கள். இதுவெ துன்பங்களுக்கு மூலகாரணமாக அமைந்தது.
தமிழத்தலைமைகள் தமிழரது நாட்டின் பெயரைச் சொல்லியிருந்தால் இலங்கைத்தமிழர் பிரச்சினை இருநாடுகளுக் கிடையேயான பிரச்சினை என்ற உண்மை உலக நாடுகளுக்கும் தெரிய வந்திருக்கும். உண்மையை மறைத்ததால் துன்பம் தொடர்கிறது. இலங்கை அரசு தமிழர் பிரச்சினையை ஐ. நா. சபைக்கு கொண்டு சென்றது. தமிழர் அதற்கான பதிலை சமர்ப்பிக்கவில்லை. டாக்டர் இ. மு. வி. நாகநாதன் பா.உ. “ 1948 ல் தமிழ்த் தலைமைகள் தமிழர்களின் நல்லூர் இராச்சியத்தினை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். கேட்டுப் பெறத்தவறியதன் மூலம் தமிழினத்திற்குப் பெருந் துரொகம் இழைத்து விட்டார்கள்” என்று 1952 ல் தெரிவித்தார். நாட்டுப்பற்று இல்லாமையால் அதன் பிறகு கூட தமிழ்த் தலைமைகள் தமக்கு உரித்தான நாட்டைக் கேட்கவில்லை. சா. ஜே. வே. செல்வநாயகம் “எமது முன்னோர் புத்திசாலிகள் ஏனென்றால் அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக ஒரு அரசினைக் கொண்டிருந்தார்கள்” என்று 1976 ல் பாராளுமன்றில் தெரிவித்தார்.
“இழந்த நாட்டை மீட்க பாலஸ்தீனம் போராடுகிறது. நாமோ இருக்கிpன்ற நாட்டை இழக்காதிருக்கப் போராடுகிறோம்” என மா.க. ஈழவேந்தன் பா.உ. தெரிவித்தார் ( ஒரு பேப்பர் 27.11.2008.). வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி 2008 லும் இலங்கைத் தமிழர்;க்கு தனியான ஒரு நாடு இருந்து வருகிறது என்ற உண்மையை தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவலநிலை கண்டு நாட்டுப்பற்றுள்ள இள நெஞ்சங்கள் துடிக்கின்றன. “ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே இந்த நாடும் நமதே”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக