சாதனைகளும் சவால்களும்
இதற்கு காரணம் இலங்கையில் தமிழர்களது அரசியல் நிலைப்பட்ட இருப்பு, அந்தஸ்த்து பற்றிய தொடர்நிலைப் போராட்டத்தில் இவர் தமது இயக்கத்தை வளர்த்தெடுத்த முறையிலும் அந்த இயக்கம் இந்த உரிமைப் போரில் மேற்கொண்ட அரசியல் நிலைப்பட்டதும் இராணுவ நிலைப்பட்டதுமான நடவடிக்கைகள், தமிழர் உரிமைப் போராட்டத்தின் வேகத்தையும், போக்கையும் நிர்ணயித்துள்ளது மாத்திரமல்லாமல், இவர் தலைமையின் கீழ்வரும் இயக்கத்தையே தமிழர் உரிமைப் போராட்டத்தின் மையப்புள்ளியாக்கும் நிலைமையை ஏற்படுத்தியமையாகும். இந்த செயற்பாட்டிற்கு இருபக்க நிலைப்பட்ட முக்கியத்துவம் உண்டு.
இவர் அரசியல் ஈடுபாடு காட்டிய காலத்தில் ஏறத்தாழ சமநிலையினராக இருந்த குழுமங்கள் ஒன்றில் இவருடன் சேர்ந்துள்ளனர், அல்லது அரசாங்க ஈடுபாடுகளுடன் தொழிற்படுகின்றனர். மறுபுறத்தில் இலங்கைத் தமிழரது அரசியல் இருப்புப் பற்றிய பிரச்சினையை தீர்ப்பதற்கு விடுதலைப்புலிகளுடனேயே பேசவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் அது சர்வதேச கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும் என்கிற நிலைமையும் உருவாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் என்ற முறையில், இந்த உரிமைப்போராட்டத்தை இவர் வழிநடத்திய முறைமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு மட்டத்தில் நோக்கும் போது மிக மிக முக்கியமாவது, உரிமைப்போராட்டம் நடத்தப்பட்ட முறைமையில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் கணிசமான அளவு ஆள்நிலப்பகுதி இவரது இயக்கத்தினரின் மேலாண்மையின் கீழ்வருகின்றது.
இதற்கு தேசிய, சர்வதேசிய அங்கீகாரமும் உண்டு. இந்த வலுநிலையே இதற்கு முன்னர் நடந்த தமிழர் உரிமை பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கும் இப்பொழுது நடப்பனவற்றுக்கும் உள்ள வேறுபாடாக அமைகின்றது. இந்த அரசியல் சாதனைகளின் ஊடாக இவருடைய ஆளுமை பற்றிய வியப்புணர்வு இவரை தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஒரு பிரதான பாத்திரமாக்கியுள்ளது. இவருடைய எதிரிகள் கூட அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றனர். இவர் தமது செய்கைகள் மூலமாக சாதாரண தமிழ் மக்களின் போற்றுதலுக்குரிய ஒரு இனக் குறியீடாக அமைந்துள்ளார். பிரபாகரனின் திறமை அவரது தலைமையின் தகைமையில் தங்கியுள்ளது எனலாம். இதில் அவரது ஒழுங்கமைப்புத்திறன் சிறப்பாக நோக்கப்படல் வேண்டும்.
இலங்கையின் வடக்கில் ஆர்வம் மிக்க இளைஞர் சிலரின் ஒருங்கு கூடலாக அமைந்த இந்த இயக்கம், இன்று தேசிய பிராந்திய சர்வதேச முக்கியத்துவம் உடைய ஒர் இயக்கமாக வளர்ந்து, சில நாடுகளால் தடைசெய்யப்படும் அளவிற்கு சர்வதேச முக்கியத்துவம் கொண்டுள்ள ஒர் நிறுவனமாகியுள்ளது. இந்த ஒருங்கமைப்புத்திறன் பற்றிய எடுகோளுக்கு புறநடையாக கருதப்படத்தக்க சில சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன. எனினும் அப்பிரிவினர் கூட அந்த இயக்கத்தின் பெயரை தமதாக்கிக்கொள்வதன் மூலம் மேற்கூறிய ஒருங்கமைப்புத்திறன் நன்கு தெரியவருகின்றது. இந்த விடயம் பற்றி நோக்கும் பொழுதுதான், இலங்கைத் தமிழர் உரிமைப்போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் எவ்வாறு தொழிற்படுநிலைக்கு வருகின்றது என்பது தெரிய வருகின்றது.
காலனித்துவ ஆட்சிக்காலத்தில் 1924க்கு முதலும் பின் காலனித்துவ சூழலிலும் 1949 இல் தொடங்கப்பெறும் இலங்கைத்தமிழரசு கட்சியின் வருகையுடன் புவியியல் தளமுள்ள ஒரு அரசியற்கோரிக்கையாக பரிணமிக்கத் தொடங்கிய இலங்கைத் தமிழரது அரசியல் போராட்டம், தமிழரசுக்கட்சி காலத்திலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்திலோ, இளைஞர் இயக்க காலங்களிலோ தமிழ் இன அடையாளப் படுத்துகைக்காக தமிழ்த்தேசியம் என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படவில்லை. அது இப்பொழுது குறிப்பாக யுத்த நிறுத்த காலத்திலேயே திட்டவட்டமான ஒர் அரசியல்வாதமாக ஏற்கப்பட்டு சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய நிலையில் தமிழ்த்தேசியம் என்பது முற்றுருவான ஒரு அரசியல் சித்தாந்தமாக இலங்கையில் தொழிற்படுகின்றது.
இதற்கு பிரதான காரணமாக அமைவது இவ் உரிமைப்போராட்டம் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த முறைமையே. இவ்வாறு சில ஈட்டங்களை அடையாளங்காணும் இவ்வேளையில், மேற்கூறிய போராட்ட நடைமுறையின் இரண்டு முக்கிய காரணிகள் கணக்கில் கொள்ளப்படவேண்டியது அவசியமாகும். அவை முறையே வடக்கு கிழக்கின் பாரம்பரியவாசிகளில் ஒரு குழுமத்தினரான (தமிழ் பேசும்) முஸ்லீம்கள் பற்றியதாகும். மற்றையது இந்திய அரசுடனான உறவுச்சீர்கெடுகையாகும். உண்மையில் சற்று நிதானமாக நோக்கும் போது மேற்கூறிய ஈட்டங்களும் அவற்றினூடே வந்த மேற்படி இரண்டு அம்சங்களும் இப்பொழுதுள்ள யுத்த நிறுத்த சூழ் அமைவில் எத்தகைய ஒரு புதிய கட்டத்தை தோற்றுகின்றன என்பதை காட்டுவனவாகும்.
சரித்திரம் என்பது சாகாத் தொடர்கதை. ஆனால் அதனிலும் கட்டங்கள் உண்டு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது 50ஆவது ஆண்டில் தமிழர் உரிமைப்போராட்டத்தினை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார். 50 வயதின் அனுபவங்களும் ஆளுமைப் பதனப்பாடுகளும் இப்புதிய சவால்களுக்கு அவரை இட்டுச் செல்லும். இவ்வேளையில் மேல்நாட்டு நிலை நிற்கும் ஒர் உருவகமே மனதில் மேலோங்கி நிற்கின்றது. பிரபாகரன் 50ஆவது வயதில் தான் வளர்ந்து அழகியாக்கி சர்வதேச கவனத்தை ஈர்த்துக்கொடுத்த தனது மகளை அவளது திருமணத்திற்காக தேவாலய நடுபாதையூடாக அழைத்துச்செல்கின்றார். இந்த மணப்பெண்ணின் மாப்பிள்ளையார்? இது அரசியல் சார்ந்த ஒரு விடயம். வரும் எதிர்காலம் அந்த அரசியலால் தீர்மானிக்கப்படவுள்ளது. தீர்மானிக்கப்படவேண்டும். தேவாலயத்திற்கு வெளியே பல்வேறு ஒலிகள், கூட்டொலிகள் கேட்கப்படலாம்.
ஆனால் தேவாலயத்தின் உள்ளே நடைபெறப்போவதோ 21ஆம் நூற்றாண்டில் மாத்திரமல்ல, இனி அடுத்து வரும் நூற்றாண்டுகளிலும் இலங்கைத் தமிழரின் அடையாளத்தை அவர்களின் இருப்பை, அந்த இருப்பின் தனித்துவங்களை தீர்மானிக்கப்போகும் விடயங்களாகும். இவ்வேளை கட்டுரையின் நீட்சிக்கு இடம்கொடாமல் ஒரு முக்கிய வரலாற்று உண்மையை பதிவு செய்துகொள்ளல் வேண்டும் உரிமைகளுக்கான போராட்டங்கள் அரசியல் நிலைப்பட்டனவே, ஆட்சி அதிகாரங்கள் சம்பந்தப்பட்டனவே, குழும உரிமைகள் பற்றியனவே பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராக தொடங்கும் புரட்சிகள் கூட நிறைவேற்று நிலையில் அரசியல் நடவடிக்கைகளாகவே ஸ்திரப்படுத்தப்படுகின்றன. 50 வயது ஒரு மைல்கல். கடந்த காலத்து அனுபவங்கள், படிப்பினைகள், அடுத்துவரும் காலப்பிரிவின் ஈழத்தமிழரின் விமோசனத்திற்கான பூபாள இசைப்புக்களாக அமையட்டும். அந்த வெற்றிப்பாதையில் பிரபாகரன் நிற்பார். நிற்கவேண்டும்.