ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தனிமனித சொத்தல்ல...

திகதி: 01.08.2010,

"விடுதலைப் புலிகள் என்பது தமிழ் மக்களின் பிள்ளைகளான 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களினதும், பல்லாயிரக்கணக்கான போராளிகளினதும் அர்ப்பணிப்பால் உருவான ஒரு அமைப்பாகும். தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு சொந்தமாகும். சுருக்கமாக சொன்னால் அது தமிழ் மக்களினுடைய சொத்தாகும். உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்பதும் அந்த இயக்கம் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இயக்கம் என்பதும் தமிழ் மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறு அல்ல என்பதும் மேற்குலகத்திற்கு இராஜதந்திர முறைப்படி தெழிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்........"

இனி, விடையத்துக்கு வருவோம்,

கடந்த வாரம் உலக ஊடகங்களில் வெளிவந்த இரண்டு செய்திகள் எமது கவனத்தை கவர்ந்திருந்தன.

முதலாவது அவுஸ்திரேலிய ஊடகங்களில் வெளிவந்த செய்தி. அதன் சாரம் இலங்கையில் இருந்து அவஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி வரும் தமிழர்கள் இரத்தக் கறை படிந்தவர்கள் அல்ல என்பதாகும். அதாவது தமிழர்களை இரத்தக்கறை படிந்தவர்கள்- படியாவர்கள் என்ற இரட்டை அணுகுமுறையில் பாகுபடுத்தும் போக்கு இந்த ஊடகங்களிடம் காணப்பட்டது.

இரண்டாவது செய்தி கனேடிய ஊடகங்களில் வந்தது.அவற்றின் சாரம் கனேடிய கடற்பரப்புக்குள் 200க்கும் மேற்பட்ட இலங்கைக் கள்ளக் குடியேற்றக் காரர்களைக் கொண்ட கப்பல் ஒன்று நுழைந்திருக்கிறது.அதில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதாகும்.இதிலும் தமிழர்களை கள்ளக் குடியேற்றக்காரர்கள் விடுதலைப்புலிகள் என்று தரம் பிரிக்கும் இரட்டை அணுகுமுறையே பேணப்பட்டது.

மேற்குலக நாடுகள் பொதுவாக விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திருந்தாலும் பல நாடுகள் தங்களது நாட்டில் அரசியல் தஞ்சம் கோரும் தனிப்பட்ட ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர் என்ற ஒரே காரணத்தக்காக நிராகரிக்கவோ அவர்களை நாடுகடத்தவோ முயலவில்லை. இந்த விடயத்தில் பல நாடுகள் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடித்தன.

ஆனால் தற்போது பல நாடுகளில் இந்த நிலை மாறி விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் வேறுபடுத்தப் பார்க்கும் இரட்டை அணுகுமுறையை ஒரு பொது வழக்கமாக கொள்ளும் போக்கு தலைதூக்கியுள்ளதுடன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களது அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கும் வழக்கமும் நடைமுறை படுத்தப்படுகிறது

ஐரோப்பாவில் இலங்கை அகதிகள் விவகாரங்களுக்காக வதாடும் வழக்கறிஞர்களின் பொதுவான கருத்து, 'விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் பலவீனமடைந்து சிறு குழுவாக மாறிவிட்டதென்றும் அது புலம்பெயர்ந்த நாடுகளில் வன்முறையில் ஈடுபடும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஐரொப்பிய நாடுகள் கருதுவதே இந்த இறுக்கத்தக்கு காரணம் என்பதாகும்.

உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்பதும் அந்த இயக்கம் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இயக்கம் என்பதும் தமிழ் மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறு அல்ல என்பதும் மேற்குலகத்திற்கு இராஜதந்திர முறைப்படி தெழிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் இன்று வரை விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்திய நடைமுறைக்கு எதிரான சட்ட ரீதியான இராஜதந்திர ரீதியான செற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இதற்கு எதிரான சட்ட நவடிக்கைளை எடுப்பதற்கு சிலர் முன் வந்த போதும் பின் வந்த பொறுப்பான நபர்கள் அதற்கு இடையூறாக இருந்தார்களேயன்றி அதை தொடர முன்வரவில்லை.

விடுதலைப்புலிகள் மீதான அவதூறுகள் மற்றும் தடைக்கு எதிரான பரப்புரைகள் மற்றும் சட்ட நடவடிக்கைளை துறைசார் ரீதியாக எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் மீதான தடையும் அவர்களை பயங்கரவாத பட்டியலில் இட்டதுமே முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கும் தமிழர் தாயகத்தில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்கும் அடிப்படை என்பதையும் விடுதலைப் புலிகளின் பலமே தமிழ் மக்களை சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறையில் இருந்து பாதுகாத்தது என்பதை மேற்குலகு உணர்ந்து கொள்ளும் விதத்தில் ஆதார பூர்வமான, சட்டபூர்வாமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

இதற்கு முதலில்,

விடுதலைப் புலிகளை தனிச் சொத்தாக நினைக்கும், உரிமை கொண்டாடும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகள் என்பது தமிழ் மக்களின் பிள்ளைகளான 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களினதும், பல்லாயிரக்கணக்கான போராளிகளினதும் அர்ப்பணிப்பால் உருவான ஒரு அமைப்பாகும். தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு சொந்தமாகும். சுருக்கமாக சொன்னால் அது தமிழ் மக்களினுடைய சொத்தாகும். இந்த சொத்தை ஜனநாயக ரீதியாக பாதுகாப்பதும் இதை பாதுகாப்பதற்காக தங்களது இளமை வாழ்வை அர்ப்பணித்த அனைவரினதும் பாதுபாப்பிற்கும், இருப்பிற்கும், சுய மரியாதைக்கும் உரிய உத்தரவாதம் கொடுப்பதும், அதற்கான சட்ட ரீதியான உதவிளைச் செய்து கொடுப்பதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

"தமிழினம் பரிதாபத்திற்குரிய இனமாக இருப்பதை விருப்பவில்லை"

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் -