திங்கள், 19 ஜூலை, 2010

பிரபாகரன் படை - அதிரடித் தளபதிகள் அறிமுகம்
ஆனந்த விகடன் அசத்தல் ரிப்போர்ட்

prabaharan0001.jpg

லங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துவரும் நிலையில், அப்பாவித் தமிழர்கள் அல்லறுகிறார்கள் என்கிற துன்பச் செய்தி நம் இதயத்தை பிளக்கும நேரத்தில், இலங்கை ராணுவத்தை எதிர்த்து வரும் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பின் பலத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது கடந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ‘பிரபாகரன் படை’ என்கிற அலசல் கட்டுரை! நீங்களும் படித்து அறியுங்கள்…

1975, ஜூலை 27.

பிரபாகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டைத் துப்பிய நாள். யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவைக் சுட்டுக் கொன்றது அது!

16 வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவரின் வாழக்கை, இப்போது காடுகளுக்குள், பதுங்கு குழிகளுக்குள், பிரபாகரனையும் அவரது உளவுப் படைத் தளபதி பொட்டு அம்மனையும் கைது செய்யும் நாளில்தான் இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த வாரத்தில் கர்ஜனை செய்துள்ளார் மகிந்தா ராஜபக்ஷே. அவரது ராணுவத்துக்குத் கடந்த 30 ஆண்டுகளாகத் தண்ணி காட்டி வருகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் படை. முன்று நாட்களில் பிரபாகரன் இருக்கும் இடத்தை நெருங்கிவிடுவோம்., 30 நாட்களில் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்று ராணுவம் சொன்னாலும் புலிகளைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் மிரட்டுகின்றன!

தன்னிடம் ராணுவப் பயிற்சி பெற்ற மாத்தையா, கிட்டு, விக்டர், பிலேந்திரன், குமரப்பா ஆகிய 5 பேரைத் தன் தளபதிகளாக பிரபாகரன் அறிவித்ததுதான் இந்த இயக்கத்தின் முதல் அத்தியாயம். அரசியல் பிரிவும் ஆரம்பிக்கப்பட்து. போராளிகள் திரள ஆரம்பித்தார்க்ள. ஆனால், பணமும் ஆயுதமும் இல்லை. கப்பல் கம்பெனி ஆரம்பித்து கடல் வர்த்தகத்தில் இறங்கினார் பிரபாகரன். அடுத்த சில ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கப்பல் கம்பெனிகள் உருவாகின. வர்த்தம் செய்தது பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எடுத்து வரவும் இந்தக் கப்பல்கள் பயன்பட்டன.

இவர்களுக்கான ஆயுத பரிவர்த்தனைகள் அனைத்தையும் இன்று வரை செய்து கொடுப்பதாகச் சொல்லப்படுபவர் கே.பி. என்ற குமரன் பத்மநாபன். ஹாங்காங்கில் கைது, தாய்லாந்தில் கைது என்று செய்திகள் வருமே தவிர, இன்று வரை, இண்டர்போல் உட்பட யார் கையிலும் சிக்காதவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் படித்தவர், தெற்காசியாவில் இருக்கிறார் என்று மையமாகச் சொல்வார்கள். ஆயுத சப்ளையில் புலிகள் இயக்கம் தவிர்த்து, இந்திய அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட பயிற்சியும் ஆயுதங்களும் கூடுதல் பலத்தைக் கொடுத்தன. வட கிழக்கு மாகாணங்கள் என்று சொல்லப்படும் தமிழர் பகுதிக்குள் மொத்தமாக சிங்கள ராணுவத்தைத் தடுக்கும் அளவுக்குப் பலம் வாய்ந்தவர்களாக வலம் வந்தார்க்ள.

இன்றைய நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகள் புலிகள் வசம் உள்ளன. இங்கு அரசாங்கமே இவர்கள் கையில். கல்வி, மருத்துவம், காவல், நிதி ஆகிய முக்கியமான துறைகளின் மூலமாக இப்பகுதியில் நிர்வாகம்செய்கிறார்கள். மூன்று அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. சட்டக்கல்லூரி ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன.
வரதட்சினை கேட்டு கட்டாயப்படுத்தினால் தண்டனை. சாதிவிட்டுச் சாதி கல்யாணம் செய்வதை தடுத்தால் தண்டனை. பள்ளிகளில் புதிய பாடத் திட்டங்கள். அனைத்துமே தமிழ் வழியில்தான் படிப்பு. ஆங்கிலமும் ஒரு மொழியாகக் கற்றுத் தரப்படுகிறது. மருத்துவம் உள்பட அனைத்துப் பாடங்களையும் தமிழில் கொண்டுவந்துவிட்டார்கள். வேளாண்மைப் பண்ணைகளின் மூலம் விவசாயம் நடக்கிறது. தமிழீழ வைப்பகம் என்ற வங்கி கிளிநொச்சியில் இருக்கிறது. இதற்குப் பல்வேறு இடங்களில் 12 கிளைகள் உள்ளன. ஆதரவற்ற பிள்ளைகள் வாழ செஞ்சோலை என்பது வரை தங்கள் பகுதியில் தனி அரசாங்கத்தை அமைத்து அவற்றை தளபதிகளின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த நிர்வாகத்துக்கும் புலிகளின் ராணுவ அமைப்புக்கும் பெரிய தொடர்புகள் எதுவும் இருக்காது. தலைவர், துணைத் தலைவர், பிரிகேடியர், சிறப்பு தளபதி, தளபதி, கர்னல், லெஃப்டினென்ட், இரண்டாம் லெஃப்டினென்ட், போராளி எனப் பதவி அடுக்குகள் கொண்டது புலிகள் அமைப்பு.

தலைவர் பிரபாகரன். துணைத் தலைவராக மாத்தையா இருந்தார். அவருக்குப் பிறகு அந்தப் பதவியில் யாரும் அமர்த்தப்படவில்லை.

பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இன்று இருப்பவர் அரசியல் துறையைத் கவனிக்கும் நடேசன். இலங்கை அரசில் போலீஸ்காரராக இருந்தவர். அப்படியே இடம் மாறி, தமிழீழ காவல் துறையை உருவாக்கியவர். இவர் மனைவி சிங்களப் பெண்ணாம். தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பிறகு அரசியல் விவகாரங்கள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடுத்த முக்கியத்துவம் பொட்டு அம்மனுக்கு. புலிகளின் புலானய்வுப் படை இவர் கையில். ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரனுடன் தேடப்படும் நபர் சண்முகநாதன். சிவசங்கரன் என்பது இவர் பெயர்.

கடற்புலிகளின் தளபதி சூசை, காட்டுக்குள் பிரபாகரன் நினைப்பதைச் கடலுக்குள் சாதிக்கும் சாமார்த்தியச்சாலி. கல்விக் கழகத்தைக் கவனிப்பவர் இளங்குமரன். இவரை பேபி சுப்பிரமணியம் என்றால் தமிழ்நாட்டுக்குத் தெரியும். தமிழகத்தின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அறிமுகமானவர். சமய நூலாக்கப் பிரிவு என்ற அணி, இதுவரை உலக நாடுகளில் உள்ள போர்த் தந்திரங்கள் ஆயுத வரவுகளைப் படித்து புலிகளுக்குப் பாடம் நடத்துகிறது. இது யோகி என்பவரின் பொறுப்பு. நிதித்துறை, தமிழேந்தி என்பவர் வசம்.

பெண் புலிகளின் ராணுவப் பிரிவை விதாஷா, அரசியல் பிரிவை தமிழினி ஆகியோர் நடத்துகின்றனர். இவர்களை அடுத்துதான் மற்ற தளபதிகள் அணி வகுக்கிறார்கள்.

அடுத்த முக்கியத்துவம் பிரசார அணிக்கு. அரசியல் ஆய்வுகளை பாலகுமார் (பழைய ஈராஸ் தலைவர்), ம.திருநாவுக்கரசு ஆகியோர் கவனிக்கிறார்கள். புலிகளுக்கு ஆதரவாக வரும் பத்திரிகைகள், இணையதளங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் பட்டியல் கணக்கில்லாதது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1983ல் இருநது இன்று வரை வரும் ஏடு விடுதலைப் புலிகள். இதன் ஆசிரியராக இப்போது ரவி என்பவர் இருக்கிறார். ஈழ நாதம் நாளிதழ் கிளிநொச்சியில் இருந்து வருகிறது. எரிமலை கலை இலக்கிய மாத இதழ் பிரான்ஸில் இருந்து வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் சிங்களத்திலும் ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியை தமிழன்பன் என்பவர் கவனிக்கிறார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் ஒலிபரப்பாகிறது. சிறு சம்பவம் நடந்தாலும் அதை மறு நிமிடமே இவாகள் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு பரப்புரைப் பிரிவு என்று பெயர்.

புலிகள் சொல்லும் கணக்குப்படி, காடுகளுக்குள் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதிகபட்சம் ஆயிரம் பேருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என்கிறது சிங்கள உளவுத்துறை.

சீருடை அணிக்கு போராளிகள் நீங்கலாக மக்கள் படை அமைப்பு சமீபகாலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தினமும் காலையில் பயிற்சி பெறுகிறார்கள். கட்டை, கம்பு வைத்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு கையில் விவசாயக் கருவியும், இன்னொரு கையில் துப்பாக்கியும் வைத்துத்தான் வியட்நாம் புரட்சி நடந்தது என்ற ஐடியா. இது தங்களைத் தாங்களே பாதுகாக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பது புலிகள் கட்டளை.

தென் இலங்கையையும் தமிழீழப் பகுதியையும் பிரிக்கும் நெடுஞ்சாலையில் அந்தப்பக்கம் சிங்கள ராணுவத்தின் சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட படையும் இந்த பக்கம் புலிகள் தரப்பும் நிற்கின்றன. கடைநிலைப் போராளிகள்தான் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களைத் தாண்டி 20க்கும் மேற்பட்ட சிறப்புப் படையணிகள் காத்திருக்கின்றன. போரில் இங்கு சார்லஸ் ஆண்டனி, இம்ரான் பாண்டியன், மாருதி விக்டர், கிட்டு ஆகியோர் பெயரில் இந்தப் படை அணிகளை பிரபாகரன் உருவாக்கியுள்ளார். பெண் புலிகளின் படைகள் மாலதி, அன்பரசி ஆகிய பெயர்களில் உள்ளன. இவை தவிர விமான எதிர்ப்புப் பீரங்கி, மோட்டார், கவச வாகனம் ஆகிய தனிப்பிரிவுகளும் உள்ளன.

ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க போர்க் கருவி தொழிற்சாலையும், வெடிபொருள், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், ராணுவ விஞ்ஞானக் கல்லூரியும் இருக்கின்றன.

ஆரம்பத்தில் சிங்கள ராணுவத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது கடற்புலிகள். கடந்த இரண்டாண்டுகளாக வான்புலிகள் வெலவெலக்கவைத்து வருகிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் வான வேடிக்கைகளைப் புலிகள் ஆரம்பித்து இன்று வரை 8 இடங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் அனுராதபுரம், வன்னியில் நடத்திய தாக்குதல்களில்தான் உயிரிழப்புகள் அதிகம். சமீபத்தில் சிங்கள ராணுவ தளம், அனல் மின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்திய பிறகுதான் இரண்டு விமானங்கள் அவர்களிடம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாம். புலிகளுக்கு பிரபாகரன் விருதுகள் வழங்கிய நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இது போன்ற சில நிகழ்ச்சிகளில்தான் பிரபாகரனை முக்கியத் தளபதிகளால் கூடப் பார்க்க முடியும்.

தமிழ்ச்செல்வன் மரணத்துக்குப் பின்னால், பிரபாகரனின் இடத்தைக் கண்டுபிடிக்க பகீரத முயற்சிகள் நிகழ்ந்தன. கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி என்ற இடத்தில் திடீர் தாக்குதலை சிங்கள் ராணுவம் நடத்தியது. இங்குதான் பிரபாரகன் வசிக்கிறார். 40 அடி கொண்ட பதுங்கு குழியில் அவர் வீடு இருக்கிறது. வேறு இடங்களுக்குப் போவதாக இருந்தால், இந்த வீட்டில் இருந்து செல்லும் சுரங்கப் பாதை வழியாகத்தான் செல்கிறார் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் சொல்லி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவுக்கு இடம்பெயர்ந்த மக்களைக் காட்டுப் பகுதிக்குள் வந்து பிரபாகரன் பார்த்ததாகச் சில செய்திகள் கூறுகின்றன. மேலும், அவர் கலந்துகொள்ளும் விழாக்கள் அனைத்தும் இரவில்தான் நடக்கிறதாம். அவரைப் பாதுகாப்பதுதான் புலனாய்வுத்துறையின் முக்கியமான வேலை. அவர் ஒரு முகாமுக்கு வருகிறார் என்றால் அங்கு பிரபாகரனிடம் மட்டும்தான் துப்பாக்கி இருக்கும். அவரது பாதுகாப்பு வீரர்கள்கூட வெளியில்தான் நிறுத்திவைக்கப்படுவார்கள்.

பிரபாகரனுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் சார்லஸ் ஆன்டனிக்கு 22 வயது. அவரும் புலிப்படையில் இருக்கிறார். மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகத் தகவல். அடுத்த மகன் பாலச்சந்திரன் அவருடனே இருக்கிறான். பல நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து கடைசியில் கணவருடனே வந்து காட்டில் வாழ்கிறார் மனைவி மதிவதனி.

வரும் 26ம் தேதி பிரபாகரனின் 54வது பிறந்த நாள். அதற்கு மறுநாள் புலிகள் ஆண்டுதோறும் கொண்டாடும் மாவீரர் நாள். அன்று அவர் தமிழீழ மக்களுக்காக வானொலியில் பேசுவார். புலிகளின் அடுத்தகட்டம் என்ன என்று இந்தப் பேச்சில் சொல்லப்படும்.

ரணமாகிப் போன தமிழர்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷேவும் பிரபாகரன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக