புதன், 31 மார்ச், 2010
பிரபாகரன் – பொட்டு அம்மான்; இன்டர்போல் தரும் இனிப்பு செய்தி
பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரையும் தமிழ் அமைப்புகள் தேட ஆரம்பித்துவிட்டன இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லாம சமீபத்தில் புலம்பியிருந்தது நினைவிருக்கலாம். அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ.
சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையை இங்கே தருகிறோம்.
சமீபத்தில் நாம் வைகோவைச் சந்தித்த போது அவர் கூறிய சில தகவல்களும், இந்த கட்டுரையில் உள்ள சில செய்திகளும் ஒத்துப்போவதை உணர முடிந்தது. வைகோவிடம் நாம் பேசியது பற்றி தனியாகத் தருகிறோம். இனி ஜூவி கட்டுரை…
பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!” – இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல… இண்டர்போல் போலீஸ்!
விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள். இதற் கிடையில்,
”பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை… தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்… கைது வாரன்ட்: சென்னை, இந்தியா…” என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட… ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.
இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ”கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டு களைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடி யாமல் போய்விட்டது. பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை!” என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம்.
”ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு ‘குருவி’ என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது. இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார்.
அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது.
அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது பெயர் ‘குருவி’! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு ‘குருவி’ என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை இண்டர்போல் போலீஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது. இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது. இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!” எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
”புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். ஆனால்… அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது! புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்தப் பெயரில் ஒளிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள். போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது. பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்துவிட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம். புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான்.
மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், ‘சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!’ என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும்” என்றார்கள்.
இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்… அதில், ”நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்” என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
”போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்” என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
”புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?” என்று இவர்களிடம் கேட்டால்… ”எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்… இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!” என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக