அன்புள்ள அப்பாவுக்கு! தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து.....
இலக்கம் 109,
இடதுகரை வாய்க்கால்,
இரணைப்பாலை,
வன்னிப் பெருநிலப்பரப்பு,
தமிழீழம்.
மாசி 21, 2009.
அன்புள்ள அப்பாவுக்கு!
வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.
பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.
கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி உடைத்து ஒட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.
அதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும் முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்காப் பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய 'கிளைமோர்'த் தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச்சாவடைந்து விட்டதைப் பற்றியும் புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் 'கிளைமோர்'த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும் கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.
அப்பா! அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறு தினம் சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்ப முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்.
அதன் பின் நிகழ்ந்த கோழைத்தனமான - அப்பாவி மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத்தாக்குதல்களுக்குப் பின்பாகவும் இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.
கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக் கணக்கில் வயது வேறுபாடின்றி காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்பா! பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையால் போய் வந்திருக்கிறோம்? நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும் மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும் பல தடவைகள் போய் வந்த பாதை அது.
ஆனால், இங்கு இப்பவுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையத்தளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள்? சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்றபோது நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.
இப்போ நினைத்தாலும் குலை நடுங்குகிறது - அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ இறந்தோ இருக்கலாம் தானே? அப்பா, எங்களை மாதிரி நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படு காயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்!!
அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இப்படி எத்தனை எத்தனை துன்பியல் நிகழ்வுகள்.... கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத சம்பவங்கள், எமது இனத்தின் வரலாற்றில் கறையாய்ப் படிந்துள்ளன?!
அப்பா! ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின் போது, இலங்கைத்தீவின் தென் பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும் அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும் அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இன்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.
பின், 77ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்த போது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.
அதன் பின், மீண்டும் 83ம் ஆண்டு இனப்படுகொலையின் போது எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட ஒருவாறு தப்பிப் பிழைத்துக் கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடிய முன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும் அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அநுபவக்கதைகள் இன்னும் என் மனப்பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.
இருபதாண்டுகள் முன், 'அன்பு வழி' யில் 'பூமாலை'யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவற் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு, மறந்திருக்காது தானே?
அதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே?
அப்பா! நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு (வீட்டுக்) கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்திடீங்கள். ஆனால் நான்..? இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களிற்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா என்று?கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச படையும் அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனையெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா?
எத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமா?யுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்சனை தீர்ந்து என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி உவ்விடமிருந்து நம்பி நம்பி ஏமாறி இருக்க மாடீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத் தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?
இதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற? ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா?
அப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா? உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தாயாராக இல்லை. ஏனெனில்,பெரும்பாலும் பெற்றோர்கள் விடும் பிழைகளால் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகளைவிடப் பேரப் பிள்ளைகளே என்பது எமது வாழ்வின் பெரும் பட்டறிவு.
அம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை.... இலையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய் நாட்டுக்குச் சின்ன சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.
பதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது 'கிபிர்' தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும் தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.
அதுவும் அம்மாவிடம் 'நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான்'!இப்படியான வேலைகளைப் பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள் தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.
இந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டுகளும் குளறுபடிகளுமாய் அசுரரின் ஆட்சி விரைவில் ஆட்டம் காணப்போகிறது.
பேரினவாதப் பூதம் கக்குகின்ற தீக்கங்குகள் அதனைச் சுற்றியுள்ள கூட்டத்தைப் பொசுக்கத்தான் போகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களினதும் தமிழக மக்களினதும் எழுச்சி மிகு செயற்பாடுகள் நமது விடுதலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.
இனியென்ன, சந்தேகமே வேண்டாம்... அஞ்சி அஞ்சி... அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டது!நம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே!!
சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் அநியாயக் கருவழிப்புகளும் காணாமற் போகச் செய்தல்களும் கடத்தல்களும் கொள்ளையடிப்புகளும் கொத்துக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை!
பட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும் கிளைமோர்த் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும் நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து நெருங்கி வந்து விட்டது.
அதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும் உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலை நிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும் நானும் என்னை எதிர்வரும் "மகளிர் எழுச்சி நாள்" முதல் முழுமையாய் - முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்.
இதுவரை நான் முழு நேரப் பங்காளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும் தானே? நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும் தானே?
என்னைப் பொருத்தவரையில், எமது பெருமதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்கள், ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறியபடி எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கல்வி கவசமாகவும் எமது கல்விக்கு எமது போராட்டம் காப்பரணாயும் இருத்தல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகும். அதற்கு, ஆகக் குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படிப் போராடினாற்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.
அப்பா! இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும் போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா?
அப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா? சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா? நீங்களும் அண்ணாவும் உவ்விடமிருந்து எங்கள் தலைவர், கடந்த சில ஆண்டுகளாகத் தனது மாவீரர் நாள் உரைகளில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி, வழமை போல அல்ல, அதற்கும் மேலாகவும் விரைவாகவும் உங்களுடைய பங்களிப்பை, எந்தெந்த வடிவிலெல்லாம் முடியுமோ அந்தந்த வடிவங்களிலெல்லாம் இயன்றளவு தொடர்ந்து வழங்குங்கோ.
எங்கள் சோகங்களைச் சுகங்களாக்கவும் வலிகளுக்கு நிரந்தர நிவாரணம் தேடவும் ஏமாற்றங்களை முன்னேற்றங்களாக மாற்றவும் உங்களால் முடிந்ததை அவசியமாகவும் அவசரமாகவும் அவதானமாகவும் செய்யுங்கோ.
உங்கிருக்கும் எங்கள் உறவினர் மற்றும் உங்கள் பல்லின நண்பர்களுக்கும் இன்றுள்ள நெருக்கடியான போர்ச் சூழ்நிலையில் நம் தேசத்துக்கு உதவி புரியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, இங்கு நிகழும் தமிழினப் படுகொலையை நிறுத்த உடன் பங்களிக்குமாறு வேண்டிக் கேட்டு ஊக்கமளியுங்கோ.
இந்த உலகத்திற்கு சிறிலங்கா அரசு கூறி வருவது போல நாம் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் எமது போராளிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்லர் என்றும் நாம், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இணைந்து நடாத்துவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் என்றும் அவர்களுக்கு ஓயாது எடுத்துக் கூறுங்கோ.கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அவர்களையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கோ.
அப்போதுதான் எமது போராட்டத்தின் தாற்பரியமும் உண்மை நிலையும் பாராமுகமாக இருக்கும் சர்வதேசங்களுக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஐக்கியநாடுகள் சபையினர்க்கும் மனிதவுரிமைகளுக்காகப் போராட்டம் நடாத்தும் அமைப்பினர்க்கும் தெளிவாகப் புரியும்.அப்பா, அண்ணா! என்றாவது ஒருநாள் எமக்கும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு வரும். அது - சுதந்திர தமிழீழத்திலேயா அல்லது அதற்கு முன்னரேயா என்று நீங்களும் உங்கிருக்கும் எம்மவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் .
இப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர் எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது.
அவவுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் "இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்'' என்று கூறியது அவவுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.
அப்பா, எங்கட முன் வீட்டுக் கற்பகம் மாமி, பக்கத்து வளவு அருமை மாமா, சந்தைக்குப் பக்கத்து வீட்டு சுந்தரம் சித்தப்பாக் குடும்பம், திருநாவுக்கரசுப் பெரியப்பா குடும்பம் என இப்போ எத்தனையோ குடும்பத்தினர் - முழுமையான பங்காளிகள். தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெருவிருட்சமாகியுள்ள எமதியக்கம் தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென என நம்புகிறேன்.
எனக்கும் மனச்சாட்சி இருக்குத் தானே? நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே? தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே? தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது?முதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உட்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமைத் தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பர்த்து உள்ளார்களோ அதனை நிறைவேற்றுவது எனதும் கடைமை அல்லவா?
மேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ.பேரப்பிள்ளைகளுக்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.
வேறென்ன அப்பா?
இதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரதும் நினைவாகவும் வேறும் சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. 'இந்த மண் எங்களின் சொந்த மண்' என்ற பாட்டுக் கேட்கிறது.
அம்மா உட்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன்னுமொரு மடலில் சந்திப்போம்.
நன்றி.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
இப்படிக்கு,
என்றும் உங்கள் அன்பு மறவாது
தேசம் விடுதலை காண உழைக்கின்ற
அன்பு மகள் தேவகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக