ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி டி.அருள்செழியன் ''ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்... 'ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!' என்று. அதுதான் சத்தியம்!'' வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்! சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் 'சிந்தனைச் சுரங்கம்'! விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்... எழுபத்தெட்டாம் வருடம்... லண்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக இருந்தபோதுதான், முதன்முறையாக அடேலைச் சந்தித்தேன். ஒருமித்த கருத்துடைய நாங்கள் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்தோம். தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களிலும், அமெரிக்கக் காலனி ஏகாதிபத்தியத்துக்கு எதிரா கவும் தீவிரமாகப் போராடி வந்தோம். இந்த நிலைமையில்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் என்னைத் தொடர்பு கொண்டார். உலகிலுள்ள பல்வேறு 'கெரில்ல' விடுதலைப் போராட்டங் களைப் பற்றியும், அவற்றின் வரலாறுகளையும் தமிழில் மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த அழைப்பு விடுத்தார். நான் முதன்முதலாக பிரபாகரனை சென்னையில்தான் சந்தித்தேன். அதன் பிறகு, வருடந்தோறும் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தங்கி, போராளி களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித் தேன். அப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு! இத்தனை வருட உறவில், எனக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், எங்களுக் கிடையிலான நல்லுறவில் எப்போதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. காரணம், நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள். விடுதலைப் புலிகளின் சிந்தனை வடிவம், லட்சியம், அரசியல் கொள்கை ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், போரியல் ரீதியான வளர்ச்சியில் இந்த இயக் கத்தை நெறிப்படுத்தித் திட்டமிட்டு, ஆயுதப் போராட்டத்தின் தந்தையாக விளங்குபவர் பிரபாகரன். என்னுடைய அரசியலும், அவரது போரியலும் இணைந்துதான் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது. தலைவர் என்கிற ரீதியில் அவருக்குதான் நாங்கள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொடுக் கிறோம். இந்த இயக்கத்தில் நான் ஒரு தொண்டன். எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா!'' என்கிறார் அழகான சிரிப்புடன். கேள்விகளை முன்வைக்கிறோம். சில கேள்விகளுக்குச் சிரிக்கிறார். சில கேள்விகளைத் தவிர்க்கிறார். ஆனால் எது குறித்துப் பேசினாலும், அதன் வரலாறும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும் கொட்டுகின்றன ''முதன்முதலாக விடுதலைப் புலிகளை ஒரு போராளி அமைப்பாக அங்கீகரித்ததோடு, ஈழப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்த இந்தியா, தற்போது ஈழப் பிரச்னையிலிருந்து விலகி இருப்ப தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?'' ''புலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் கருணையும் காட்டி வந்துள்ளது. அதற்குக் காரணம், ஈழத்தில் இருந்தாலும் இன ரீதியாக நாங்கள் இந்தியர்கள்தான்! எங்களது மூல வரலாறு இந்தியாவிலிருந்துதான் ஆரம்பமாகிறது. எண்பத்து மூன்றாம் வருடம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. அது தமிழ்நாட்டில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆர்ப் பாட்டங்களின் மூலமும், பேரணிகள் மூலமும் தமிழக மக்கள் தங்கள் ஈழத் தமிழர் ஆதரவு உணர்ச்சிகளைக் காட்டினார்கள். அப்போதுதான், ஈழத் தமிழர் பிரச்னை என்பது ஏதோ இலங்கைத் தீவுக்குள் அடங்கும் பிரச்னை அல்ல; அதன் விளைவுகள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை உலகம் உணர்ந்தது. அதன் பிறகு, இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக எமது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், வேறு சில போராளிக் குழுக்களுக்கும் ஆயுதம் கொடுத்து, ராணுவப் பயிற்சி கொடுத்து எங்களை வளர்த்தது இந்தியா. இது வரலாற்று உண்மை! அதை நாங்கள் எப்போதும் மறந்ததில்லை. இப்படியாக எங்களுக்குப் பேருதவிகள் செய்து, எங்களை ஒரு விடுதலை அமைப்பாக அங்கீகாரம் செய்து, திம்பு பேச்சு வார்த்தையில் பங்கு பெறச் செய்ததும் இந்தியாதான். அதன் பிறகு பல்வேறு காரணங்களால், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில முரண்பாடுகள் எழுந்தன (இந்த இடத்தில், கவனத்தோடு சில கடந்த கால நிகழ்வுகளைத் தவிர்க்கிறார்). அதனால், இடைவெளிகள் தோன்றின. சில மனக் கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும், ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.'' ''இந்தியா & புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?'' ''தமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக் காது என்று நாங்கள் உறுதியாக நம்பி னோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந் தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை. தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்று விக்கும் என்ற அச்சத்தினால், எமது லட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத் தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது.'' ''தற்போது இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?'' ''இந்தியா நேரடியாக இந்தப் பிரச்னையில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் ராணுவ நடவடிக்கையை எடுத்துப் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய ராணுவத்தால் நசுக்க முடியவில்லை. மற்றபடி புலிகள் இயக்கம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பியதில்லை. எங்களுக்கு எதிராக யுத்தம் திணிக்கப்பட்ட காரணத்தால்தான் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோமே தவிர, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங் களைத் தூக்குவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை. ஏனென்றால், தமிழீழத்தைத் தாய்நாடாகப் பார்க்கும் நாங்கள், இந்தியாவைத் தந்தை நாடாகத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை நிச்சயம் விரைவில் ஏற்படும் என்பதுதான் எனது கருத்து.'' ''ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?'' ''இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது. நான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள். குமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, 'கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்' என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர். நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்படி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார். மறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார். நான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது. அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்!'' |
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
பிரபாகரன் தந்த சயனைட் குப்பி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக