ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
நில் கவனி
யாரிந்த முத்துக் குமார்?
குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் -
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!
தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் -
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!
யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில்
நெருப்பெய்தி அறிவித்தவன்!
தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ்,
வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் –
திரும்பிப் பார்க்க வைத்தவன்!
குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை - ஈழம் வரையென எரிந்து
கருகி கர்ஜித்தவன்!
தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில்
அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள –
உயிர் மை கொடுத்தவன்!
ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று -
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு –
நினைவு கொள்வோம்!
வித்யாசாகர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக