செவ்வாய், 30 மார்ச், 2010

மாவீரர்களின் எலும்புக்கூடுகளையும், வரிப்புலிச் சீருடைகளையும் காட்டுமிராண்டித்தனமாக தோண்டியெடுத்து வீதியில் கொட்டும் சிங்கள காடையர்கள்


அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள், தமிழர் வரலாற்று சான்றுகள், தமிழர் கலாச்சார நினைவு சான்றுகள் என அனைத்தையும் அழிப்பதில் மிகக்கவனமாக துரித கெதியில் சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வன்னியில் நேரில்கண்ட சாட்சி ஒருவரின் வாயிலிருந்து வெளிவந்த சில அதிர்ச்சி தரும் ஆனால் தமிழர் மனங்களை கொதித்தெழவைக்கும் சில சம்பவங்களை இங்கே தருகிறோம்.

மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது.

வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைப்பிற்கு தேவையான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது.

உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னமாக இருந்த நினைவுக்கல் அழிக்கப்பட்டிருந்தது.

இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுமிருந்தது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும்.

இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல. அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் (தமிழர்களின்) அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக