மாவீரர் நாளில் வீர வணக்கம்
ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.
ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.
ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு இடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடு இயற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.
மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்
1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
"தமிழின மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக