செவ்வாய், 6 ஏப்ரல், 2010
ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்
தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.
பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.
குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், "செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்' என்று அவர் தடுத்தார்.
இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை "செட்டியை'த் தொடர வைத்தது.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.
இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு "தமிழ்ப் புதுப்புலிகள்' (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.
"செட்டி'யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், "என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது - முடிந்தால் அவரைத் திருத்துவேன்' என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.
பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.
அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:
""பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது'' என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு').
அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: ""ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்'' என்றும் கூறுகிறது.
தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், ""அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது'' என்று தெரிவிக்கிறது.
இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், ""கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்'' என்றும் தெளிவுபடுத்துகிறது.
அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ""எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.
இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.
மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்'' என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.
துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.
உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.
இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் "விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.
"ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக' இவர்களின் வெளியீடு கூறுகிறது.
1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் "ஆவ்ரோ' விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.
இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.
பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.
இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.
இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.
போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.
இடுகையிட்டது முதல்மனிதன் ,,,, நேரம் 1:37 am
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக