சனி, 28 ஆகஸ்ட், 2010


உறங்காத உண்மைகள் - சேரமான்


வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.

சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது இவர்கள் திண்டாடுவதை அண்மைய நாட்களில் சடுதியாகக் கட்டவிழத் தொடங்கியுள்ள பல்வேறு நிகழ்வுகள் நிதர்சனப்படுத்துகின்றன.

முள்ளிவாய்க்காலில் களமாடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் சிலர், மே 17 வரை புகலிட தேசங்களிலும், தமிழகத்திலும் கடமையாற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் தொலைபேசித் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். எனினும் மே 17ஆம் நாள் காலையுடன் இந்த நிலை சற்றுத் தலைகீழாக மாறியிருந்தது.

அன்று காலையுடன் முள்ளிவாய்க்காலில் நின்ற முக்கிய போராளிகளுடனான வெளித்தொடர்புகள் ஏறத்தாள முடக்கநிலையை எய்தியிருந்ததோடு, ஒவ்வொரு மணித்துளிகளையும் பதற்றத்துடனேயே உலகத் தமிழர்கள் அனைவரும் கழித்த வண்ணமிருந்தனர். அதேநேரத்தில் அன்று முற்பகல் உலகத் தமிழர்களுக்கான செய்தியன்றை வழங்கிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, ‘கடைசி மணித்தியாலங்கள்’ நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டதோடு, ‘கடைசிவரைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்றும் சூளுரைத்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர் தளபதி சூசை அவர்களுடனான தொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், திடீரென அன்று மாலை பிரித்தானியாவின் சணல்-4 தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய கே.பி, ‘ஆயுதங்களை மௌனிப்பதற்கும், அவற்றைக் கீழே போடுவதற்கும்’ தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்திருப்பதாகவும், ‘பிரபாகரனுடன் நான்கு மணிநேரம் கதைத்த பின்னர்’ இந்த முடிவைத் தான் எடுத்ததாகவும் அறிவித்திருந்தார்.

உண்மையில் கே.பி விடுத்த இந்த அறிவித்தல், புகலிட தேசங்களிலும் சரி, தமிழகத்திலும் சரி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆயுதங்களை கீழே போடுவதோ அன்றி சரணடைவது என்பதோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு அல்ல என்பதை முழு உலகமும் நன்கு அறிந்திருந்தது.

1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ரஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கையை தொடர்ந்து, இந்தியப் படைகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கியிருந்த பொழுதும், அது ஒரு வெறும் சம்பிரதாயபூர்வ ஆயுத ஒப்படைப்பாகவே அமைந் திருந்தது.

அதனை விட, தமிழீழ மக்களின் பாதுகாப்பை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்தியப் படைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்று ரஜீவ் காந்தி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த முடிவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்திருந்தார்கள். இது தொடர்பாக சுதுமலைப் பிரகடனத்தில் பின்வருமாறு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்: ‘இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது.

எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங் களாக, இரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் ஈட்டி எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்துக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.

திடீரென கால அவகாசமின்றி எமது போராளி களின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தி அவர்கள் என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்சினைகளை மனம் திறந்து பேசினேன்.

சிங்கள இனவாத அரசில் எமக்கு துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார்.

எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம் பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை.

எமது இலட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.

ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது.’ இவ்வாறான முடிவைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எடுத்தமைக்கான காரணிபற்றியும், இதுவிடயத்தில் ரஜீவ் காந்தி அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பாகவும், ‘போரும் சமாதானமும்’ என்ற நூலில் பின்வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்:

‘அடுத்ததாக, விடுதலைப் புலிப் போராளிகளை நிராயுதபாணிகள் ஆக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் பற்றிப் பேசப்பட்டது. ‘உங்கள் அமைப்பிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. அத்துடன் உங்களது கெரில்லாப் படையணிகளையும் கலைத்துவிடு மாறும் நாம் சொல்லவில்லை. நல்லெண்ண சமிக்கையாகச் சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும்.

இந்திய - இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என சிறீலங்கா அரசையும் அனைத்துலக சமூகத்தையும் நம்பவைக்கும் வகையில் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுவது முக் கியம். தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயற்படும்.

அத்துடன் சிங்கள ஆயுதப் படைகள் போர்நிறுத்தம் பேணியவாறு முகாம்களுக்குள் முடங்கியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?” என்று கூறினார் ரஜீவ் காந்தி.பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாகச் சிந்தித்தபடி இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார் பண்டுருட்டி. “எதற்காகக் கடுமையாக யோசிக்க வேண்டும்.

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் பழுதடைந்த, பாவிக்கமுடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றைக் கையளித்தால் போச்சு” என்றார் பண்டுருட்டி இராமச் சந்திரன். “இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவை எல்லாமே பழுதடைந்த, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள்தான்” என்று கிண்டலாகப் பதிலளித்தார் பிரபாகரன்.“பரவாயில்லையே, அந்தப் பழுதடைந்த ஆயுதங்களில் சிலவற்றைக் கொடுத்து விடுங்கள். பின்பு தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசிடமிருந்து புதிய ஆயுதங்களைக் கேட்டு வாங்கலாம்.” என்றார் அமைச்சர்.தமிழ் மொழியில் நிகழ்ந்த இந்த சுவையான உரையாடலின் அர்த்தத்தை அறிய விரும்பினார் ராஜீவ். அதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் பண்டுருட்டி.

அதை ஆமோதித்தபடி புன்முறுவலுடன் தலையசைத்தார் பிரதம மந்திரி.’தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனத்திலும், தேசத்தின் குரல் எழுதிய ‘போரும் சமாதானமும்’ நூலிலும் குறிப்பிடப்படும் செய்தி ஒன்றுதான்: தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், வெறும் சம்பிரதாய ரீதியிலு மேயே 1987ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கையளிப்பு நிகழ்ந்தேறியிருந்தது என்பதே அது.

பின்னாளில் நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பொழுது ஆயுதக் களைவு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய பொழுது அதற்குப் பதிலளித்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்: ‘எங்கடை ஆயுதங்கள்... புலிகள் வைச்சிருக்கிற ஆயுதங்களும், எங்கடை இராணுவப் படைகளும்... இது மக்களின்ரை சொத்தாகப் பார்க்கிறம். மக்கள் வாங்கித் தந்த சொத்து.

17,000 போராளிகள் தங்களைப் பலிகொடுத்துச் சேர்த்த ஆயுதப் பலம். இதுதான் எங்கட மக்களது பலம். நாங்கள் இந்த ஆயுதங்களைப் பாவிக்கிறம். ஆனால் உரி மையாளர்கள் எமது மக்கள். ஆகவே, எங்கட மக்களுக்குச் சுதந்திரம் கிட்டாமல், கரும்புலிகளைக் கலைக்கச் சொல்லுவதோ, ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம்.’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

உண்மையில் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த மேற்குலக அரசுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடித்தளமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலிமை அமைந்ததே இதற்குக் காரணமாக இருந்தது.

எனினும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமான முறையில் சிங்கள அரசு முறித்துக் கொண்டு, வன்னி மீதான தனது கொடூர இனவழித்தொழிப்பு - நில ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்திய பொழுது, இந் தியாவும், அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய இணைத்தலைமை நாடுகளும், தமிழீழ விடுலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பாகப் பேசத் தொடங்கியிருந்தன.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் இது எந்தவிதத்திலும் ஏற்புடையதாக அமையவில்லை. இந்தியாவினதும், மேற்குலக வல்லரசுகளின் ஆயுதக் களைவு வலியுறுத்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் அடியோடு நிராகரித்ததோடு, சரணாகதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்திருந் தனர். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும் வரை, ஆயுதக் களைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஆயுதக் களைவு - சரணாகதி வலியுறுத்தலை, எவ்வித தயக்கமும் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு சமர்ப்பித்த கே.பி, பின்னர் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார் என்பதை, இறுதிப் போரில் அவர் வெளியிட்ட அறிக்கைகளும், வழங்கிய ஊடகச் செவ்விகளும், தற்பொழுது அவர் வழங்கும் செவ்விகளும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

இதில் ஒருபடி மேலே சென்று கடந்த வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் கே.பி, ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிப்பது தொடர்பான அறிவித்தலை தானே வெளியிட்டதாகவும், இது தொடர்பாக சிறப்புத் தளபதி சூசை அவர்களுடன் மட்டுமே தான் உரையாடியதாகவும் குறிப்பிடுகின்றார்.

அதேநேரத்தில் பிறிதொரு முனையில் பா.நடேசன் அவர்களும், புலித்தேவன் அவர்களும் வெளிநாடுகளுடன் தொடர்பாடல்களைப் பேணியதாகவும் கே.பி குறிப்பிடுகின்றார். முதலில் தமிழீழத் தேசியத் தலைவரும் உரையாடியே ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பான முடிவை தான் எடுத்ததாகக் கூறிய கே.பி, தற்பொழுது இது தன்னால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவு என்பதை ஒப்புக்கொள்கின்றார்.

இறுதிவரை அடிபணியப் போவதில்லை என்றும் தளபதி சூசை அவர்கள் வழங்கிய செவ்வியுடன் இதனை ஒப்புநோக்கும் பொழுது, தளபதி சூசை அவர்களின் ஒப் புதல்கூட இன்றி தன்னிச்சையாக இந்த முடிவை கே.பி எடுத்ததாகவே நாம் கொள்ள முடியும். இதனைவிட, ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பாக கே.பி செவ்வி வழங்கிய ஒருசில மணிநேரங்களில், மக்களைப் பாதுகாப்பது தொடர்பாக சிங்களப் படைகளுடன் பேசுவதற்காக வெள்ளைக் கொடியுடன் சென்ற பா.நடேசன் அவர்கள் நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப் பட்டிருந்தார்.

சிங்களப் படைகளிடம் சரணடைவதற்காகவே பா.நடேசன் அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சென்றார் என்று பல ஊடகங்களில் தவறாகக் குறிப்பிடப்படுகின்ற பொழுதும், உண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே பா.நடேசன் அவர்கள் வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணியாகச் சென்றார் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த உண்மை.

இதுபற்றி முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பின்னர் பிரித்தானியாவின் சண்டே ரைம்ஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதிய மேரி கொல்வின் அம்மையார், தன்னுடன் இறுதிவரை பா.நடேசன் அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், ‘சரணடைதல்’ என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதற்கு இறுதிவரை அவர் மறுத்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

இதேநேரத்தில் ஆயுதங்களை மௌனிப்பது தொடர்பாக கே.பி அவர்களின் அறிவித்தல் வெளியாகிய சில மணிநேரங்களில் பா.நடேசன் அவர்கள் சிங்களப் படைகளால் நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தோடு, அதற்கு முன்னர் எத்தருணத்திலும் கே.பியின் ஆயுத மௌனிப்பு அறிவித்தலை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் எதனையும் பா.நடேசன் அவர்கள் வெளியிடவில்லை.

இதில் நாம் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அதாவது சரணடைபவர்களைப் படுகொலை செய்வது மட்டும் போர்க்குற்றம் ஆகாது. சமாதானம் பேசச் செல்லும் நிராயுபாணிகளைப் படு கொலை செய்வதும் அதற்கு ஒப்பான போர்க்குற்றமே. இந்த வகையில் நிராயுதபாணியாகப் பேசச் சென்ற பா.நடேசன் அவர்களை சிங்களப் படைகள் படுகொலை செய்தமை என்பது ஒரு போர்க்குற்றமே. இதனை சரணாகதி நிலையுடன் ஒப்பிடுவது மிகவும் தவறானது. இதனை விட, ஆயுதங்களை மௌனிப்பதற்காக அறி வித்தலை கே.பி வெளியிட்ட பின்னரும், மே 19ஆம் நாள் இரவு வரை முள்ளிவாய்க்காலில் கடும் சண்டை நடைபெற்றதாக சிங்களப் படைத்துறை தலைமையத்தின் முன்னைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய செய்தி யாதெ னில், ஆயுதங்களை மௌனித்தலும், கீழே போடுதலும் என்ற முடிவு கே.பி என்ற தனிநபரால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும் எவ்வித தொடர்புமே இருக்கவில்லை. இதனைக் கே.பி கூட பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

க.வே.பாலகுமாரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இறுதிக் கணங்களில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த பொழுதும், இதனை அவர்களின் தனிப்பட்ட முடிவாகக் கருத முடியுமே தவிர, தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதல் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ முடிவாக இதனை நாம் கருதிவிட முடியாது.

இதனை சுட்டிக் காட்டியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ, எந்தக் கணத்திலும் சரணாகதி என்ற முடிவைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எடுத்திருக்க மாட்டார் என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில், இறுதிப் போரில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் எவ்விதமான தொடர்பாடல்களையும் கொண்டிருக்காத கே.பி, இறுதிக் கணங்களில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்புகள் இழக்கப்பட்ட நிலையில், தனது தனிப்பட்ட தொடர்புகள் ஊடாகப் போர்க்களத்திலும், புகலிட தேசங்களிலும், தமிழகத்திலும் பெரும் குழப்பத்தை விளைவித்து போராட்டத்தை சிதைத்தார் என்றே நாம் கொள்ள வேண்டும்.

இதற்கு வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தமிழகத் தலைவர்களும், புகலிட தேசங்களில் உள்ள தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களும் இணங்க மறுத்த நிலையில், இவர்களை ஓரம்கட்டி தமிழீழக் கனவை சிதைக்கும் நோக்கத்துடனேயே வி.உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசை அமைப்பதற்கான முடிவை கே.பி எடுத்தார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு நாமெல்லாம் விண்வெளி விஞ்ஞானம் கற்றவர்களாக இருக்கத் தேவையில்லை.

இந்தியாவின் ஒப்புதலுடன் தமிழீழ தேசியத் தலைவர் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து, அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தான் எடுத்த முயற்சியை, வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் குழப்பியதாக கே.பி கூறியிருப்பது, கே.பியும், அவருடன் இணைந்து வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன், வே.மனோகரன், த.சர்வேஸ்வரன் போன்றோர் இறுதிப் போரில் ஏற்படுத்திய குழப்பங்களையே வெளிப்படுத்துகின்றது.

தமிழீழம் இனிமேல் சாத்தியமில்லை என்றும், மக்களுக்கு இது தொடர்பாக விளக்கமில்லை என்றும் தொலைபேசி உரையாடல் ஒன்றில் வி.உருத்திரகுமாரன் கூறியமை தொடர்பான ஒலிப்பதிவு வடிவம் ஒன்று, கடந்த சில நாட்களாக இணையத்தளங்களிலும், மின்னஞ்சல் வாயிலாகவும் உலகத் தமிழர்களை வலம் வந்த வண்ண முள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் அதிபதி என்ற கோதாவில், இவ்வாறு உலகத் தமிழினத்தை ஏமாற்றும் செய்கையில் வி.உருத்திரகுமாரன் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் இயங்கும் தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பினால் இவ்வாரம் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் இப்பத்தியில் எதிர்வுகூறப்பட்டமை போன்று, கே.பியின் நிழல் மனிதர்கள் தற்பொழுது பட்டவர்த்தனமாகக் தொடங்கியுள்ளார்கள்.

இந்த வகையில் இவ்வாரம் டெய்லி மிரர் நாளேட்டிற்கு கே.பி வழங்கப் போகும் செவ்வி, வெளிநாடுகளில் உள்ள அவரது குழுவினர் தொடர்பான மேலும் பல தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்பதை மட்டும் இங்கு உறுதியாக எதிர்வுகூற முடியும். ஏனென்றால் உண்மைகள் ஒருபொழுதும் உறங்கிக் கொண்டிருக்கப் போவதில்லை அல்லவா?

நன்றி: ஈழமுரசு (27.08.2010)

புதன், 25 ஆகஸ்ட், 2010

கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி


நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.”மகள் கதைக்கட்டாம்… “அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள்.

”வழமையான நலஉசாவல்…” தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்….” எல்லாம் முடிய, ”நான் வேற இடம் போறனப்பா….அதுதான் எடுத்தனான்….,இனி எடுத்தால் தான் தொடர்பு….நீங்கள் எடுக்காதீங்கோ….சரி வைக்கிறன் அப்பா….”மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான்.

ஒரு முறை அவள் வீட்டுக்கு வந்து போனபோது அவளது உடமைப்பையிலிருந்த கடிதமும், படமும் அவள் யார் என்பதைப் பெற்றவரும் உடன் பிறப்புகளும் அறிந்து கொண்டார்கள். ”அவளது உணர்வுகள் மதிப்பளிக்க வேண்டும்” அப்பா உடன் பிறந்தோரை மதிப்பளிக்க வேண்டும்” அப்பா உடன் பிறந்தோரை அமைதிப்படுத்தினார். அதன் பின் நிறையக் களங்களில் பங்கெடுத்திருக்கிறாள்.

கடமை அழைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் அவள் போய் வந்தாள். ஆனால், எங்கு நிற்கின்றாளோ அங்கிருந்து எப்படியாவது வீட்டோடு தொடர்பை ஏற்படுத்திவிடுவாள். இது அவளின் அன்பின் வெளிப்பாடு. அதே போல்தான், இன்றும் தான் வேறிடம் செல்வவதாக குறிப்பிட்டிருந்தாள். அப்பா, அதை பெரிதாக எடுக்கவில்லை.

மீண்டும் மகள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அன்று மாலை இரு போராளிகள் அப்பாவைத் தேடி வந்தார்கள். அப்பாவிடம் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அப்பா நம்ப மறுத்தார். ”இன்று நண்பகல் நான் பிள்ளையோடு கதைத்தேன்… அவள் வேறிடம் போவதாக சொன்னாள்…” ஓமய்யா…. கதைத்திருப்பா… ஏனெண்டா மாலைல 3.30 ற்குத்தான் திருகோணமலைக் கடற்பரப்பில் அந்தக் கரும்புலித்தாக்குதல் நடந்தது…” ”தாக்குதலுக்கு அணியப்படுத்தி படகுகள் எல்லாம் கடலுக்கு இறங்கின பிறகுதான் உங்களோட மகள் கதைச்சிருக்கிறா…”வந்தவர்கள் சொன்னார்கள்அப்போதுதான் அப்பாவுக்கு ஓர் உண்மை புரிந்தது. ”தன் குடும்பத்தை காதலிப்பவளால்தான, தாய் தேசத்தின் மீது அன்பு வைக்க முடியும்”


அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்


எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
http://eelavarkural.files.wordpress.com/2010/07/balafamily.jpg?w=300

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.

anton_045

இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.

ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்’ போர்வீரனாகவே களத்தில் இறங்கினார்.

சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.

http://puliveeram.files.wordpress.com/2008/09/king13ed0.jpg

அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒர் தலைமறைவு – கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக அவர் ஒரு ‘தேடப்படும் நபராக’ மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவவேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது.

காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், தேசிய கௌரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக்கொண்டார்.

தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு.பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார்.

இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும், அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளிவானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார்.

தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.

சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார்.

அவரது சில போர்த் தந்திரோபாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.பிரபாகரன் ஒரு கரும வீரர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான தத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார்.

தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. தனது போராட்ட இலட்சியத்தை பிரபாகரன் இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்திலிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டுள்ளனர். தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார்.

ஒரு முகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் அபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று. திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக்கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது.

anton_063

உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.


திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.

போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிற்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார். சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவற்றைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக்கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து.

anton_108

ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவுவகைகளை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்திலிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு. போர்க்கலையில் திரு பிரபாகரன் அபாரமான ஆற்றல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து.

அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ – அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது. தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபாகரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கீனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக்கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது.

மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக்கொண்டார். மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார்.

தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கௌரவிப்பார். வீரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபாகரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது.

துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.‘நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது’ என்று நான் பாலாவிடம் கேட்டேன்.

‘இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்’ என்று பாலா சொன்னார். தனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செயற்படும் போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது.

நீதியானது, நியாயமானது, எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம். ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் தலைவருமாவார்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும் பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக்கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடந்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை.

பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீதுபடிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதி விட முடியாது.

பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக தகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணபெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும், மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார். பிரபாகரன் குடும்பப்பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.
http://puliveeram.files.wordpress.com/2009/10/p3.jpg
பிரபாகரனுக்கு ‘ஓய்வு’ கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார்.

1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா.
1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன்.

http://puliveeram.files.wordpress.com/2009/10/charls1.jpg
முதற் குழந்தையின் பிரசவத்தில் மதிக்கு நான் உதவி செய்தபோது, உரிச்சுப் படைச்சு தோற்றத்தில் மட்டு மன்றி குணாம்சத்திலும் தகப்பனைப் போலவே குழந்தை வளர்ந்து வருமென நான் நினைக்கவில்லை. ஒரே பெண் குழந்தையான துவாரகா படிப்பில் ஆழமான அக்கறையும் பொறுப்புணர்வும் உடையவர்.
http://puliveeram.files.wordpress.com/2009/10/1137493_f496.jpg

பிரபாகரனின் கடைக்குட்டி பாலச்சந்திரன் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லக் குட்டி. அச்சு வார்த்ததுபோல பிரபாகரனின் மறுதோற்றம்.

http://puliveeram.files.wordpress.com/2009/10/1137498_f496.jpg

நான் வன்னியை விட்டு புறப்பட்ட வேளையில் குழந்தை பாலச்சந்திரன் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதனால் அவரது ஆளுமைபற்றி அதிகம் என்னால் சொல்லமுடியாது

-அடேல் பாலசிங்கம்-

ஜூலை 11, 2010 பதிந்தவ

கேணல் ராயு / குயிலன்PDFPrintE-mail
Wednesday, 25 August 2010 08:53
கேணல் ராயு / குயிலன்

அம்பலவாணர் நேமிநாதன்

ஏழாலை, யாழ்ப்பாணம்.

தமிழருக்கு முத்தாய்: 30-05-1961

விடுதலைக்கு வித்தாய்: 25-08-2010

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவை கள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்.கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக் கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமான வரை அவரின்கீழ் செயற்படும் போராளிக ளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொ ள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டு பிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமை ந்தது.

"முடியாது என்றால் முயற்சிக்க வில்லை" என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரய ங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்த வொரு வேலையிலும் முழுத்திருப்தி அடை ந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம் படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட் பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற் பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனத்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத் தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படை யாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந் துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்ட த்திலும் மறைபொருளாக இருந்தது.

இந்தியப் படையினருடனான போர்க் காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவ டிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த "ஜொனி"மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற் புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது.வெடிபொருள் தொகு தியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார்.அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான "பசிலன்" எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந் திருந்தன.யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு "ஓயாத அலைகள்-01" இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறி களையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதை விட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம்.பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப் பாட்டுத் தொகுதிகள் (குசைந ஊழவெசழட) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறை வான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக் கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லிய மாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக் கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணை யையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளி டமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறி யீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கை கள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கிய மான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப் புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்கு வதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண் ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல் வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறி வைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன.ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப் பட்டது.

1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணி யின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படை யணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்தி ருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத் தைப்படையணி,பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந் தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத் தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு,உடை என்று அனைத்து விடயங்களி லும் கவனமெடுத்து நடந்துகொண்டார்.போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை "அப்பா" என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங் கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார்.

நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இட த்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட் சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளு க்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர் வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்ப தற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந் துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியி னையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசி ரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவி டுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். "நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக் கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார் ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக் குகள் சொல்ல முடியாது". இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்பு லித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையி னால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போரா ளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப் போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிரு வரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம்.ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விட யங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார். எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண் டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற் பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்க ளது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வ தாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக் கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொ டிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக் கொண்டி ருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.
அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார்.நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயி ருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண் ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவ ரது உடல்நிலை தளர்ந்திருந்தது.ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றி யநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில் லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட் டங்களை அறிந்துகொள்வா ர்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்கு தல் பிசகியதைக் கேள்விப்ப ட்டராயு அண்ணையே நேரடி யாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத் தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற் கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படை யினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட கேணல் ராயு படைய அறிவியல் தொழி நுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்"

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.