புதன், 31 மார்ச், 2010




மாவீரர் நினைவு நாள் கொண்டாடுவது ஏன்?

மாவீரர் நினைவு நாள் என்பதைச் சிலர் பிரபாகரனின் பிறந்த நாள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் மாவீரர் நினைவு நாளை கடைப்பிடிக்க பிரபாகரன் உத்தரவிட்டதற்கான காரணம் என்ன?

அதன் பின்னணியில் மறைந்துள்ள தமிழ் மாவீரர்களின் தியாக வரலாறு போன்றவற்றை ‘தினமணி’யில் வெளியாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட தொடரில் பாவைச் சந்திரன் சிறப்பாக விளக்கியுள்ளார்.

leader_20081127003

அந்தக் கட்டுரை:

தமிழகப் பத்திரிகைகளில், நவம்பர் 26-ஆம் நாள், விடுதலைப் புலிகள் தலைவர் பிறந்தநாள் என்றும், அதனைச் சிறப்பாகக் கொண்டாட, புலிகள் புதிய தாக்குதலை நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாயிற்று.

“உண்மையில் பிரபாகரன் எப்போதுமே தனது பிறந்தநாளைக் கொண்டாடியவரல்ல. தான் மட்டுமன்றி மற்றவர்களையும் பிறந்தநாள் கொண்டாட அனுமதித்ததில்லை’ என்கிறார், பழ.நெடுமாறன் (தமிழீழம் சிவக்கிறது பக்-271).

உண்மையில் நடந்ததென்ன?

1989-ஆம் ஆண்டு நவம்பர் 27-இல், மாவீரர் தினம் கொண்டாடவே அனுமதிக்கப்பட்டது. இந்த நாள், விடுதலைப் போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும். இந்த நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த லெப்டினன்ட் கர்னல்கள் விக்டர் ஓஸ்கா, பொன்னம்மான், இராதா, திலீபன், புலேந்திரன், குமரப்பா, சந்தோஷம், பாண்டியன், இம்ரான், ஜானி, மதி, நவம், ரீகன், கிரேஸி போர்க், சுபன், வேணு, சஹா, சூட்டி, ஜாய், குட்டிஸ்ரீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நினைவில் வாழும் புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மணலாற்றுக் காட்டில் பதுங்கியிருந்து போரை நடத்தியபோது பிரபாகரன், இந்த முடிவினை மேற்கொண்டார். இந்த முடிவினைத் தமிழீழமெங்கும் நிறைவேற்றவும் ஆணையிட்டார்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பழ.நெடுமாறனிடம் விவரிக்கையில், இந்திய ராணுவத்துடன் நாங்கள் நடத்திய போரில் எந்த இடத்தில் எங்கள் தோழர்கள் விழுந்தார்களோ, அவர்களை அங்கேயே புதைத்து கல்லறை எழுப்பியிருக்கிறோம். போர்க் காலத்தில் அவர்களின் உடல்களைப் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ ஒப்படைக்க முடியாது போனதால், ஏற்பட்ட முடிவல்ல; இறந்த மாவீரர்களின் விருப்பமும் இதுவே ஆகும்.

இந்திய அமைதிப் படையை எதிர்த்து நடத்திய “ஓயாத அலைகள்’ என்கிற போரில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது இந்த காடே ஆகும். இந்தக் காட்டினை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். எங்கள் தோழர்களுக்கு எந்தக் காடு அடைக்கலம் தந்ததோ, எந்தக் காட்டில் எதிரிகளுடன் போரிட்டு வீரத்தை நிலைநிறுத்தினோமோ, அந்தக் காட்டிலேதான் எங்களைப் புதைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியதில் வியப்பு ஏதுமில்லை. மணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய புலிகள் தாங்கள் எங்கே சென்று போராடி வீரமரணம் அடைந்தாலும் தங்கள் உடலை மணலாற்றுக் காடுகளில்தான் புதைக்க வேண்டும் என்று நேரிலும், எழுத்துமூலமாகவும் எனக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.maveerar thuyilidam

இதுதவிர தமிழீழத்தின் பிற பகுதிகளிலும் மாவீரர்கள் கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைக்கு “மாவீரர் துயிலும் இடங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளன.

மறைந்த தன்னுடைய தோழர்கள் குறித்து வே.பிரபாகரன் கூறியதாக பழ.நெடுமாறன் பதிவு செய்துள்ள வரிகள் ஒவ்வொன்றும் பல்வேறு அர்த்தங்களைச் சுமந்து நிற்கின்றன. அவை:

எமது விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள்.

இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்துக்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.

எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். (தமிழீழம் சிவக்கிறது -பக்.277-278).

talivar

முதன்முதலாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தில் கலந்துகொள்ளவென்று பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி மூவரும் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மட்டக்களப்பு நகரத்துக்கு கொழும்பிலிருந்து சென்றார்கள். அங்கிருந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலுக்குக் கார் மூலம் சென்றனர்.

மக்கள் அமைதிப்படையின் பிடியிலிருந்து விடுபட்டிருந்த நேரம். வழியெங்கும் மக்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எங்கும் புலிகளின் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறந்தன. குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய இவர்களுக்கு இரட்டிப்பு நேரம் பிடித்ததாகவும், கூட்டம் நடைபெறும் இடங்களில் மக்கள் நீண்டநேரம் காத்திருந்ததாகவும் அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் நினைவு நாளில், அதாவது 26-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அடித்ததும், மாவீரர் துயிலும் இடங்களில் கூடி, தளபதிகள் முதல் சுடரை ஏற்ற, மணியோசை முழங்கும். அடுத்து மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், தோழர்கள் என கல்லறைக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்குவார்கள். இது பின்னர் ஒவ்வோர் ஆண்டும் நடைமுறைக்கு வந்தது.

இந்த நாளுக்கு அடுத்த நாள் நவம்பர் 28-ஆம் நாள், விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெண்புலி அனிதாவுக்கு வீர அஞ்சலி வெளியிடப்பட்டது.

வன்னி, மன்னார், யாழ்ப் பிராந்தியங்களில் புலிகளுக்குத் தேவையான உணவு-பொருள்கள்-தளவாடங்கள் சேர்ப்பது என்பது எளிது. தமிழீழத்தின் நிலப்பரப்பில் இரண்டாயிரம் சதுர மைலில் பெரும்பகுதி, தமிழீழத்தில் எல்லை மாவட்டங்களாக கிழக்குப் பிராந்தியத்தைச் சார்ந்ததாகும். இங்கே சிங்களக் குடிகள் மட்டுமன்றி, போலீஸ், ராணுவம் சார்ந்த முகாம்களும் எண்ணிலடங்காத அளவில் உள்ளன.

இத்தகைய சூழலில் புலிகளுக்கு உணவு சேகரிப்பதும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் பெரும் பிரச்னையாக இருந்தது. சிறிதளவு கவனக்குறைவும் ஏற்பட்டாலும் கொரில்லாப் புலிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிடும்.

இந்தக் கத்திமேல் நடக்கிற வித்தையை லெப்டினன்ட் அனிதா மேற்கொண்டு வந்தார். அசாத்திய நிர்வாகத் திறமைகள் மிகுந்த இவர், ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதாயிரம் முஸ்லிம்கள், இரண்டு லட்சத்து எண்பதாயிரம் தமிழர்கள் வாழுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றிவந்த அனிதா 28-11-1988 அன்று

ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தவரால் அடையாளம் காட்டப்பட்டு களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். விசாரணை இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, உயிருடன் இருக்கக்கூடாது என்ற முடிவில் சயனைட் உட்கொண்டு வீரமரணத்தைத் தழுவினார். இவரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் கொரில்லா வீராங்கனை அனிதா ஆவார். அனிதா உள்பட வீரமரணத்தைத் தழுவிய பெண்புலிகளின் எண்ணிக்கை 23 என்றும் அவ்வறிக்கையில் (28-11-1989) குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக