செவ்வாய், 26 ஜனவரி, 2010

தாய்க்கு நிகர் தலைவன்..!!!

தாய்க்கு நிகர் தலைவன்..!!!

நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார்.

இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு... என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். "ஒமண்ணை" என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார்.

பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்து தரவேண்டும்? என்று சொன்னார். போராளிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து துப்பரவு செய்ய ஆரம்பித்தனர். தலைவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்தார். நேரம் பி.ப 2 மணி. தலைவர் சந்திப்புக்களை முடித்து விட்டு ஆயுதங்கள் துப்பரவாக்கும் பகுதிக்கு வந்தார். "பெடியள் சாப்பிட்டியளா?" என்று கேட்டார். "இல்லை அண்ணை வேலை முடியுது ஒரேயடியா முடிச்சுப்போட்டுச் சாப்பிடுவம்" என்று போராளிகள் ஒரு மித்துச் சொன்னார்கள். சரி, என மௌனமொழி பேசியவாறே தனது வீட்டுக்குச் சென்றார்.

சிறிய பெட்டியிற் பேரீச்சம்பழம் எடுத்து வந்தார், போராளிகளின் கைகள் அழுக்கடைந்த நிலையில் இருந்ததை அவதானித்துவிட்டுத் தானே போராளி ஒவ்வொருவருக்கும் பேரீச்சம்பழத்தை ஊட்டிவிட்டார். பின் மாறி மாறி எல்லோருடைய வாய்களையும் பார்த்தபடி சாப்பிட்டு முடிந்தவர்களுக்கு ஊட்டி விட்டார். இவ்விடத்திலிருந்த போராளியருவர் இப்படிச் சொன்னான். "என் தாய்க்கு நிகர் இல்லை என்றிருந்தேன். அண்ணன் வாயில் வைத்த பேரீச்சம்பழம், என் நினைப்பைப் பொய்யாக்கிப் போனது! தமிழுக்காக என் உயிரைக் கொடுத்தாலும்,இக்கடனை, அன்புக்கடனை, என்னால் அடைக்க முடியாது"என ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

காந்தரூபன் அறிவுச்சோலை,

செஞ்சோலை பொறுப்பாளர்.

போராளி, தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழீழம்.

விசாலகன்

கருத்துகள் இல்லை: