செவ்வாய், 6 ஏப்ரல், 2010
மேஜர் பாவலன்
மேஜர் பாவலன்
தவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்)
தாயின் மடியில் :-17.04.1980
மண்ணின் மடியில் :- 01.02.2009
1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து அங்கு கல்விகற்க வந்திருந்தான்.
7ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய நமது நட்பு போர்க்களம் வரை தொடர்ந்தது. அவன் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி திறமையாகவே செயற்படக் கூடியவன். குறிப்பான நன்றாகப் பாடுகின்ற தன்மை அவனிடம் கூடிப்பிறந்தது எனலாம். அவன் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எமது பள்ளி நினைவுகளை மீட்டுவதற்கு சந்தர்ப்பம் இதுவல்ல என நினைக்கின்றேன். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தாய்ச்சமர்க்கெல்லாம் தலையாக விளங்கியதும் ஆசியாவில் மிக நீண்டது என வரலாறுகளில் பதியப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஜயசுக்குறூய் இராணுவ நடவடிக்கை 1997 மே 13ஆம் திகதி தொடங்கப்பட்டது. இதனால் தமிழரின் நிலங்கள் பல விழுங்கப்பட்டு வன்னியினுடைய ஏறக்குறைய அரைவாசிக்கும் மேற்பட்ட இடம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் சென்று கொண்டிருந்த வேளையில் தான் ஜயசுக்குறூ நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப்புலிகளின் சமர் வலுவடைந்தது.
அந்த நேரத்தில் தான் காலம் என்னையும் ஒரு போராளியாக்கியது. ஆசிய வரலாற்றிலேயே மிக நீண்ட ஒரு யுத்தத்தினை உலகம் வியக்கும் வண்ணம் மரபு வழியாக வாசல்கள் யாவும் அடைக்கப்பட்ட வன்னியிலிருந்து புலிகள் கொண்டு எதிர் கொண்டனர். வன்னியின் நுழைவாயிலாக விளங்குகின்ற ஏ9 வீதியூடாக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு புலிகள் கடும் எதிர்ப்பினை காட்டினார்கள். அதாவது முகாம் வடிவிலான காவலரண்களை அமைத்து படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தத் தொடங்கினர். குறிப்பாக புளியங்குளத்தைத் தாண்ட முடியாது படையினர் தினறியபோதுதான் படையினர் இரகசியமாக டொலர்பாம், நெடுங்கேணி, குழவிசுட்டான், கோடாலிக்கல், வாவெட்டிமலை, கருப்பட்டமுறிப்பு, ஆகிய இடங்களைத் தாண்டி அம்பகாமம் வரை வந்து நின்றனர்.
அதேவேளை மன்னார்மாவட்டத்திலும் ஏற்கனவே எடிபல இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பகுதியூடாக பள்ளமடு, பெரியமடு, பாலம்பிட்டி, பனங்காமம், மூன்றுமுறிப்பு என்று தனது நில ஆக்கிரமிப்புத் திட்டத்தை விஸ்தரித்திருந்தனர். இதனால் மன்னாரிலிருந்து செம்மலை, அளம்பில் வரையான கிட்டத்தட்ட 132 மைல் நீளத்திற்கு தொடர் காவலரண்களை அமைத்துப் புலிகள் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். குறிப்பாக நூறு மீற்றர் தூரத்திற்கு மூன்று காவலரண்கள் என அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவலரணிலும் இரண்டு போராளிகள் வீதம் காவலிருந்தனர்.
இங்கு ஒரு விடயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். மன்னாரில் இருந்து மூன்றுமுறிப்பு வரை இடம் பெற்ற இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக பிரிகேடியர் ஜெயம் அண்ணா அவர்களும், மூன்றுமுறிப்பிலிருந்து - வன்னிவிளாங்குளம் வரையான முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பாக லெப்.கேணல் வீமன் அண்ணா அவர்களும், வன்னிவிளாங்குளத்திலிருந்து அம்பகாமம் வரையான களமுனைக்குப் பொறுப்பாக துரோகி கருணாவும், லெ.கேணல் ராபெட்டும் நியமிக்கப்பட்டிருந்தனர் இருந்தனர். முக்கியமாக ஜயசிக்குறூய் நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து ஏ9 வீதியினைக் குறுக்கறுத்து அமைக்கப்பட்ட இராணுவத்தடுப்பு வேலிகளுக்கு லெப். கேணல் ராபெட் அவர்களே பொறுப்பாக இருந்தார். ஆனால் மாங்குளப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புச் சமர்களின் கட்டளைத் தளபதியாகவும், கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னி வந்து களமாடிய போராளிகளின் கட்டளைத் தளபதியாகவுமே துரோகி கருணா இருந்தான்.
ஆனால் பின்நாட்களில் தான் ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கையின் ஒட்டுமொத்த கட்டளைத்தளபதியாக தானே இருந்ததாக தம்பட்டமடித்தான். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளும் எந்தவிதமான மறுப்பறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை. காரணம் கருணாவின் கருத்துக்கு பதிலளித்து அவனை ஒரு முக்கியப்படுத்த விரும்பவில்லை. அடுத்து அம்பகாமத்திலிருந்து - ஒட்டுசுட்டான் வரையான களமுனைக்குப் பொறுப்பாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் அன்ரன் மாஸ்ரர் அவர்களும், பிரிகேடியர் விதுசா அக்கா அவர்களும், தலைமைவகிக்க. ஒட்டுசுட்டானிலிருந்து - செம்மலை, அளம்பில் வரையான களமுனைக்கு பொறுப்பாக கேணல் லோரன்ஸ் அண்ணா அவர்களும், ஒட்டுமொத்த ஜயசிக்குறூய் இராணுவநடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக போரியல் ஆசான் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் இருந்தனர்.
இது தான் ஜயசிக்குறூய் களமுனையை விடுதலைப்புலிகள் எதிர்கொண்ட விதம். அத்துடன் கிளிநொச்சி 55 கட்டை வரை முன்னேறிய இராணுவத்தினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு பிரிகேடியர் தீபன் அண்ணா அவர்களும், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைத்தளபதிகளான லெப்.கேணல் ராஜசிங்கன் அண்ணா, லெப் கேணல் ராகவன் அண்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிலையில் தான் அம்பகாமத்தில் (பழைய கண்டிவீதி) இராணுவத்தின் முன்னேற்றம் உக்கிரமடைந்தது. காரணம் ஏற்கனவே கிளிநொச்சியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. ஆகவே அம்பகாமம் வரை வந்த படையினர் எப்பாடு பட்டாவது பழைய கண்டிவீதியூடாக பாதையைத் திறந்துவிடத் துடித்தனர். ஆரம்பத்தில் இந்தக் களமுனையில் மாலதி படையணியினரே நின்றிருந்தனர். குறிப்பாக இரண்டு களமுனைகளினூடாகவே படையினரின் முன்னேற்றம் உக்கிரமாக இருந்தது.
ஒன்று ஏ9 வீதி மற்றையது அம்பகாமம் பழைய கண்டிவீதி. மாங்குளம் களமுனையால் நகரமுடியாது என உணர்ந்த படையினர். அம்பகாமம் பகுதியூடாக எப்பாடுபட்டாவது நகர வேண்டும் என பகீரதப் பிரயர்தனம் செய்தனர். ஆகவே இந்தக் களமுனைக்கு உடனடியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணிகள் நகர்த்தப்பட்டனர். ஆகவே நானும் அந்தக் களமுனைக்கு நகர்ந்து களப்பணிகளை ஆற்றிய காலத்தில்தான் ஜயசிக்குறூய் களமுனையின் வெற்றிவிழா நாளும் வந்தது. அதாவது 13.05.98 அந்த நேரத்தில் தான் வன்னி இரண்டு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று மேற்கு வன்னி, இரண்டாவது கிழக்கு வன்னி. மேற்கு வன்னிக்கு பிரிகேடியர் தீபன் அண்ணாவும், கிழக்கு வன்னிக்கு பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களும் கட்டளைத் தளபதிகளாகச் செயற்பட்டனர். அந்தவகையில் நான் ஜயசிக்குறூய் வெற்றி விழாவினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மேற்கு வன்னிக்கு அதாவது மல்லாவிப் பகுதிக்கு அனுப்பப்பட்டேன்.
அந்த நாளும் வந்தது. அன்று மல்லாவியிலிருந்து தமிழீழ தேசியக் கொடி மக்களால் வீதி வழியே ஏந்திச் செல்லப்பட்டு கண்டி வீதியிலே ஏ9 கண்டிவீதியில் உள்ள பழையமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அப்போதைய மாங்குளம் களமுனைத் தளபதியாக இருந்த துரோகி கருணாவிடம் கொடுக்கப்பட்டது. இதன் போது பாவலன் (அஜந்தன்) ஒரு உரையொன்றை நிகழ்தியிருந்தான். அதில் அவன் வெகுவிரைவில் "களமுனைப் போராளிகளுக்கு மாணவர்கள் வந்து தோள் கொடுப்பார்கள்; "என்று கூறியிருந்தான். அப்போது அவன் கூறியதை ஒரு வாரத்தில் நிறைவேற்றியிருந்தான். அவன் தன்னை ஒரு போராளியாக மாற்றியிருந்தான். தனது அஜந்தன் என்ற பெயரை பாவலனாக மாற்றிக்கொண்டு சாள்ஸ் அன்ரனிசிறப்புப் படைப் போராளியாக அம்பகாமம் களமுனைக்கு வந்து சேர்ந்தான்.....
பாவலன் அம்பகாமம் களமுனைக்கு வந்த நேரத்தில் நான் காவலரண்களில் கடமை புரியும் களமுனைப் போராளிகளுக்கும் பின்தளத்திற்குமான இணைப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அவனை நான் அம்பகாமத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் கூட நம்பவில்லை. பள்ளிப்பருவத்தில் ஒன்றான நண்பர்கள் பகைவிரட்டவும் ஒன்றானோம். களமுனைக்கு வந்த பாவலனை அம்பகாமம் கட்டளைத்தளபதி அன்ரன் மாஸ்ரர் அவர்கள் என்னுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார். எனவே நாம் இருவரும் இணைந்து களப்பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தோம்.
இதில் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். நாங்கள் இருவரும் களமுனையிலுள்ள போராளிகளுக்கும் பின்தளப் பகுதிகளுக்குமான இணைப்பாளர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தோம். குறிப்பாக அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் பின்தளப்பகுதியிலிருந்து முன் காவலரணுக்குச் சென்றுவிடுவோம். இதில் பல ஆபத்துக்கள் இருந்தன. அதாவது முன்களமுனையில் உள்ள போராளிகளை விட பின்தளப்பகுதிகளைக் குறிவைத்தே படையினர் தாக்குதல்களை மேற்கொள்வார்கள். இதில் மோட்டார் படையணிகளின் நிலைகள், மற்றும் பின்தள முகாம்கள் என்பன இராணுவ வேவு அணிகளினால் பல தாக்கப்பட்டிருந்தன. ஏனெனில் பின்தளத்தைச் சிதைத்தால் இலகுவாக தாங்கள் முன்னேறிவிடலாம் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
பொதுவாக பதுங்கியிருக்கும் வேவு அணியினரின் தாக்குதலில் பல போராளிகள் வீரச்சாவடைந்தும் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு தாக்குதலில் நானும் பாவலனும் சிக்கியிருந்தோம். 16.08.98 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரம் ஐந்து மணியைத் தாண்டி விடிந்துகொண்டிருந்தது. களமுனையில் பல பணிகள் இருந்தமையால் அன்று விடிவதற்கு முன்னமே நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம். எங்களின் முகாமிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் சென்றால் தான் முன்னணிக் காவலரண்களை அடைய முடியும். ஆனால் வேகமாக நகரவும் முடியாது. அடர்ந்த காடு என்பதனால் மிகநிதானமாக மெதுவாகவே நடந்து சென்றோம். திடீரென ஏதோ இனம்புரியாத சந்தேகம் எம்மிடையே எழுந்தமையால் இருவரும் நிலையெடுத்துத் தயாரானோம். நாம் சந்தேகப்பட்டது சரியாகியது.
அங்கு ஊடுருவியிருந்த வேவு அணி ஒன்று தளம் திரும்பிக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் நான் பாவலனைப் பார்க்க அவனது துப்பாக்கி முழங்கியது. உண்மையில் இருவரும் எப்படிச் சண்டை செய்தோம் என்று தெரியவில்லை. அத்துடன் பின்தளப்பகுதியில் இராணுவம் ஊடுருவி விட்டது என நினைத்த காவலரண் போராளிகள் தாக்குதலை இராணுவ நிலைகள் நோக்கி தொடுக்க பின்தளப்பகுதியில் இருந்த மோட்டார் அணிகள் களமுனைநோக்கி இராணுவம் என நினைத்து மோட்டார் தாக்குதலை இராணுவ சூனியப்பகுதி நோக்கி நடாத்தினர். ஆனால் தாக்குதல் நடைபெற்ற எமது பகுதிகளுக்கு உடனடியாக மேலதிக படையணிகள் வரமுடியவில்லை. காரணம் எங்களால் அவர்களுடனான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் நாம் இருவரும் மட்டுமே சண்டையை நடத்தி முடித்தோம்.
அன்றுதான் பாவலனின் சண்டை வலுவையும், அவனிடமிருந்த ஓர்மத்தையும் பார்த்தேன். அந்த அதிகாலையில் நடந்த சண்டையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட ஒருவன் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிபட்டான். இதுவே பாவலன் கண்ட முதலாவது சண்டையாகும் இந்தச் சண்டை முடிந்த அன்று நள்ளிரவு அதாவது 17.08.98 திங்கட்கிழமை எனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது அன்று நள்ளிரவு 1 மணியிருக்கும் திடீரென்று ஒரு எல்ஃப் ரக வாகனம் ஒன்று நாங்கள் இருந்த பின்தளப்பகுதிக்கு வந்து நின்றது. அதில் வந்தவர்கள் உடனடியாக அந்த வாகனத்தில் ஏறுமாறு கேட்க பாவலன் என்முகத்தைப் பார்த்து "எங்கை மச்சான் சண்டைக்கோ" என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. "ஓம்போல" என்று சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறினேன்.
வாகனம் வேகமாக சென்றது அது சென்ற பாதை எனக்கு பரீட்சயம் என்பதால் அது அம்பகாமத்தின் பின்தளத்திலுள்ள குறிஞ்சி முகாமுக்கு செல்கிறது என உணர்ந்தேன். வாகனம் சடாரென குறிஞ்சி முகாமிலிருந்து 200 மீற்றர் தொலைவில் நின்றது. அப்போது அங்கு பல போராளிகள் மரத்தோடு மரமாக நின்றிருந்தனர். உடனே பாவலன் மச்சான் மீற்றிங் போலகிடக்கு என்றான். அப்போது நான் தாக்குதலுக்கான திட்டம் சொல்லப் போயினம் என்று சொல்லிக் கொண்டு முன் பதுங்குகழியடியைத் தாண்டினேன். அப்போது "என்னப்பன் எப்பிடிஇருக்கிறியள்டா." என்ற சொல் என் செவிகளுக்குள் நுழைந்தது. சட்டெனத் திரும்பினேன். அந்த இருளில் பிரகாசமாகத் தெரிந்த அந்தச் சூரியதேவனின் குரலது. ஆம் எல்லோரும் காணத்துடிக்கும் எம் தேசியத் தலைவரின் குரல். ஓடிச் சென்று கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது.
எனது சந்தோசத்திற்கு அளவேயில்லை. அத்துடன் தேசியத் தலைவருடன் கேணல் ராஜூ அண்ணா, பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தீபன் அண்ணா ஆகியோரும் வருகை தந்திருந்தனர். உணவுண்டபின் தேசியத்தலைவர் எம்மைப் பார்த்து "யாரப்பன் நேற்று வேவு அணியோடை சண்டைபிடிச்ச பிடிச்சது..." என்று சொல்லி முடிப்பதற்குள் நானும் பாவலனும் கையை உயத்திவிட்டோம். பின் எங்களை அழைத்து எங்கள் இருவர் தோள்களிலும் தனது கையைப்போட்டு தோழமை கொண்டாடி எங்களை வாழ்தியதை என்ன வார்த்தைகள் இல்லை. "பல போராளிகள் அண்ணையை காணாமல் வீரச்சாவடைய நான் வந்து ஒரு கிழமைக்குள்ளே அண்ணையைக் கண்டுட்டன்டா" எண்டு பாவலன் அடிக்கடி சொல்லுவான். துரதிஸ்ட வசமாக 20.08.98 நடந்த சண்டையில் நான் படுகாயமடைந்து களமுனையிலிருந்து அகற்றப்பட்டேன்.
அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. நான் களமுனையிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படப் போகின்றேன் என்று. நான் களமுனையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அகற்றப்பட்ட பின் பாவலனே எனது பணிகளையும் சேர்த்துப் பார்த்திருந்தான். நான் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயம் எனக்கு ஒரு மடலை அனுப்பியிருந்தான். அதில் "டேய் நீசுமந்த அந்த இலட்சியத்தை நான் சேர்த்துச் சுமக்கின்றேன். கெதியாய் வா. ரெண்டுபேரும் சேர்ந்து முதன் முதல் 6 ஆமியைக் கொண்டது பொல் 600 பேரைக் கொல்லுவம்டா. டேய் நான் நினைச்சண்டா நீ செத்திட்டாய் எண்டு. நீ விரைவில் சுகமாகி சண்டைக்கு என்னோடை வர ஈழத்தாயைப் பிரார்த்திக்கின்றேன். அன்புடன் - தமிழ்த்தாய் மகன் பாவலன் (அஜந்தன்) என்று எழுதியிருந்தது.
எனக்கு அழுகை வந்தது. இருந்தும் என்ன செய்வது இருவரும் இணைந்து பணியாற்ற கடைசிவரை முடியவில்லை. ஜெயசிக்குறூய் சண்டைக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் போது இவனின் பங்கு முக்கிய மானது. அத்துடன் ஆனையிறவுத் தளம் தாக்கியழிப்பதற்காக பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா தலைமையில் இத்தாவிலில் விடுதலைப்புலிகள் தரையிறங்கிய போதும் இவன் முக்கிய பங்காற்றினான். குறிப்பாக இத்தாவிலில் தரையிறங்கிய பால்ராஜ் அண்ணாவுடன் சென்ற லெப்.கேணல் ராஜசிங்கன், கேணல் நகுலன் ஆகியோருடன் சென்று தலையிறங்கியவன் பாவலன். ஒரு கட்டத்தில் இராணுவம் பால்ராஜ் அண்ணா அவர்களை நெருங்கிய வேளையில் அதைத்தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியைச் சேர்ந்த தென்னவன், கேணல் நகுலன் ஆகியோருடன் இணைந்து பாவலன் தொடராக 9 மணிநேரச் சண்டையில் ஈடுபட்டு தேசியத் தலைவரிடம் பாராட்டுக்களைப் பெற்றான்.
இதன்போது இவனின் சகோதரி ஒன்றையும் பளைப் பகுதியில் நடந்த ஓயாத அலைகள் -03 நடவடிக்கையின் போது நாட்டிற்காக இழந்தான். அதன் பின்னர் இடம் பெற்ற தீச்சுவாலை நடவடிக்கையில் காயமடைந்தான். பின்னர் சமாதான முயற்சியி;ன் போது விடுதலைப்புலிகள் யாழ் சென்ற போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அரசியல் துறையில் இணைக்கப்பட்டு அவர்களுடன் சென்று பணியாற்றினான். இந்தக் காலத்தில் தான் சந்தர்ப்பம் காரணமாக நான் புலம் பெயர் நாடொன்றுக்கு வந்திருந்தேன். அங்கு வந்தபின்னும் அவனது தொடர்பு மீண்டும் எனக்குக் கிடைத்தது. பின்னர் சமாதான முயற்சி முறிவடைந்த பின்னர். வன்னி திரும்பி சாள்ஸ் அன்ரனிச் சிறப்புப் படையின் அரசியல்ப் பொறுப்பாளராகச் செயற்பட்டான். இந்தக் காலத்தில்தான் வன்னிமீதான இறுதிக்கட்ட யுத்தம் தொடங்கியது. இந்த யுத்தத்தின் போது மடு களமுனைக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட பாவலன். 2008 மே மாதம் பண்டிவிரிச்சான் களமுனையில் காயமடைந்தான்.
இதனால் இவனது வலது கால் பாதம் பலத்த சேதம் அடைந்தது. சிறிதுகால மருத்துவ ஓய்வுகளின் பின் மீண்டும் தாயகத்துக்கான தன்பணியைத் தொடர்ந்தான். இந்த நேரத்தில் தான் வன்னி மேற்கின் பெரும்பாகம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் விழுங்கப்பட மக்கள் அனைவரும் வன்னி கிழக்கை நோக்கி நகர்ந்த போது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுதற் பொருட்டு பாவலனை நியமித்திருந்தார். பின்னர் வன்னியின் சுருக்கு இறுகிய போது பாவலன் முகமாலை களமுனையில் எல்லைக்கல்லாக நின்றான். பின்னர் முகமாலைப் பகுதியை விட்டு புலிகள் பின்வாங்கிய போது விசுவமடு சென்று மக்களின் பணிகளை மேற்கொண்டவன். இதன் போது எனக்கு மீண்டும் அவனது தொடர்பு கிடைத்தது. அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக எனக்கு அடிக்கடி கூறுவான். குறிப்பாக மக்கள் படும் அவலங்கள் அவனை வாட்டியது.
இருந்தும் காலத்தின் கட்டாயம் அவனை மீண்டும் களமுனைக்கு செல்ல தூண்டியது. அவன் களமுனைக்கு செல்வதற்கு ஒரு சில நாட்கள் முன்பு (25.01.09) என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தான். அதன்போது அவனிடம் நான் ஜனவரி 31ஆம் திகதி லண்டனில் மாபெரும் கண்டணப் பேரணி நடைபெற இருப்பதாகக் கூறினேன். அதற்கு அவன் களமுனையின் யதார்த்த நிலைமை எதிர்கால செயற்பாடுகள் ஆகியன பற்றி விரிவாகக் கதைத்ததான். அதில் அவன் இறுதியாகப் பேசிய வார்த்தைகள் என் மனதை இன்னும் வாட்டிநிற்கின்றன. "மச்சான் நான் சண்டைக்குப் போறன். ஆனால் திரும்பி வரமாட்டன். ஏனெண்டால் நிலைமை மோசமடா. இனி நீங்களும் தான் ஏதாவது செய்யவேணும். அண்ணையைக் காப்பாற்றோணும் அவருக்கு ஒண்டும் நடக்ககூடாது.
நாங்கள் இல்லாட்டிக்கும் அண்ணைக்கு நீங்கள் துணையாக நின்று தமிழீழ இலட்சியத்தை வெறெடுக்ககோணும் மச்சான். கால் ஒண்டு துண்டாய் ஏலாது முடிந்தால் கரும்புலியாகப் போகலாம் இவங்கள் விடுறாங்கள் இல்லை. சரி மைச்சான் நான் வைக்கிறன். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்." என்று அவன் கூறி முடிப்பதற்குள் எனது கண்கள் கனத்துவிட்டன. அன்று தான் இறுதியாக அவனுடைய குரலைக் கேட்டேன். அதுவும் தொடர்புகள் பலதடவை துண்டிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டு பல சிரமங்களின் மத்தியில் அவனுடன் கதைத்தேன். இதன் பின் பாவலன் களமுனை நோக்கி (01.02.09) நகர்ந்து கொண்டிருந்தபோது எங்கோ இருந்து காலன் வடிவில் வந்த எறிகணை அவனது கழுத்துப்பகுதியைப் பதம்பார்க்க அவன் மேஜர் பாவலனாக எம்மனங்களில் வாழ ஆரம்பித்தான்.
அது மட்டுமல்ல அவன் ஒரு சிறந்த கலைஞனும் கூட தமிழீழப்பாடகர்கள் வசீகரன், நிரோஜன் அவர்கள் பாடிய "ஈரவிழி மூடும் போது ஏனம்மா கண்ணீர்க் கோடு என்ற பாடல்வரிகளுக்கு கதாபாத்திரமாக நடித்து ஒளிவடிவம் கொடுத்தவன் பாவலன்.
இன்று அந்த மாவீரனைப் போல் கிட்டத்தட்ட 37,000 மாவீரர்களது வரலாறும் வித்தியாசமானது. கொள்கை உணர்வு மிக்கது. இந்த மாவீரர்களின் நினைவு நாளில் உங்கள் கல்லறைகளில் எங்களால் தீபங்கள் ஏற்றமுடியாது. உங்கள் கல்லறைகளையும் எங்களால் காண முடியாது. அதுவரை ஒவ்வொரு ஈழத்தமிழர் மனங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள். என்று தாயகம் மீளுகின்றதோ அன்று உங்கள் கல்லறைகள் மீது தீபம் எரியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக