புதன், 25 ஆகஸ்ட், 2010

கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி


நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.”மகள் கதைக்கட்டாம்… “அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள்.

”வழமையான நலஉசாவல்…” தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்….” எல்லாம் முடிய, ”நான் வேற இடம் போறனப்பா….அதுதான் எடுத்தனான்….,இனி எடுத்தால் தான் தொடர்பு….நீங்கள் எடுக்காதீங்கோ….சரி வைக்கிறன் அப்பா….”மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான்.

ஒரு முறை அவள் வீட்டுக்கு வந்து போனபோது அவளது உடமைப்பையிலிருந்த கடிதமும், படமும் அவள் யார் என்பதைப் பெற்றவரும் உடன் பிறப்புகளும் அறிந்து கொண்டார்கள். ”அவளது உணர்வுகள் மதிப்பளிக்க வேண்டும்” அப்பா உடன் பிறந்தோரை மதிப்பளிக்க வேண்டும்” அப்பா உடன் பிறந்தோரை அமைதிப்படுத்தினார். அதன் பின் நிறையக் களங்களில் பங்கெடுத்திருக்கிறாள்.

கடமை அழைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் அவள் போய் வந்தாள். ஆனால், எங்கு நிற்கின்றாளோ அங்கிருந்து எப்படியாவது வீட்டோடு தொடர்பை ஏற்படுத்திவிடுவாள். இது அவளின் அன்பின் வெளிப்பாடு. அதே போல்தான், இன்றும் தான் வேறிடம் செல்வவதாக குறிப்பிட்டிருந்தாள். அப்பா, அதை பெரிதாக எடுக்கவில்லை.

மீண்டும் மகள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அன்று மாலை இரு போராளிகள் அப்பாவைத் தேடி வந்தார்கள். அப்பாவிடம் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அப்பா நம்ப மறுத்தார். ”இன்று நண்பகல் நான் பிள்ளையோடு கதைத்தேன்… அவள் வேறிடம் போவதாக சொன்னாள்…” ஓமய்யா…. கதைத்திருப்பா… ஏனெண்டா மாலைல 3.30 ற்குத்தான் திருகோணமலைக் கடற்பரப்பில் அந்தக் கரும்புலித்தாக்குதல் நடந்தது…” ”தாக்குதலுக்கு அணியப்படுத்தி படகுகள் எல்லாம் கடலுக்கு இறங்கின பிறகுதான் உங்களோட மகள் கதைச்சிருக்கிறா…”வந்தவர்கள் சொன்னார்கள்அப்போதுதான் அப்பாவுக்கு ஓர் உண்மை புரிந்தது. ”தன் குடும்பத்தை காதலிப்பவளால்தான, தாய் தேசத்தின் மீது அன்பு வைக்க முடியும்”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக