செவ்வாய், 30 மார்ச், 2010

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன?


சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம்.

30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர்க்கமுடியாதது என்பது மாத்திரமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்கு தனிவேறான தமிழீழ அரசு என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பும் ஒரே ஒரு மக்களாணை பெற்ற தீர்மானமும் இதுதான்.

இத் தீர்மானத்தின் அரசியல் முக்கியத்துவம் என்ன?

தமிழ் இறைமை (Tamil Sovereignty) தமிழ்த் தேசியம் (Tamil Nationhood) அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணஞ்செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty) இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ; (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின்னெப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான திறமை ஒன்றின் தேவைக்கான இடைவெளியை விட்டுவைக்காத அளவு மதிநுட்பத்துடனும், தந்தை செல்வா அவர்களினால் இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தை செல்வா அவர்களே நேரடியாக இத்தீர்மானத்தை இதன் ஒவ்வொரு சொல்லையும் பகுப்பாய்வுசெய்து இயற்றினார் என்றுA J Wilson எனும் அரசியல் வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கென்றே சிறப்பான முக்கியத்துவம் என்ன?

இதன் சிறப்பு என்னவென்றால், அடுத்தவருடம், அதாவது 1977ம் ஆண்டு, இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது பெருவாரியான வாக்குக்கள் மூலம் இத் தீர்மானத்திற்கு மக்களாணை வழங்கியமை. இதுவே தமிழீழத் தனியரசுக்காக இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாக்களித்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையாக விளங்குகிறது. இதனால் தான் இதை நாம் இன்று மீளவும் ஜனநாயகமும் கருத்துச்சுதந்திரமும் வாழும் ஏனைய நாடுகளில் எடுத்தாளமுடிகிறது.

1977 இற்குப் பின்னர் தமிழீழம் குறித்த மக்களாணையை இலங்கைத் தீவில் ஜனநாயக முறையில் முன்வைக்கமுடியாதவாறு அடக்குமுறைச் சட்டங்கள் (1979 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) கொண்டுவரப்பட்டது மட்டுமல்ல சிறிலங்காவின் அரசியல் யாப்பிலே 6ம் திருத்தம் என்ற திருத்தத்தையும்; 1983 இல் கொண்டுவந்து தனிநாட்டுக்கோட்பாட்டை - அதாவது இந்த ஜனநாயக ரீதியிலான மக்களாணையை - யாப்புரீதியாகவே சிறிலங்கா அரசு மறுதலித்துவிட்டது.

இதனால் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசுக்கான தமது மக்களாணையை மீளவும் ஜனநாயக முறையில் வெளிப்படுத்த முடியாத நிலையே தாயகத்தில் தொடர்கிறது. இன்றுவரை இந்த 77ம் ஆண்டு மக்களாணையே இலங்கைத் தீவிலுள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் முதலாவதாக மட்டுமல்ல இறுதியாகவும் தமிழீழத் தனியரசுக்காக வெளிப்படுத்தக்கூடியதாகவிருந்த மக்களாணையாகும்.

1977ம் ஆண்டுத் தேர்தல் வேறு எந்த வகையில் முக்கியமாகிறது?

இந்த 77ம் ஆண்டுத் தேர்தலே, தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை, இறுதியாக, இராணுவக் கெடுபிடிகள், பாரிய இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் இல்லாத நிலையில் சுதந்திரமான முறையில் நடந்த இறுதித் தேர்தலாகும். இது 1972ம் கொண்டுவரப்பட்ட சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சிக் குடியரசு யாப்பு அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தீவில் நடாத்தப்பட்ட முதலாவது தேர்தல்.

இதனால் இத் தேர்தலிலேயே வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் யாப்பை நிராகரிப்பதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது, ஏனென்றால் தமிழீழ மக்கள் சுதந்திர நாட்டிற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அளித்த மக்களாணை தனது வரைபில் 1972ம் ஆண்டு யாப்பை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதென்றும், சட்டவிரோதமானதென்றும் அதைத் தமிழர்கள் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த வகையில் இன்று வரையுள்ள சிறிலங்காவின் யாப்பை தமிழர்கள் நிராகரித்தமைக்கான சட்டபூர்வமான ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தலுக்கான முக்கியத்துவமும் 77ம் ஆண்டின் தேர்தலுக்கு உண்டு.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு மேலதிக சிறப்பம்சங்கள் வேறு ஏதும் உண்டா?

ஒன்றிரண்டல்ல, பல உண்டு.

தமிழீழத் தனியரசு அமைக்கப்படவேண்டியதற்கான அரசியல், வரலாற்று நியதிகளையும், மனிதாபிமான நியாயப்பாடுகளையும் அமைக்கப்படவேண்டிய தமிழீழ அரசின் பிரஜாவுரிமை அதன் மத சார்பற்ற, சாதி வேறுபாடற்ற தன்மைகள் போன்ற பல அடிப்படை விவகாரங்களை ஒரு சில பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் நுட்பமாகவும் இந்தத் தீர்மானம் தொகுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழீழத்தின் ஒரு பிராந்தியத்தை வேறொரு பிராந்தியமோ அல்லது ஒரு சமய அல்லது சமூகக் குழுவினரை இன்னொரு குழுவினரோ மேலாதிக்கம் செய்யாதிருக்கும் வகையில் ஜனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ அரசு அமையவேண்டும் என்றும் இத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கப்பால், உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குத் தமிழீழத் தாயகத்தின் மீதான உரிமையைக் கூட இந்தத் தீர்மானம் நிறுவுகின்றது.இத் தீர்மானத்துக்கு 77இல் கிடைத்த மக்களாணையை அடிப்படையாகக் கொண்டே பின்னாட்களில் தொடர்ந்த தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது (கிளிநொச்சியில் 2002 சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டில் தேசியத் தலைவர் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

(அளப்பரிய தியாகங்களைப் புரிந்து, தமிழீழ அரசு அமைக்கப்படும் வரை அஞ்சாது போராடுவதற்கான வேண்டுகோளை பொதுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் அனைவருக்கும்;, குறிப்பாக இளைஞர்களுக்கும், இந்தத் தீர்மானம் அறைகூவலாக விடுத்திருந்தது. தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயற்திட்டமொன்றை வகுக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இந்தத் தீர்மானம் பணித்திருந்தது. தமிழீழம் சமதர்ம அரசாக இருக்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கூறுகிறது. (இது அன்றைய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திற்குரிய உலக ஒழுங்கைக் கருத்திற்கொண்டு பார்க்கப்படவேண்டியது.)

தந்தை செல்வா மறைந்த பின்னர் (மீளவும்) உருவான தலைமை தமக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை செயற்படுத்தவில்லை. தமிழீழத்திற்கான அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவதற்கு வடக்கு, கிழக்கில் தெரிவான பிரதிநிகள் செயலாற்றவில்லை. இதனால் இளையோர் வெறுப்படைந்தனர். ‘கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்' என்பது போன்ற வாசகங்களை தெருச் சுவர்களில் எழுதி தமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை மீதான தமது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள். இதைத்தொடர்ந்து இராணுவரீதியாக தமிழ் இளையோர் அந்த மக்களாணைக்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றனர். இதுவே ஆயுதப்போராட்டம் தீவிரமடைவதற்கான அரசியல் அடிப்படையைக் காட்டுகிறது.

இன அழிப்பின் ஆழத்தை இன்று கூட தெளிவாக எம்மவர் எடுத்தியம்பும் ஆற்றலை வளர்த்துக்கொண்டிராத அல்லது வளர்த்துக்கொள்ள ‘விரும்பாத‘ ஒரு சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றே சிங்களப் பெருந்தேசியவாதிகளின் நுட்பமான பண்பாட்டு இன அழிப்பு (Cultural Genocide) மற்றும் திட்டமிட்ட தாயக மண்பறிப்பு (Colonisation)போன்றவற்றை விடுதலைக்கான தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக எடுத்தியம்பியிருக்கிறது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களைப் பொறுத்தவரை சட்டவிரோதமானது என்பதையும் அது தமிழர்களை ஆக்கிரமித்து அடிமைத் தேசிய இனமாக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டு காலனித்துவ சக்திகளுக்குப்பின் சிங்களப் பெருந்தேசியவாதத்தை ஓர் புதிய ஆக்கிரமிப்புச்சக்தியாக இத் தீர்மானம் இனம் காண்கிறது.

இந்த வகையில் இத் தீர்மானத்தின் அரசியற் கனதியானது 34 வருடங்களுக்கு முன்பே எந்த அளவு ஆழமானதாயிருந்ததென்பது இன்றைய இன அழிப்புப் போரொன்றின் (ஈழப்போர்-4) முடிவில் உலக மனச் சாட்சியின் கதவுகளைத் தட்டும் புலம் பெயர் தமிழர்களால் மீள உறுதிசெய்து காட்டப்படவேண்டியதாகிறது.

ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடப்படுவதற்கான ஒரு வெறும் ‘பழைய மைல்கல்' நிகழ்வு மட்டும் அல்ல, தொடர்ந்து வந்த அளப்பரிய அர்ப்பணிப்புகளாலும் எதிரி மட்டுமன்றி பலவேறுபட்ட சக்திகளின் அநீதியான அணுகுமுறைகளாலெல்லாம் எல்லை மீறிக் கனதிப் படுத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான மக்கள் ஆணை.

வட்டுக்கோட்டையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் நந்திக்கடலில் நடந்த சமருடன் முடிவடைந்துவிட்டதாக ராஜபக்ச அரசு தனது 18 மே 2009 ‘வெற்றிப்பிரகடனத்தில்' முழங்கியது. இது எந்த அளவுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஜனநாயக அரசியல் தார்ப்பரியத்துக்கு சிறிலங்கா அரசு அச்சம் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் (இன்னும் பல முக்கியமான கேள்விகள் உள்ளன)

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி 34 வருடங்கள் கடந்து விட்டது. இதற்கு பிறகு எத்தனையோ நல்லது கெட்டது எல்லாம் நடந்து முடிந்து நாங்கள் நன்றாக களைத்துப்போன நிலையில் இருக்கின்றோம். இதை ஏன் இப்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்? முதலில் இருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டுமா?

 சர்வதேச சக்திகள் பலவும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தச் சட்டத்திற்குள் அடக்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இந்த நிலையில் எமது தீர்க்கமான முடிவை ஜனநாயக ரீதியில் எடுத்துரைப்பது அவசியம்.

 முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் ஸ்ரீலங்காவின் உந்துதலில் சில நாடுகள் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேசியக் கோட்பாட்டைக் கைவிட்டுவிட்டு எந்தவிதமான தீர்வையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பதற்கும் இடமுண்டு. Pழளவ உழகெடiஉவ என்றும் Pழளவ டுவுவுநு என்றும் தற்போதைய நிலையை இவர்கள் வர்ணிக்க முயல்கின்ற போதும், ஈழத்தமிழர்களாகிய எமது உண்மை நிலை Pழளவ ளுசi டுயமெயn என்பதை வர்ணிக்க வேண்டும்.

 மேற்குலக நாடுகளின் அரசியல் பண்பாட்டைப் பின்பற்றி மக்கள் ஆணையை முறைக்குமுறை மீள் உறுதி செய்வது, எமது கோரிக்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும்.

 இலங்கைத் தீவின் அரசியலில், பரிட்சயம் இல்லாத தற்போதைய இளைய சமுதாயத்தினர்க்கு எமது தேசிய நிலைப்பாடுக் குறித்த ஒரு அரசியல், சரித்திர அறிவை வளர்க்க இம்முயற்சி உதவும்.

 ஒரு பாரிய இனவழிப்பிற்கு பின்னரும் எமது தேசிய இலக்கை திசை திருப்ப முயலும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய முயற்சி ஒரு எச்சரிக்கையாக அமையும்.

 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மக்களாணைக்குப் பின், பல தசாப்தங்கள் கடந்த நிலையில், குறிப்பாக 1959ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் ஜனநாயக ரீதியாக தமது தமிழீழத்திற்கான ஆணையை கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுகளில் தற்போதுதான் முதன்முறையாக இதற்காக வாக்களிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

 பிறசக்திகளின் நிர்பந்தங்களின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பின்னால் உருவாக்கப்பட்ட முன்னெடுப்புகள் (திம்பு முதல் ஒஸ்லோ வரை) சுயநிர்ணய உரிமை, உள்ளக சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை மாத்திரமே கருத்தில் கொண்டவை. தற்போது, தமிழீழம் மாத்திரமே எமது குறிக்கோள் என்பதை மீளவும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

முள்ளிவாய்க்கால் வரையான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதுகூட, எதுவும் செய்யாது மௌனமாக இருந்த சர்வதேசம், இந்த வாக்கெடுப்பின்மூலம் மட்டும் திரும்பிப் பார்க்கும் என்று நினைக்கின்றீர்களா?

சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சாக்கு போக்கு சொல்ல இனிமேல் வாய்ப்பில்லை. ஸ்ரீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இன அழிப்பு புரிந்ததாக உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. ஐ.நா, மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கொசோவோ மக்கள் போல ஈழத் தமிழர்களும் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று கேட்கும் உரிமை மேலும் வலுப்பட்டுள்ளது.

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்பதுபோல, இத்தருணத்தை தமிழ் மக்கள் தக்க முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம். அண்மையில் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று முடிந்த மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாகவும் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பிரான்ஸ் நாடு இன அழிப்பிற்கு எதிரான நீதிமன்றம் அமைக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்கள் அவை, நாடுகடந்த அரசாங்கம் என்று மூன்று வேலைத்திட்டங்கள் எல்லாம் ஒன்றா அல்லது வெவ் வேறா?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள அரசியல் கோட்பாடுகள்தான் எல்லாவற்றிர்க்குமே அடிப்படை. இது ஒரு தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் ஜனநாயக செயற்பாடேயொழிய, கட்டமைப்பு அல்ல. மக்களவை இந்த தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் இயங்கப்போகும் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்பு.

நாடு கடந்த அரசாங்கம் என்று குறிப்பிடப்படுவது தேச எல்லைகள் தாண்டி அமைகின்ற ஒரு மக்கள் கட்டமைப்பு.

இவையிரண்டும் தமக்கே உரிய முறையில் நிலைக்குத்தாகவும் சமாந்திரமாகவும் தமிழீழம் என்ற ஒரே இலக்குக்காக தமக்குள் முரண்பாடின்றி ஒன்றித்தோ அல்லது ஒன்றினைந்தோ செயற்பட வேண்டியவை.

இவையிரண்டிற்கும் தனித்தனியேயான செயற்தளங்கள் உண்டு. இவ்விரு செயற்தளங்களிலும் தீவிரமாக எமது கொள்கையை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது புலம்பெயர் சூழலில் முழு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மீள உறுதிப்படுத்தப்படுகிறதா?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூல அடிப்படையான மக்களாணைப் பெற்ற சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்பதை மீள் உறுதிப்படுத்துவதே இவ்வாக்கெடுப்பின் குறிக்கோளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக