மீட்பர் வருவார்
ஆர்ப்பரித்து அலைகடல்கள்
அகமகிழ்ந்து குதிக்க
பூப்படைந்து செடிகொடிகள்
பூரிப்பில் மிதக்க
வியப்படைந்த வானில் மேகம்
மின்னல் ஒளி தெளிக்க
மீட்பனவன் வந்துதித்தான்
மண்ணுயிர்கள் மீட்க
பாவமதும் சாபமதும்
ஒன்றாகப் புணர்ந்து
கோரமெனும் ஓர் மகவை
ஈன்றெடுக்க அதுவோ
வேகமென உருவெடுத்து
மக்கள் பலி கேட்க
ஏகனவர் தன்வாழ்வை
இரையாக்கிக் கொண்டார்
சிறுவயதில் குழந்தைத்தனம்
நிரம்பப் பெற்று இருந்தார்
விடலையிலே விடுக்கப்பட்டக்
கட்டளையை உணர்ந்தார்
தனக்குரிய தோழர்களைத்
திறம்படவே தெரிந்து - ஒரு
பெரும் மக்கள் படைதன்னை
தன்பின்னே இணைத்தார்
பிறருக்காகத் தன்வாழ்வை
பிழிந்தெடுத்துக் கொடுத்தும் - சிலர்
சுயலாப நோக்கோடு
துரோகங்கள் இழைக்க
இவர்நம்பும் உயிர்நண்பன்
பணம் பொருளை வேண்டி - இவர்க்
கெதிரான அரசாங்கம்
தனில் காட்டிக் கொடுத்தான்
பிறக்கையிலே செல்வங்களில்
கொழிக்கவில்லை பிறர்போல்
சிறக்கையிலே உலகினிலே
யாருமில்லை இவர்போல்
உறக்கமில்லை ஓய்வுமில்லை
மக்கள்தொண்டில் வாழ்வு
இறக்கவில்லை மீட்பரவர்
இடர்நீக்க வருவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக