புதன், 7 ஏப்ரல், 2010


மன்னாரில் பெண் புலிகளின் வீரம்

ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம்.

சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணியினரைச் சந்திப்பதற்காக தான் போகின்றபோது காடுகளிடையே பழைய கட்டடங்களின் அத்திவாரங்களை இடையிடையே காண்பதாகக் கேணல் யாழினி (விதுஷா) சொன்னார். காட்டு வழிகளில் தொடர்பேயில்லாமல் மா போன்ற வீட்டுப் பயன்பாட்டு மரங்கள் நிற்பதாகவும் காலாறுவதற்காக அத்திவாரத்தைக் கைகளால் தட்டியபோது அது சுட்ட செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்ததைக் கவனித்ததாகவும் கூறினார். மாநகரம் ஒன்று காடு மூடிக் கிடக்கின்றது. இதைச் சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ?

***

மாந்தை துறையின் கடலின் அடியில் நங்கூரத்தைப் பாய்ச்சி விட்டுக்கடலின் மடியில் ஆடிக்கொண்டிருந்தது அரபிக் கப்பல் ஒன்று. குதிரைகளை இறக்கிவிட்டு யானைகளை ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்தது அது. மீண்டும் புறப்பட ஒரு திங்களாவது செல்லும். மாந்தையில் இறங்கி உலாவிக் கொண்டிருந்த அராபிய வணிகர்கள் அங்காடிகளில் யானைத் தந்தங்கள், அரிசிக் குவியல்கள் என்பவற்றுக்குச் சமமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த முத்துக்களை வாய்பிளந்து பார்த்தார்கள். இவற்றை வாங்குவதற்கு இன்னும் மூன்று கப்பல்களில் குதிரைகளையும் கம்பள விரிப்புக்களையும் கொண்டு வந்து கொட்டவேண்டும்.

மன்னாரின் கண்டமேடை அடித்தளத்தில் விளையும் முத்துக்களை ஒத்த அழகோடு சுவையான பழங்கள் பாலை மரங்களில் தொங்கிக்கிடந்தன. அவை வணிகர்களின் வாய்களில் நீரை ஊறவைத்தன. பன்னாட்டு வணிகர்களினாலும் உள்நாட்டு வணிகர்களினாலும் மாந்தைத் துறைக்குப் போகும் முதன்மைச் சாலையும் அங்காடித் தெருவும் நிறைந்திருந்தன. வலிமை மிக்க உயர்ந்த கட்டடங்களால் மாந்தையின் அழகு திகழ்ந்தது.

***
முத்துக்கள் விளையும் கடலினடியில் முத்தை விடவும் அதிகமாக உலகை ஈர்க்கின்ற ஒரு பொருள் இருப்பது தெரிந்ததும் கழுகின் கவனம் இங்கே குவிந்தது. மூன்றுதலைச் சிங்கமும் அதற்கே முயன்றது. மன்னாரை விலைபேச வாளேந்திய சிங்கம் புறப்பட்டது. வந்தவர்களை வழிமறிக்க விடுதலைப் புலிகளும் புறப்பட்டனர்.

***
கீர்த்தியின் கொம்பனி 2007 மார்ச்சில் அள்ளிக் கட்டிக்கொண்டு மன்னாருக்குப் போய் இறங்கியதும். 1999 இல் போர் முழக்கம் (ரணகோச) - 03,05 நடவடிக்கைகளை எதிர்கொண்டு முறியடித்த பட்டறிவைக் கொண்ட பழையவர்கள் சிலரும் மன்னாரின் நிறம் தெரியாத புதியவர்கள் பலருமாகப் போயிறங்கி, அகழிகளை வெட்ட மண்வெட்டிகளை ஓங்கி நிலத்தில் போட்டனர். பட்டுத் தெறித்தது மண் அல்ல. மண் வெட்டிதான். ஒன்றுமே இல்லாத சதுப்பு நிலத்தில் இன்று இஸ்ரேல் எழுந்து நிற்கின்றது. வெட்டப்படாத நிலம் வேண்டாம் என்று மன்னாரை விட்டுவிடமுடியவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு அகழிகளை வெட்டிமுடித்து, மரக்குற்றிகளைத் தூக்கிவரப் போயினர். காடு மூடிக்கிடந்த காலம் மூடிக்கிடந்த மாநகரத்தின் காலடியில் காப்பரண்கள் எழுந்தன.

ஆறு மாதங்களின் பின் முதற் சண்டை வந்தது. 2007.09.24 அன்று காலை கட்டுக்கரைக்குளக்கட்டோடு அமைக்கப்பட்டிருந்த லெப். அருமலரின் காப்பரணைச் சிங்களப் படையினர் தாக்கினர். அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய சண்டை மாலை ஐந்து மணிவரை நீடித்தது. பெரும் பலத்தோடு வந்து ஒற்றைக் காப்பரணைத் தாக்கிய சிங்களப் படைகளைக் காப்பரணில் நின்ற ஐவரும் எதிர்த்துக் கொண்டிருந்தனர்.

காயம். அதைக் கட்டு. சுடு. மறுபடி காயம். மீண்டும் கட்டு. தொடந்தும் சுடு. ஐவரின் உயிர்கள் வீழ்ந்த பின்னும் ஆண்மாக்கள் போராடின. அவர்களின் காப்பரண் எதிரிகளிடம் வீழவில்லை. அவர்கள் விரும்பியதும் அதைத்தான்.

***
கட்டுக்கரைக் குளக்கட்டுக் காப்பரணை இலக்கு வைத்து மறுபடியும் வந்த சிங்களப்படைகளை இம்முறை எதிர்கொண்டது கப்டன் கோதையின் அணியினர். முதற்சண்டையில் விதையாகிய தோழியரின் இரத்தமும் தசையும் ஊறி வீரம் ஊறிக்கிடந்த காப்பரண் இந்தமுறை கடுமையாக மோதியது.

சண்டை கடுமையாக நடந்தது. படைத்தளம் ஒன்றைத் தாக்கும் பலத்தோடும் வளத்தோடும் வந்து தனித்த ஒற்றைக் காப்பரணைத் தாக்கிக்கொண்டிருந்த சிங்களப் படையினருக்கு இலக்காகாமல், வெளியேறுவதற்கிருந்த ஒற்றை வழியால் வெளியேறித் தேடிவந்தவர்களை ஏமாற்றியிருக்கலாம். கோதை ஒப்பவில்லை.

'வரமாட்டேன். விடமாட்டேன்'என்று துணிவோடு நின்றவர்கள் வீழ்ந்த பின்னும் காப்பரண் வீழவில்லை. தம்மால் தாக்கப்பட்ட காப்பரணைத் தக்கவைக்க முடியாமல் சிறிலங்காவின் மேன்மை மிகு படையினர் திரும்பிச் சென்றனர்.

2007.09.24 அன்று கட்டுக்கரையில் தொடங்கிய சண்டை காலையில் பாலைக்குழி, மாலையில் பெரியபண்டிவிரிச்சான், இரவு திருக்கேதீச்சரம், மறுநாள் காலை முள்ளிக்குளம், மதியம் உயிலங்குளம் என்று தொடர்கின்றது. என்னதான் நடக்கின்றது மன்னாரில்? நாளாந்த ஏட்டின் தலைப்புச் செய்தியை நாள்தோறும் உருவாக்குகின்ற மன்னார் சண்டைகளின் பின்னணி என்ன?

சிங்கள அரசின் மேன்மை மிகு தரைப்படைகளின் பலம் மேலும் பெருக்கப்பட்டுள்ளதா? முன்பென்றால் மாதம் ஒரு சண்டை. இருபது போராளிகள் வீரச்சாவு, ஐம்பது படையினர் சாவு என்றொரு செய்தி மறுபடியும் நாளேட்டில் வர ஒரு மாதமாவது செல்லும். இப்போது நாளாந்தம் சண்டையென்றால்...?

'வீட்டுக்கு ஒராளைத் தந்திருக்கிறோம். கூட்டிக்கொண்டு போய் என்ன மோனே செய்யிறியள்? அவன் எந்த நாளும் வந்து அடிச்சுக்கொண்டிருக்கிறான். பார்த்துக்கொண்டிருக்கிறியள்"

கோவப்படாதீர்கள் ஐயா கொஞ்சம் பொறுங்கள். விடுதலைப் புலிகளின் போர்முனைப்பையோ, ஒருங்கிணைந்த பலத்தையோ, ராங்கிகளின் நகர்வால், பல்குழல் பீரங்கிகளின் செறிவான சூடுகளால் குலைத்துவிட எந்தச் சிங்கள மேலாண்மைச் சக்திகளாலும் முடியவில்லை. கால்களை, வாலை, தலையை ஓட்டினுள் இழுத்து வைத்துக்கொண்டு இருந்துவிட்டு, எல்லாம் முடிந்ததும் வெளியே தலையை நீட்டும் ஆமையைப் போலே, மண்ணின் மடியில் இருந்து எழும் புலிகள் மறுபடியும் உலாவுகின்றார்கள். இவர்களோடு நேரே மோதுவதைத் தவிர வேறு வழியில்லை.

மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட இனம், உலக வல்லரசுகள் பின்னால் நிற்கும் பலம் இரண்டும் கைகோர்க்க அதிகரித்த மனித, படைக்கல வளத்தோடு எங்களின் ஒற்றைக் காப்பரணை ஒரு படைத்தளமாகக் கருதியே தாக்குகின்றார்கள் ஐயா, சண்டையின் கணக்குப்படி பார்த்தால், வீட்டுக்கொருவராக எழுந்து வந்த உங்களின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இருபது சிங்களப் படையினருக்குச் சமம் ஐயா ஒற்றைக் காப்பரணைத் தாக்க நூறு பேர் அல்லவா வருகின்றார்கள்.

***
சண்டையில் நிற்கும் பிள்ளைகளைப் படம் எடுக்கப் போகின்றேன் என்று சாரதா கிளம்பி மன்னாருக்குப் போய்விட்டார். ஒவ்வொரு காப்பரணையும் படம்பிடித்து அவர்களோடு இருந்து அளவளாவி, உசாவி நிலமை அறிந்தபடி சாரதாவோடு ஒரு அணி நகர்ந்து கொண்டிருந்தது.

அடுத்த காப்பரணுக்குப் போவதற்கு இடையில் ஒரு வெட்டையை ஓடிக்கடக்க வேண்டும். மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருக்கும் போதே சற்றுத் தூரத்தே கனரகச் சுடுகலனின் தொடர் சூடு கேட்கத் தொடங்கியது. ஐயமில்லாமல் இது 50 கலிபரின் அடிதான். எங்களுடைய காப்பரண் ஒன்று சிங்களப் படைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஓட்டமாக ஓடிப்போய் அடுத்த காப்பரணில் புகுந்து இருந்தபோது காது கிழிந்தது. இந்தக் காப்பரணுக்கு ஏறத்தாழ ஐம்பது, அறுபது மீற்றர்கள் தொலைவில் தமது ஐம்பது கலிபர் சுடுகலனை நிலைப்படுத்திய சிங்களப் படையினர், சற்றுத் தள்ளியிருந்த முதன்மைச்சாலை ஒன்றில் சற்று முன்னதாக நீட்டியபடி அவர்களுக்குத் தொந்தரவாக இருந்த எங்களின் அடுத்த காப்பரணை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அருகிலிருக்கும் எதிரிகளைத் தாக்கி, இதிலேயும் ஒரு காப்பரண் இருக்கின்றது என்று காட்டவேண்டிய தேவையில்லைத்தானே. எனினும் விழிப்பாகக் கண்காணிப்பில் நின்றார்கள். இவர்களைக் கண்டதும்

'வாங்கோ வாங்கோக்கா" என்றவாறு உள்ளே இழுத்தெடுத்தார்கள்.
ஒருவர் அடுப்பை மூட்டி, தண்ணீரை ஏற்றினார். மற்றவர் உணவுப் பொதிகளை அவிழ்த்தார்.
'ரீ குடியுங்கோ. சாப்பிடுங்கோக்கா..."
என்னடா இது. முன்னுக்குச் சண்டை நடக்கின்றது. இவர்களை நோக்கி எந்த நேரமும் அது திரும்பலாம்.
'நீங்கள் சாப்பிட்டிட்டிங்களோ?"
'இல்லையக்கா, காலையும் மதியமும் இப்ப உங்களுக்குப் பின்னாலைதான் வந்தது. நீங்கள் சாப்பிடுங்கோ. நாங்கள் பிறகு சாப்பிடுவம்"
'பரவாயில்லை. களைச்சுப் போனீங்கள் சாப்பிடுங்கோ"
சண்டையில் நிற்பவர்கள் என்று இவர்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க, நீண்டதூரம் நடந்து வருகின்றார்கள் என்று அவர்கள்
இவர்களுக்கு விட்டுக்கொடுக்க...
அதற்குள் தேநீர் தயாரிக்கப்பட்டுவிட்டதால் அதைக் குடித்துவிட்டு வந்தவர்கள் புறப்பட,
'கவனமக்கா. பாத்துப் போங்கோ"
என்று நின்றவர்கள் வழியனுப்பினார்கள்

***
மன்னார் போரரங்கில் நிற்கும் 2 ஆம் லெப். மாலதி படையணியின் எல்லா உறுப்பினர்களுக்கும் சத்தான இடைநேர உண்டிகளை வாங்கிக் கொடுக்கும்படி தலைவர் அவர்கள் கேணல் யாழினி (விதுஷா) யிடம் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்தார்.

பங்கிடப்படும்போது வீணாக்கக்கூடாது. மன்னாரின் இந்தத் தொங்கலிலிருந்து அந்தத் தொங்கல் வரை நிற்பவர்களுக்கு எறிகணை வீச்சுக்களுக்குத் தவழ்ந்து, ஆறு கடந்து, சேறு கடந்து, குளம் கடந்து தேடுதல் அணியின் பின்னே போய் கொடுத்து முடியவே ஆறேழு நாளாகும். அதுவரை பழுதாகவும் கூடாது. அண்ணை நல்ல சாப்பாடு கொடுத்துவிட்டிருக்கிறார் என்று வயிறாற, மனம் நிறைய விரும்பிச் சாப்பிடக் கூடிய மாதிரியும் இருக்க வேண்டும். நிறைய யோசித்த யாழினி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு 'சோன்பப்டி" இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக்கொடுத்துவிட்டார். எல்லோர் கைகளுக்கும் போய்ச் சேர்ந்துவிட்டது.

முன்னரங்கைப் பார்வையிட்டவாறு போய்க்கொண்டிருந்த யாழினி அந்தக் காப்பரணில் காலாற அமர்ந்து கதைத்தார். ஒரு புதிய போராளி உசாவத் தொங்கினார்.

'அக்கா, அண்ணை ஏன் எங்களுக்குச் சாப்பாடு குடுத்துவிடவேணும். மூண்டு நேரம் சாப்பாடு தந்தாக் காணும்தானே. அதை இஞ்ச தருகினம்தானே..."
இவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பொதிகளையும் (கண்டோஸ்) தந்து, பற்தூரிகையையும் தந்து விடுபவர்தான் தலைவர் அவர்கள் என்று இவர் விளக்கினார்.

'ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி ஏனக்கா? எங்கட வீட்டிலை நாங்க மூண்டு பிள்ளையள். வசதியான குடும்பந்தான். ஆனா ஒரு பெட்டி வாங்கிவந்து எல்லாருக்கும் தாறதே தவிர, ஒரு ஆளுக்கு ஒரு பெட்டி எண்டு ஒரு நாளுமில்லை. இந்தளவுக்கு வீட்டிலை கூட எங்களைக் கவனிக்கேல்லை. அண்ணையைப் பற்றி இப்பத்தான் விளங்குது" என்றார் அவர்.

***
அண்ணையை நாங்கள் சந்திக்கப் போறம். கேட்டுச் சொல்லுங்கோ"

யாழினியிடம் புதிய போராளிகள் சிலர் கேட்டனர்.
'நாலு பேர் வீரச்சாவடைஞ்சதுக்கு நேற்று நல்லா வாங்கிக் கட்டினனான். இப்ப அவரிட்டைக் கேக்கேலாது. கேட்டால் பேசிப்போடுவார்"
சட்டென அவர்கள் சொன்னார்கள்
'உங்களைத்தானே பேசினவர். எங்களை அவர் பேசமாட்டார். நாங்கள் கேக்கிறமெண்டு போய்க் கேளுங்கோ"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக