வியாழன், 1 ஜூலை, 2010

தலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்


விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள்,நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள்அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்தஉண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறைவாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான்,பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…


தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக்கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டியமனிதர்!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டுஅக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும்கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார்அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை,சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில்தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர்என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ்நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டுவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும்மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தரமாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப்பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம்பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோதுபிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும்இதில் இருக்கிறேன்.”

”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும்இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும்பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான்இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபாமுன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்குமுதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப்புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன்முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம்இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றிஅனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்றவார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரியபழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம்பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன்கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன்எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்”என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்டமக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாகஅறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்தியராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே,ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்துபிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம்வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன்அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாகஅமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகிஇருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி,பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி.இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படிஇருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்றமுடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்கவேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்கமாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர்பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிடஉத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாகஇருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக்கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

விகடன்

சாதனைகளும் சவால்களும்


தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 50 வயதினர் ஆவதென்பது இன்றைய தென்னாசிய சூழலில் முக்கியமான ஒரு பேசுபொருள் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவிடயமாகும்.

இதற்கு காரணம் இலங்கையில் தமிழர்களது அரசியல் நிலைப்பட்ட இருப்பு, அந்தஸ்த்து பற்றிய தொடர்நிலைப் போராட்டத்தில் இவர் தமது இயக்கத்தை வளர்த்தெடுத்த முறையிலும் அந்த இயக்கம் இந்த உரிமைப் போரில் மேற்கொண்ட அரசியல் நிலைப்பட்டதும் இராணுவ நிலைப்பட்டதுமான நடவடிக்கைகள், தமிழர் உரிமைப் போராட்டத்தின் வேகத்தையும், போக்கையும் நிர்ணயித்துள்ளது மாத்திரமல்லாமல், இவர் தலைமையின் கீழ்வரும் இயக்கத்தையே தமிழர் உரிமைப் போராட்டத்தின் மையப்புள்ளியாக்கும் நிலைமையை ஏற்படுத்தியமையாகும். இந்த செயற்பாட்டிற்கு இருபக்க நிலைப்பட்ட முக்கியத்துவம் உண்டு.

இவர் அரசியல் ஈடுபாடு காட்டிய காலத்தில் ஏறத்தாழ சமநிலையினராக இருந்த குழுமங்கள் ஒன்றில் இவருடன் சேர்ந்துள்ளனர், அல்லது அரசாங்க ஈடுபாடுகளுடன் தொழிற்படுகின்றனர். மறுபுறத்தில் இலங்கைத் தமிழரது அரசியல் இருப்புப் பற்றிய பிரச்சினையை தீர்ப்பதற்கு விடுதலைப்புலிகளுடனேயே பேசவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் அது சர்வதேச கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும் என்கிற நிலைமையும் உருவாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் என்ற முறையில், இந்த உரிமைப்போராட்டத்தை இவர் வழிநடத்திய முறைமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு மட்டத்தில் நோக்கும் போது மிக மிக முக்கியமாவது, உரிமைப்போராட்டம் நடத்தப்பட்ட முறைமையில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் கணிசமான அளவு ஆள்நிலப்பகுதி இவரது இயக்கத்தினரின் மேலாண்மையின் கீழ்வருகின்றது.

இதற்கு தேசிய, சர்வதேசிய அங்கீகாரமும் உண்டு. இந்த வலுநிலையே இதற்கு முன்னர் நடந்த தமிழர் உரிமை பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கும் இப்பொழுது நடப்பனவற்றுக்கும் உள்ள வேறுபாடாக அமைகின்றது. இந்த அரசியல் சாதனைகளின் ஊடாக இவருடைய ஆளுமை பற்றிய வியப்புணர்வு இவரை தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஒரு பிரதான பாத்திரமாக்கியுள்ளது. இவருடைய எதிரிகள் கூட அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றனர். இவர் தமது செய்கைகள் மூலமாக சாதாரண தமிழ் மக்களின் போற்றுதலுக்குரிய ஒரு இனக் குறியீடாக அமைந்துள்ளார். பிரபாகரனின் திறமை அவரது தலைமையின் தகைமையில் தங்கியுள்ளது எனலாம். இதில் அவரது ஒழுங்கமைப்புத்திறன் சிறப்பாக நோக்கப்படல் வேண்டும்.

இலங்கையின் வடக்கில் ஆர்வம் மிக்க இளைஞர் சிலரின் ஒருங்கு கூடலாக அமைந்த இந்த இயக்கம், இன்று தேசிய பிராந்திய சர்வதேச முக்கியத்துவம் உடைய ஒர் இயக்கமாக வளர்ந்து, சில நாடுகளால் தடைசெய்யப்படும் அளவிற்கு சர்வதேச முக்கியத்துவம் கொண்டுள்ள ஒர் நிறுவனமாகியுள்ளது. இந்த ஒருங்கமைப்புத்திறன் பற்றிய எடுகோளுக்கு புறநடையாக கருதப்படத்தக்க சில சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன. எனினும் அப்பிரிவினர் கூட அந்த இயக்கத்தின் பெயரை தமதாக்கிக்கொள்வதன் மூலம் மேற்கூறிய ஒருங்கமைப்புத்திறன் நன்கு தெரியவருகின்றது. இந்த விடயம் பற்றி நோக்கும் பொழுதுதான், இலங்கைத் தமிழர் உரிமைப்போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் எவ்வாறு தொழிற்படுநிலைக்கு வருகின்றது என்பது தெரிய வருகின்றது.

காலனித்துவ ஆட்சிக்காலத்தில் 1924க்கு முதலும் பின் காலனித்துவ சூழலிலும் 1949 இல் தொடங்கப்பெறும் இலங்கைத்தமிழரசு கட்சியின் வருகையுடன் புவியியல் தளமுள்ள ஒரு அரசியற்கோரிக்கையாக பரிணமிக்கத் தொடங்கிய இலங்கைத் தமிழரது அரசியல் போராட்டம், தமிழரசுக்கட்சி காலத்திலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்திலோ, இளைஞர் இயக்க காலங்களிலோ தமிழ் இன அடையாளப் படுத்துகைக்காக தமிழ்த்தேசியம் என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படவில்லை. அது இப்பொழுது குறிப்பாக யுத்த நிறுத்த காலத்திலேயே திட்டவட்டமான ஒர் அரசியல்வாதமாக ஏற்கப்பட்டு சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய நிலையில் தமிழ்த்தேசியம் என்பது முற்றுருவான ஒரு அரசியல் சித்தாந்தமாக இலங்கையில் தொழிற்படுகின்றது.

இதற்கு பிரதான காரணமாக அமைவது இவ் உரிமைப்போராட்டம் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த முறைமையே. இவ்வாறு சில ஈட்டங்களை அடையாளங்காணும் இவ்வேளையில், மேற்கூறிய போராட்ட நடைமுறையின் இரண்டு முக்கிய காரணிகள் கணக்கில் கொள்ளப்படவேண்டியது அவசியமாகும். அவை முறையே வடக்கு கிழக்கின் பாரம்பரியவாசிகளில் ஒரு குழுமத்தினரான (தமிழ் பேசும்) முஸ்லீம்கள் பற்றியதாகும். மற்றையது இந்திய அரசுடனான உறவுச்சீர்கெடுகையாகும். உண்மையில் சற்று நிதானமாக நோக்கும் போது மேற்கூறிய ஈட்டங்களும் அவற்றினூடே வந்த மேற்படி இரண்டு அம்சங்களும் இப்பொழுதுள்ள யுத்த நிறுத்த சூழ் அமைவில் எத்தகைய ஒரு புதிய கட்டத்தை தோற்றுகின்றன என்பதை காட்டுவனவாகும்.

சரித்திரம் என்பது சாகாத் தொடர்கதை. ஆனால் அதனிலும் கட்டங்கள் உண்டு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது 50ஆவது ஆண்டில் தமிழர் உரிமைப்போராட்டத்தினை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார். 50 வயதின் அனுபவங்களும் ஆளுமைப் பதனப்பாடுகளும் இப்புதிய சவால்களுக்கு அவரை இட்டுச் செல்லும். இவ்வேளையில் மேல்நாட்டு நிலை நிற்கும் ஒர் உருவகமே மனதில் மேலோங்கி நிற்கின்றது. பிரபாகரன் 50ஆவது வயதில் தான் வளர்ந்து அழகியாக்கி சர்வதேச கவனத்தை ஈர்த்துக்கொடுத்த தனது மகளை அவளது திருமணத்திற்காக தேவாலய நடுபாதையூடாக அழைத்துச்செல்கின்றார். இந்த மணப்பெண்ணின் மாப்பிள்ளையார்? இது அரசியல் சார்ந்த ஒரு விடயம். வரும் எதிர்காலம் அந்த அரசியலால் தீர்மானிக்கப்படவுள்ளது. தீர்மானிக்கப்படவேண்டும். தேவாலயத்திற்கு வெளியே பல்வேறு ஒலிகள், கூட்டொலிகள் கேட்கப்படலாம்.

ஆனால் தேவாலயத்தின் உள்ளே நடைபெறப்போவதோ 21ஆம் நூற்றாண்டில் மாத்திரமல்ல, இனி அடுத்து வரும் நூற்றாண்டுகளிலும் இலங்கைத் தமிழரின் அடையாளத்தை அவர்களின் இருப்பை, அந்த இருப்பின் தனித்துவங்களை தீர்மானிக்கப்போகும் விடயங்களாகும். இவ்வேளை கட்டுரையின் நீட்சிக்கு இடம்கொடாமல் ஒரு முக்கிய வரலாற்று உண்மையை பதிவு செய்துகொள்ளல் வேண்டும் உரிமைகளுக்கான போராட்டங்கள் அரசியல் நிலைப்பட்டனவே, ஆட்சி அதிகாரங்கள் சம்பந்தப்பட்டனவே, குழும உரிமைகள் பற்றியனவே பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராக தொடங்கும் புரட்சிகள் கூட நிறைவேற்று நிலையில் அரசியல் நடவடிக்கைகளாகவே ஸ்திரப்படுத்தப்படுகின்றன. 50 வயது ஒரு மைல்கல். கடந்த காலத்து அனுபவங்கள், படிப்பினைகள், அடுத்துவரும் காலப்பிரிவின் ஈழத்தமிழரின் விமோசனத்திற்கான பூபாள இசைப்புக்களாக அமையட்டும். அந்த வெற்றிப்பாதையில் பிரபாகரன் நிற்பார். நிற்கவேண்டும்.


நிமிர்ந்தெழுந்த வரலாறு


வரலாறு மனிதர்களைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கின்றது.

ஆனால்

சில மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கப்

பிறப்பெடுக்கின்றார்கள்.

‘பிரபாகரன்' என்பது தனிமனிதனின் பெயர் அன்று.

அது ஒரு வரலாற்றின் பெயர்:

அந்த மனிதரே படைக்கின்ற வரலாற்றின் பெயர்.

தமிழ் தேசிய இனத்தின் -

இன்றைய கால வரலாற்றினதும்

எதிர்கால வரலாற்றினதும் பெயர்.

‘பிரபாகரன்' என்றால்

அடிமை மனோபாவத்திற்குட் புதைந்துபோய்க் கிடந்த தமிழினம்

கௌரவமும் கர்வமும் மிக்க இனமாக நிமிர்ந்தெழுந்த வரலாறு!

வரலாறு என்பது வளர்ந்தே செல்வது.

அது முடிவற்றது.

இல்லாமையற்றது.`

பிரபாகரன்' என்பது முதிர்ந்தே செல்வது -

அது அகவையற்றது:

முதுமையற்றது.

மூல விதையென உன்னையே இட்டு - தமிழினத்தின்

வீர வரலாறென உருவெடுக்கும் தலைவா!

கோல அழகென உயர்வோடு வாழ்வாய் -

தமிழீழத்தின்

,நிழலாக - பலமாக -

கம்பீரமாக!

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

World Tamil Coordinating Committee

ஐக்கிய அமெரிக்காthe united staates america

மையப்பணிமனை

நியூயோர்க்

20.11.2009

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்


எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.

இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.

ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்' போர்வீரனாகவே களத்தில் இறங்கினார். சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.

அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒர் தலைமறைவு - கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக அவர் ஒரு ‘தேடப்படும் நபராக' மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவவேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது.

காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், தேசிய கௌரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக்கொண்டார்.

தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு.பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார்.

இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும், அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளிவானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார்.

தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.

சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார்.

அவரது சில போர்த் தந்திரோபாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.பிரபாகரன் ஒரு கரும வீரர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான தத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார்.

தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. தனது போராட்ட இலட்சியத்தை பிரபாகரன் இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்திலிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டுள்ளனர். தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார்.

ஒரு முகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் அபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று. திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக்கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது.

உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.

போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிற்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார். சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவற்றைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக்கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து.

ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவுவகைகளை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்திலிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு. போர்க்கலையில் திரு பிரபாகரன் அபாரமான ஆற்றல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து.

அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ - அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது. தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபாகரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கீனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக்கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது.

மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக்கொண்டார். மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார்.

தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கௌரவிப்பார். வீரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபாகரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது. துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.‘நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது' என்று நான் பாலாவிடம் கேட்டேன்.

‘இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்' என்று பாலா சொன்னார். தனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செயற்படும் போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார். தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது. நீதியானது, நியாயமானது, எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம். ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் தலைவருமாவார்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும் பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக்கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடந்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை. பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீதுபடிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதி விட முடியாது.

பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக தகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணபெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும், மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார். பிரபாகரன் குடும்பப்பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.

பிரபாகரனுக்கு ‘ஓய்வு' கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார். 1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா. 1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன். முதற் குழந்தையின் பிரசவத்தில் மதிக்கு நான் உதவி செய்தபோது, உரிச்சுப் படைச்சு தோற்றத்தில் மட்டு மன்றி குணாம்சத்திலும் தகப்பனைப் போலவே குழந்தை வளர்ந்துவருமென நான் நினைக்கவில்லை. ஒரே பெண் குழந்தையான துவாரகா படிப்பில் ஆழமான அக்கறையும் பொறுப்புணர்வும் உடையவர். பிரபாகரனின் கடைக்குட்டி பாலச்சந்திரன் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லக் குட்டி. அச்சு வார்த்ததுபோல பிரபாகரனின் மறுதோற்றம். நான் வன்னியை விட்டு புறப்பட்ட வேளையில் குழந்தை பாலச்சந்திரன் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதனால் அவரது ஆளுமைபற்றி அதிகம் என்னால் சொல்லமுடியாது.

எழுத்தாளர்,

சமுகவியலாளர்,

அரசியற் செயற்பாட்டாளர்,

போராளி. பிரித்தானியா.

அடேல் பாலசிங்கம்


வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி


தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு,

இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதானித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு நான் பாக்கியம் பெற்றிருப்பதோடு, பெருமிதம் அடைய வேண்டியவனாகவும் இருக்கின்றேன். தம்பி பிரபாகரன் 1954ல், பிறந்த வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் உள்ள ஊரில், அவர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் பிறந்த ஒருவன் என்ற முறையிலும், 1970ம் ஆண்டு நான் பேராதனைப் பல்கலைக்கழகம் புகுவதற்கு ஆயத்தமாகின்ற வேளையிலே, தமிழ் மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண பகிரங்க நிகழ்ச்சியான மௌன ஊர்வலத்தில் (திருநெல்வேலிச் சந்தையடியில் ஆரம்பமாகி, யாழ் GREEN FIELD மைதானத்தில் முடிவடைந்த பொதுக்கூட்டத்தில்) கறுப்புத் துணியால் வாய் கட்டி கலந்து கொண்ட ஒருவன் என்ற முறையிலும் இந்த சிறு வியப்புக் கட்டுரையை பதிவு செய்வதற்கு தகுதியுடையவன் என்ற திருப்தியினால் உந்தப்பட்டவனாகவே இதனை வரைவதற்கு முன்வந்துள்ளேன்.

நான் எனது உயர் பட்டப் படிப்பிற்காக இலங்கையை விட்டு புறப்பட்ட வருடம் தான் (1978) தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தாம் மேற்கொண்ட 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு உரிமை கோரிய வருடம். தனது இளந்துளிர் வயதான 14வது பிராயத்தில் இந்தியச் சுதந்திரப் போராளிகளாகத் திகழ்ந்த சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகவத்சிங் ஆகியோரின் வழியைப் பின்பற்றி, தனக்கு வயதிற்கு மூத்தவர்களாகிய, ஒரே இலட்சியம் கொண்ட, இன்னும் 7 பேருடன் இணைந்து தலைமறைவாக செயற்பட ஆரம்பித்த தம்பி பிரபாகரன் 1978ல் ஏற்கனவே 10 வருடங்கள் தலைமறைவான விதத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டது பின்னர்தான் என்போன்றோருக்கு எல்லாம் தெரிய வந்தது.

இக்காலப்பகுதியில் தம்பி பிரபாகரன் பற்றி எமக்குத் தெரிந்தது, இவர் இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டு வந்த தமிழ்த் தீவிரவாதிகளில் ஒருவர் என்பது மட்டுமேயாகும். தம்பி பிரபாகரனின் படம் உட்பட்ட சில தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டி ஒன்று, பேராதனைப் பல்கலைக்கழகப் புகையிரத நிலையமான ‘சரசவி உயன' உட்பட பல புகையிரத நிலையங்களின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தமையாலேயே இது எமக்கெல்லாம் தெரிய வந்தது. இக்காலப்பகுதியில் நான் இதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பொறுப்பேற்ற பின்னர் எனது அலுவலக அறைக்கு அடிக்கடி விஜயம் செய்யும், அப்பொழுது மாணவனாகவும், ஒரு JVP ஆதரவாளனாகவும் இருந்தவரும், தற்போது தம்பி பிரபாகரனை ஒரு பயங்கரவாதியென்று உலகிற்கு பறை சாற்றும் பணியில் முன்னணியில் திகழ்பவருமான jayathilaka, என்னுடன் இந்தச் சுவரொட்டியில் இருந்த இளைஞர்கள் பற்றியும், அவர்களின் சாதனைகளைப் பற்றியும் வியந்து கதைப்பது வழக்கம்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியன்றில் இவருடன் நான் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைபற்றி வாதாடியபோது, dayan என்றொருவர் அப்போது எனது வாழ்வில் குறுக்கிடாது இருந்திருந்தால், நான் ஊடகத்துறையினூடாக எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பங்களிப்பை இந்தச் சிறு அளவிலேனும் செய்யத்தூண்டப்பட்டிருப்பேனா என்று ஒருகணம் சிந்தித்ததுமுண்டு. அக்காலம் தொடக்கம் தம்பி பிரபாகரனின் செயற்பாடுகளை வெளிநாடுகளிலிருந்து, பெரும்பாலும் ஊடகங்களுடாக கூர்மையாக அவதானித்து வந்ததால்தான் நான் இன்று எனது இந்தச் சிறு வியப்புக்கட்டுரையை வரையக்கூடிய நிலையில் உள்ளேன்.

பள்ளிப் பையனாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய தம்பி பிரபாகரன், ஒருவித இராணுவக் கல்லூரிப் பயிற்சியுமின்றி, உலகின் எந்தவொரு விடுதலை இயக்க தளபதியையும் விட அதிசிறந்த தானைத் தளபதியாக யாவராலும் மதிக்கப்படுவதற்கு, அவர் தான் கொண்ட இலட்சியத்தில் கொண்டிருக்கும் உறுதியும், அவரின் வயது முதிர முதிர இந்த உறுதியும் வளர்ந்து வேரூன்றியமையுமே முக்கிய காரணமென்று நான் மதிப்பிடுகின்றேன். 1958ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கையின்போது, உருகும் தாரினுள் அமிழ்த்தி கொடூரமாக கோயில் ஐயர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பற்றி ஒரு விதவைப் பெண் வர்ணித்ததைக் கேட்டதனால், இனியும் இளந்தமிழர் பார்த்துக் கொண்டிருந்தால் அது அடிமைத்தனம் என்று எண்ணியே தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததாக நாம் அறிகின்றோம்.

தான் எடுத்திருக்கும் பாதை வெகு கரடுமுரடானது என்பதை அவர் உணர்ந்திருந்தும், தனது இலட்சியத்தை அடைவதற்கு தியாகங்களை செய்வதற்கு அவர் தனது இளவயதிலே தயாராகி விட்டதற்கு ஆதாரங்களும் உண்டு. அவர் சார்ந்திருந்த ஆரம்ப சிறு குழுவானது தமது செயற்பாடுகளுக்கென ஒரு கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்ய விரும்பியபோது தேவைப்பட்ட ரூ. 150ஐ திரட்டுவதற்காக, இவரின் ஒரே ஒரு சொத்தாக அப்போது இவரிடமிருந்த இவரது சகோதரியின் திருமணத்தின் போது இவரிற்கு கிடைத்த தங்க கணையாழியை விற்று, ரூ. 50ஐ திரட்டிக் கொடுத்ததுடன் ஆரம்பித்த இவரது தியாகம், தனது வாழ்நாளின் பாதியை சக பிரஜைகள் போன்று உலகை அனுபவிக்க முடியாத விதத்தில் கழித்தபடி தொடர்கின்றது.

ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தின் போது பல சோதனைகளைத் தம்பி பிரபாகரன் எதிர்கொள்ள நேர்ந்தது. இவரின் பார்வையாளராக இருந்த எமக்கெல்லாம் பலதடவைகள் மனம் தளர்ந்த போதிலும், அவர் மனம் தளராது செயற்பட்டு அந்தத் தடைகளையெல்லாம் தாண்டுவதற்கு அவர் தனது இலட்சியத்தில் கொண்டிருந்த உறுதியே உறுதுணையாக விளங்கி இருந்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இதுபற்றி நான் தம்பட்டம் அடிக்க வேண்டிய அவசியமில்லை. இதுபற்றி அந்தக்காலகட்டங்களில் இந்தச் சோதனைகளையே உருவாக்கக் காலாக இருந்த சிலரே இதற்குச் சாட்சியம் கூறியுள்ளனர். தம்பி பிரபாகரன் எதிர்கொண்ட முதல் பாரிய சோதனை அவர்மேல் பிரதமர் ராஜீவ் காந்தி நிர்வாகத்தால் திணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும்.

இதனூடாகத்தான் அவர் முதன் முதலாகப் பாரிய ஒரு அரசியல் இராணுவச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை யாவரும் அறிவர். இந்தச் சோதனையை தம்பி பிரபாகரன் எவ்வாறு தான்கொண்ட இலட்சியத்தில் அணுவும் அசையாது செயற்பட்டு முறியடித்தார் என்பது இப்பொழுது பலராலும் பதியப்பட்டிருக்கும் சரித்திர மாகும். இதில் முக்கியமானவர் இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரும், அப்பொழுது இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராக விளங்கியவருமான joythindra dixit ஆவார். இவர் தனது அனுபவத்தைப் பின்னர் 1998ம் ஆண்டு தான் எழுதிய "Assignment colombo" என்ற புத்தகத்தில், தனது கருத்துக்களாகக் குறிப்பிட்டுள்ள சிலவற்றை இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என எண்ணுகிறேன்.

தமிழர்களின் நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதில் ஒரு சிறந்த அரசியல் - இராணுவ சக்தியாக முன்நிலைக்குத் த. ஈ. வி. புலிகள் உயர்ந்ததற்கு Dixit அவர்கள் 6 காரணங்களைத் தனது புத்தகத்தில் நிரல்ப்படுத்தியுள்ளார். அதிலே முதலாவதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். முதலாவதாக, "இந்த இயக்கத்தின் தலைவரான வே. பிரபாகரனிடம் காணப்படும் கட்டுப்பாடு, மனவுறுதி, இலங்கைத் தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணம் செய்துள்ளமை ஆகிய குணாதிசயங்கள் ஆகும். இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும், இவரின் நெஞ்சில் சுதந்திரதாகம் சுவாலை விட்டெரிந்து கொண்டிருப்பதையும், இவரிடம் தன்னை அதற்கு அர்ப்பணிக்கும் சுபாவம் உள்ளதென்பதையும், இவர் இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாகப் பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது"

என தனது புத்தகத்தில் தம்பி பிரபாகரனைப் புகழ்ந்துள்ளார் Dixit அவர்கள். இதேபோன்றுதான் இந்திய அமைதி காக்கும் படை முழுவதற்கும் பொறுப்பாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் Dipinder singh அவர்களும் தான் எழுதிய ‘IPKF in SRILANKA' என்ற புத்தகத்தில் தம்பி பிரபாகரனுக்குப் புகழாரம் சூட்டியதோடு நின்றுவிடாது, எப்பொழுதும் இந்திய அமைதிப்படையினரைத் தம்மேல் ஆரோக்கியமான மதிப்பு வைக்க வைத்துள்ள வியக்கத்தகுந்த அதி அளவிலான ஊக்கம் மற்றும் போர்புரியும் திறமை கொண்ட விடுதலைப்புலிகளுக்கு, தனது புத்தகமானது இடது கையால் வழங்கும் ஒரு salute என்றும் வர்ணித்துள்ளமை தம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதியைக் கௌரவிப்பதாகவே அமைந்துள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையின் யாழ். பகுதித் தளபதியாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் s.c.sardesh pande வெளியிட்டுள்ள ‘Assignment jaffna என்ற புத்தகத்திலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளிற்குப் புத்தக ஆசிரியரால் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்திடம் காணப்படும் கட்டுப்பாடு, தம்மை எதற்கும் அர்ப்பணிக்கும் தன்மை, உறுதி, ஒரு குறிக் கோளை நோக்கிச் செயற்படும் திறமை, மற்றும் தொழில்நுட்பவியல் என்பவற்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் மேல் நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கின்றேன் என்றும், தமிழர் மத்தியில் நிலவும் உணர்வலைகளின் பிரதிபலிப்பே த. ஈ. வி. புலிகள் என்றும், இந்த உணர்வலைகள் தணியா திருக்கும் வரை விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாது என்ற அபிப்பிராயத்துடனே நான் திரும்பினேன் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் pande அவர்கள் தெரிவித்துள்ளமை இந்த இயக்கத்தின் தலைவரின் இலட்சிய உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைந்துள்ளது.

1970களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல புரட்சிகரத் தாக்குதல்களை அடக்குவதற்காக, hitler rommel ற்குக் கொடுத்த கட்டளை போன்று, காலம் சென்ற ஜனாதிபதி யி.ஸி.ஜெயவர்த்தனா தனது மருமகனான brigadier weeratunga விற்கு, வடக்கிற்குச் சென்று 6 மாதத்தில் எல்லாவித பயங்கரவாதத்தையும் அடக்கி வரும்படி உத்தரவிட்டிருந்தார். brigadier weeratunga இந்தக் கட்டளையை நிறைவேற்ற அவருக்குப் போதிய வல்லமையைக் கொடுக்கும் நோக்குடன் 1979ம் ஆண்டு july மாதம் கொடூரமான அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார் ஜனாதிபதி ஜெயவர்த்தனா. ஆனால் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த இயக்கத்தை மரபுவழி இராணுவத்தைக் கொண்ட சிறீலங்காப் படையினை எதிர்த்து ஓயாத அலைகள் I,II,III என்று 3 பாரிய யுத்தங்களைப் புரிந்து பீரங்கிப்படையணி, தாங்கி எதிர்ப்புப் படையணி, கடற்புலி என்ற கடற்படை ஒரு சிறிய வான்படை என்பவற்றைக் கொண்டதாக, சிறீலங்கா இராணுவத்திற்குச் சமபலம் உள்ள, மரபுவழி யுத்தம் புரியும் வல்லமை பொருந்திய ஒரு இராணுவ இயக்கமாக த. ஈ. வி. புலிகளை மாற்றியமைத்துப் பதிலடி வழங்கினார் தளபதி தம்பி பிரபாகரன் அவர்கள்.

இந்தச் சாதனையை நிலைநாட்டுவதற்கு இவரிடம் காணப்படும் இலட்சிய உறுதியே முக்கிய காரணியாக விளங்கியது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இயற்கையே தனது நண்பனென்றும், வாழ்க்கையே தனது தத்துவ ஆசானென்றும், சரித்திரமே தனது வழிகாட்டியெனவும் கூறிக்கொள்ளும் தம்பி பிரபாகரன், மனிதகுல மீட்புக்காக யேசுபிரான் எப்படித் தன்னைப் பிறர் இழிவுபடுத்துவதைப் பொருட்படுத்தாது வாழ்ந்து காட்டினாரோ, அவ்வழியைப் பின்பற்றித் தம்பி பிரபாகரனும் தமிழ் மக்களின் மீட்பிற்காக தான் கொண்ட இலட்சியத்தை அடைவதற்காகத் தன்னைப் பிறர் எந்தவிதமான இழிவிற்கு உட்படுத்துவதையும் சகித்துக் கொள்ளவும், சிலசமயங்களில் இதனால் பூரிப்படையவும் தயாராக உள்ளமையானது அவரின் இலட்சியத்திற்கான உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைகின்றது.

சிறீலங்கா அரசினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் வரிசையில் முதலாவது இடத்தில் தம்பி பிரபாகரன் விளங்குவது பற்றி அவரின் உணர்வலைகள் எப்படியாக இருக்கின்றது என்று அவரிடம் ஒரு தடவை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்குத் தம்பி பிரபாகரன் பின்வருமாறு பதிலளித்திருந்தார்; பிரித்தானியர்கள் ஒரு Irish இனத்தவரைப் பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தினால் அவர் உண்மையான நாட்டுப் பற்றாளன் என்று ஒரு ஐரிஸ் தலைவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அதேபோன்றுதான் சிறீலங்கா அரசு என்னைத் தாம் தேடி வருபவர்களில் அதிமுக்கியமானவர் என்று குறிப்பிடும் போது நான் ஒரு உண்மையான தமிழ்த் தேசப்பற்றாளன் என்பதையே அது சுட்டிக் காட்டுகின்றது. ஆகவே தேடப்பட்டு வருபவர்களில் அதிமுக்கியமானவனாகப் பிறர் என்னைக் கருதுவது பற்றி நான் பெருமையடைகின்றேன்.

இவரின் இந்தக் கூற்றானது, இழிமையின் விளிம்பிற்குத்தள்ளப்படும் சந்தர்ப்பத்திலும் கூட அதனை ஒரு தியாகமாக மதித்துத் தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருக்க தம்பி பிரபாகரன் விரும்புவதையே, எடுத்துக் காட்டுகின்றது. எமது போராட்ட வரலாறுபற்றி BBC, Voice of america போன்ற சர்வதேச வானொலிச் சேவைகளுடாக விமர்சிக்கப்பட்டவற்றையும், இதுபற்றிய முக்கிய செய்திகளையும் 1983ம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்ற நாள் தொடக்கம் நான் நாளாந்தம் கேட்டு, ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து வந்தேன். இந்தியப்படை யாழ் மண்ணில் சென்று இறங்கியதையும், தம்பி பிரபாகரன் சுதுமலைக் கூட்டத்தில் அதனை வரவேற்றுப் பேசியதையும், pacific தீவு ஒன்றிலிருந்து கேட்டு ஒலிப்பதிவு செய்து கொண்டதும் எமது போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று தப்புக்கணக்குப் போட்டு எனது ஒலிப்பதிவு செய்யும் வேலையையும் அன்றுடன் நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் தம்பி பிரபாகரனோ பின்னர் இந்தியப் படைகளால் வன்னிக் காட்டினுள் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் சரி, பின்னர் யாழ்குடா நாட்டைச் சிறீலங்காப் படைகள் கைப்பற்றிய போது சாதுரியமாகப் பின்வாங்கி வன்னிக் காட்டினுள் மீண்டும் புகுந்த போதிலும் சரி மனம் தளராது தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து ஒரு அணுவேனும் விலகாது தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றதன் பயனாகவே த.ஈ.வி.புலிகள் இயக்கம் இன்று தற்போதைய சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் மத்தியிலும், ஆல்போல் உலகளாவிய ரீதியில் கிளைகள் பரப்பி, நன்றாக விழுதுகள் பரப்பி வேரூன்றி நிற்கின்றது. இதனூடாகத் தம்பி பிரபாகரனுக்கும் என்போன்றோருக்கும் இடையில் இருக்கும் பாரிய வித்தியாசத்தைக் காண்கின்றேன்.

தற்போது ஸ்தம்பிதம் அடைந்து போயிருக்கும் சமாதான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசியல் சாணக்கியத்துடன் ஆரம்பித்து வைத்த தம்பி பிரபாகரன், பின்னர் சிறீலங்கா அரசும் அதற்கு முண்டு கொடுத்துத் தத்தமது இலட்சியங்களை அடைய முண்டியடித்துக் கொள்ளும் பிறநாட்டு அரசுகளும், தமிழர் தரப்பினை ஏமாற்ற முற்படுவதைத் தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்து கொண்ட தம்பி பிரபாகரன், இடைக்காலத் தன்னாட்சி சபைப் பிரேரணையை உருவாக்கிய விதமும் இதனைச் சமர்ப்பித்துத் தமிழர் தரப்பிற்கு எதிராகச் சதி செய்ய முயன்ற சக்திகள் அனைத்தினதும் திட்டங்களை அவை முன்னெடுத்துச் செல்ல முடியாதவண்ணம் தடைபோட்டுள்ளமையானது அவர் தனது இலட்சியத்தை அடைவதற்காக எந்தச் சக்தியையும் எதிர்க்கத் தயங்கப் போவதில்லை என்பதைச் சந்தேகம் எதுவுமின்றி எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

தம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதி பற்றி நான் வியப்பதற்கான இறுதியான காரணம் அவரது எந்தவொரு புறச் சக்தியிலும் தங்கி வாழாக் கொள்கையாகும். plote,eprlf, telo ,epdp, போன்ற மற்றத் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் யாவும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவிலோ, சிறீலங்காவிலோ அல்லது வேறு வெளிநாட்டுச் சக்திகளிலோ தங்கிச் செயற்பட்டதாலேயே, இவை யாவும் இன்று கூலிக்கும்பல்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்களும் ஆயுதப் போராட்டத்தில் குதித்த போது தம்பி பிரபாகரனின் அதே இலட்சியத்துடன்தான் களத்தில் இறங்கியவர்கள். ஆனால் அவர்கள் தம்பி பிரபாகரனைப்போன்று தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாகத் தளம்பாது நின்று பிடிக்க முடியாதுபோனதால்தான் இன்று கூலிக்கும்பல்களாகவும், எட்டப்பன் கூட்டங்களாகவும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது விடயத்தில் தம்பி பிரபாகரன் இளவயதில் யார் வழியைப் பின்பற்றினாரோ அதே சுபாஸ் சந்திரபோஸ் அவர்களும் பிரித்தானியர்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற புறச்சக்திகளை நம்பி எப்படி ஏமாற்றமடைந்தார் என்று வெகு அண்மையில் BBC வெளியிட்டுள்ள தகவல்களை நான் இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. பிரித்தானிய உளவுத்துறை 1945ம் ஆண்டில் அறிந்து, 2021ம் ஆண்டு வரை வெளியிடுவதில்லை என்று ஒளித்து வைத்திருந்த இத்தகவல் இப்பொழுது 17 வருடங்கள் முன் கூட்டியே BBCக்குக் கிடைத்துள்ளது. இதன்படி சுபாஸ் சந்திரபோஸ் தனது இலட்சியத்தை அடைவதற்காகக் கள்ளமாக ஜேர்மனி நாட்டினுள் புகுந்து, hitlerன் உதவியை நாடி, அவர்வசம் இருந்த இந்திய போர்க்கைதிகளிலிருந்து திரட்டிய ‘free India legion' எனும் 100, 000 இந்தியப் போர்வீரர்கள் கொண்ட படையென்றைப் பிரயோகித்து பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இந்தியாவை முற்றுகையிடுவதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் முதலில் hitler படைகள் சோவியத் யூனியனிற்குள் புகுந்தபோது விரக்தியடைந்த இடதுசாரிக் கொள்கை கொண்ட சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், stalingarg சம்பவங்களின் பின்னர் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த hitler படைகளினுதவியுடன் தனது இலட்சியத்தை அடைய முடியாது என்பதை அப்பொழுது உணர்ந்து கொண்டார். இதனால் தான் திரட்டிய இந்தியப் படைக்கு துரோகம் இழைக்கும் விதத்தில் 1943ம் ஆண்டு februaryமாதம் யப்பானிற்குப் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் சென்று விட்டார். இதன்பின்னர் தமது படைகளில் உள்ள இந்தியரை நம்பமுடியாது என்று பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் கருதி இந்தியாவிற்குச் சுதந்திரத்தை வழங்க முன்னதாகவே 1945ம் ஆண்டு சுபாஸ் சந்திரபோஸ் இறந்து விட்டதாக இந்தப் பிரித்தானியரால் இவ்வளவு காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றித் தெரிந்தோ தெரியாமலோ, தம்பி பிரபாகரன் இதுவரை எந்தச் சக்தியினதும் துணையைப் பெறாமலோ எதிர்பாராமலோ இயங்கி வருவது அவர் தனது இலட்சியத்தில் கொண்டுள்ள உறுதியை மாத்திரமன்றி அவருக்கே உரித்தான தூரதிருஸ்டியாக விடயங்களை நோக்கும் திறமையையும் வெளிக்காட்டுகின்றது. இப்படியான ஒரு தலைவன் தமிழ் மக்களிற்கு இந்தக்காலகட்டத்தில் கிடைத்திருப்பதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்களென்றே கருதுகின்றேன். இந்த இலட்சியவாதியும், தியாகியும், உன்னத தளபதியுமாக விளங்கும் தம்பி பிரபாகரனின் வழிநடத்தலிலேயே எமது மக்களின் சுபீட்சம் அடையப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும். இப்படியான எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தம்பி பிரபாகரனை நேரில் சந்திக்கச் சிறீலங்காவினுள் நான் பாதுகாப்பாக அடி எடுத்து வைக்கக்கூடிய நாள் விரைவில் மலரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நான் நாட்களை எண்ணியவண்ணம் காத்திருக்கின்றேன். இந்தத் தலைவன் இன்று தன் பிறந்தநாள், பொன்விழாவைக் கண்டு உவகையுறும் வேளையில் இவர் ஆயுள் நூறும் கண்டு, ஈழத் தமிழ் மக்களோடு சாதாரண மானிடர் போன்று கலந்து வாழும் பாக்கியத்தை அதிவிரைவில் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன்.

விரிவுரையாளர்,

அரசியல் ஆய்வாளர்,

அவுஸ்திரேலியா.

கலாநிதி விக்டர்

இராஜகுலேந்திரன்


தமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்


தமிழ்த் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தமிழரது விடுதலைப் போராட்டம் பற்றிய எனது தனிப் பட்ட அனுபவத்தையும் எழுத விரும்புகின்றேன்.

எனது பதவியளிப்புக்குப் பின்னர் RUHRGEBIET தெற்கிலமைந்துள்ள கிறேபெல்டு என்ற நகரில் ஒரு திருச்சபைச் சமயத்துணைக் குருவாக நியமிக்கப்பட்டேன். அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் காரணமாக ஒவ்வொருமாதமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வந்த காலமது. 1983ம் ஆண்டில் நடைபெற்ற கறுப்பு யூலையின் பயங்கர நாட்களுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் ஐரோப்பாவுக்கும் ஜேர்மனிக்கும் இடம்பெயர்ந்தார்கள். இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த அனர்த்தங்கள் பற்றி அந்நாட்களில் நான் மிகவும் கொஞ்சமே அறிந்திருந்தேன்.

எனது பள்ளி நாட்களில் சிறீலங்கா எப்படி இறைவனின் சுவர்க்கமாகப் போற்றப்பட்டது என்பதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் குருவாகக் கடமை யாற்றிய ஆலயத்திற்கு முன்னால் நான் ஒரு தமிழ் வாலிபனைச் சந்தித்தேன். தான் ஓர் இந்துக் கோவிலைத் தேடுவதாக, அவன் தனது கைகளாலும் கால்களாலும் எனக்கு விளக்கினான். அவன் என்னிடம் தனது விலாசத்தைத்தந்தான். புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்தது அவனது சுத்தமில்லாத விடுதி. நான் சென்றவேளை அவ்விடுதியில் 300 க்கும் அதிகமான இளந்தமிழர்கள் வசித்து வந்தார்கள். நான் அவனைப் பார்ப்பதற்கு அவனது விடுதிகுச் சென்றேன். தென் ஆசியர்களுடன், குறிப்பாகத் தமிழர்களுடன் எனக்கேற்பட்ட முதல் சந்திப்பாக அது அமைந்திருந்தது.

நான் வெறும் தேனீரோ, பால் கலந்த தேனீரோ அருந்த வரும்படி அழைக்கப்பட்டேன். எங்களால் ஒரே மொழியில் பேச முடியவில்லையெனினும் நாங்கள் எங்களது சைகைகளாலும், கண்களாலும், முகபாவனைகளாலும், மொழியில்லா வெறுமையினால் எம்முள் முகாமிட்டிருந்த மௌனங்களாலும் நாம் குறைவில்லாமல் நிறையவே பேசினோம் என்று சொல்லலாம். அதன் பின்னர் அவர்களை நான் அடிக்கடி சென்று பார்த்தேன். நாட்கணக்காக, வாரக்கணக்காக, மாதக்கணக்காக அந்த வாலிபர்களின் சோகந்தோய்ந்த கதைகளைப் புரிந்துகொள்ள முயன்றேன். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, சித்திரவதை, குடும்ப அங்கத்தவர்களின் கொலைகள் என்ற வகையில் அவர்கள் அனுபவித்த சோதனைகளைக் கேட்பது எனக்கு விறைக்க வைக்கும் அனுபவமாக அமைந்தது.

அழிவுகளையும் கொலைகளையும் சித்தரிக்கும் திரைப்படங்களைப் பார்த்தேன். அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே அவர்கள் மீது இக் குற்றங்கள் செய்யப்பட்டன. அந்நாட்டில் நடைபெற்ற-நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களையும் அதனால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் நான் படிப்படியாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். குடியேற்றத்திற்கு முன்னரும் பின்னருமான இலங்கையின் சரித்திரத்தைப் பற்றி படித்தேன். சிங்கள தேசியவாதத்தின் வளர்ச்சி பற்றியும், சிறீலங்காவை ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்ற விரும்பும் அதி தீவிர தேசியவாதம் பற்றியும் நான் தெரிந்துகொண்டேன். எனது தமிழ் வாலிப நண்பர்களுக்கு அவர்களது தந்தைமார்களோ, தாய்மார்களோ, உடன் பிறப்புக்களோ குண்டுவீச்சுக்களாலோ எறிகணை வீச்சுக்களாலோ கொல்லப்பட்ட செய்திகள் அவர்களுக்குக் கிடைத்த போதெல்லாம் நான் அவர்களது பிரச்சினைகளை அமைதியாகக் கேட்பதுண்டு.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது ஜெர்மனியில் குண்டு வீச்சுக்களால் ஏற்பட்ட அழிவுகள் பற்றி எனது பெற்றோர் கூறக்கேட்டிருக்கின்றேன். ஜெர்மனியில் நான் இருந்த வேளைகளில், அவர்களது தாயகத்திலுள்ள கோயில்கள், ஆலயங்கள், மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் பற்றியும் சேதங்கள் பற்றியும் செய்திகளாக எங்களுக்குச் சொல்லப்பட்டன. அந்தச் சம்பவங்கள் பற்றி நான் ஏற்கெனவே பெற்றிருந்த ஆழ்ந்து காணும் அறிவு, அவர்கள் கொண்டுள்ள நாட்டுப்பற்று, அவர்களது துயரங்களை, தனிமை போன்றவற்றையும் புரிந்துகொள்ள உதவியது. சிறீலங்காவில் உண்மையாக நடைபெறும் நிகழ்வுகளிலிருந்து வித்தியாசமான நோக்கையே ஜெர்மன் அரசு கொண்டிருந்தது.

அவர்களைப் பொறுத்தமட்டில், சிறீலங்கா இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும் தாக்குதல்களிலேயே ஈடுபட்டுள்ளது. நான் பங்குகொண்ட பல கலந்துரையாடல்களில் அவர்கள் அந்த நிலைப்பாட்டையே நிலை நிறுத்தினர். விடுதலைப் புலிகளுடன் சில தமிழர்களுக்கு முன்னர் கஷ்டங்கள் இருந்திருக்கலாம். ஆனால் தெற்காசியாவிலோ, லத்தின் அமெரிக்காவிலோ, ஆபிரிக்காவிலோ நடைபெறும் விடுதலைப் போராட்டங்களைப் பொறுத்தமட்டில், மேற்கத்தைய நாடுகள், விடுதலை இயக்கங்களை ஆதரிக்காமல் அந்தந்த அரசாங்கங்களையே ஆதரிக்கின்றன என்று எனக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள், சிறீலங்கா அரசாலும் இராணுவத்தாலும் தூண்டப்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஜெர்மனியில் வாழும் தமிழர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாதுகாப்பில்லாமலேயே வாழ்கிறார்கள்.

அன்றாட வாழ்க்கைக்கான உழைப்பைப் பெறுவதைத் தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு ஜேர்மனியில் கிடையாது. 1980 ஆண்டுக் கடைசியில் ஜேர்மன் உயர் நீதிமன்றம், இன ஒடுக்கலால் பாதிக்கப்பட்டவர்களை உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டவர்கள் என ஏற்கலாமெனத் தீர்ப்பளித்தது. அதன்படி அவர்கள் ஜெர்மன் சமூகத்துடன் ஒன்றிணைய அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிறீலங்காவில் போர் நிலையை உள்நாட்டுப் போராகவே ஜெர்மன் அரசு பார்க்கிறது. தமிழ் இனத்தவர்களது ஒன்றிணைந்த முயற்சிகளால் இன்று அவர்கள், அங்கு நிலவும் ஜேர்மன் சமூக அமைப்புக்கு இயைபாகத் தங்கள் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் தழுவிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

1995 ஆண்டுத் தொடக்கத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா பதவிக்கு வந்தபோது, பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் எப்படித்தங்கள் தாய் நாட்டிற்குப் போவதற்குத் திட்டமிட்டார்கள் என்பதை என்னால் ஞாபகப்படுத்த முடிகிறது. ஆனால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் முன்னவையை விடக்கூடுதலாக இருந்தன. இதன் விளைவாகவே ஒட்டு மொத்தத் தமிழர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்தனர். நவாலி சென். பீட்டர் ஆலயத்தின் மீதான குண்டு தாக்குதல் சம்பவத்தைப் பற்றிச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பேசியபோது சந்திரிக்கா அதற்கு எதிராகப் பேசிய விதத்தைக் கண்டு நான் திகைத்தேன். வெளித்தோற்றத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்கின்றார்.

அவ்வளவுதான், ஆனால் அவரது உள்ளார்ந்த நோக்கங்களை இச்சிறிய கட்டுரையில் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் விட்டுவிடுகிறேன். 2002ம் ஆண்டு மாசி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஜெர்மன் அதிகாரிகளினது மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனியில் வாழும் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்து பெறுவது மிகவும் கடினமானது. இதனாலேயே ஜெர்மனியில் வாழும் தமிழர்களுக்கு வித்தியாசமான வதிவிட அனுமதிகள் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு ஜெர்மன் பிரஜா உரிமைகளும் சிலருக்கு நிரந்தர விதிவிட அனுமதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே வேளை, பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எந்நேரமும் சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

2002ம் ஆண்டு நான் முதன் முதலாக வட சிறீலங்காவிற்குப் போனேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது குண்டு வீச்சுக்களினால் அழிக்கப்பட்ட வீடுகளையும், சீரழிக்கப்பட்ட கட்டிடங்களையும், கோயில்களையும், ஆலயங்களையும், பள்ளிக்கூடங்களையும் வேறு பலவற்றையும் நேரில் கண்டேன். அங்கே எல்லா இடங்களிலும் இராணுவச் சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. நான் சாவகச்சேரிக்குச் சென்றேன். மிகவும் மோசமாக அழிக்கப்பட்ட நகரம் இதுவே. உத்தியோகப் பற்றற்ற முறையில் காணாமற் போனோர் என அறிவிக்கப்பட்டவர்கள் மூர்க்கத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழிகளைப் பார்த்தேன். வெட்டி வீழ்த்தப்பட்ட பல இலட்சக் கணக்கான பனை மரங்களைக் கண்டேன்.

ஆனையிறவைத் தாண்டிக் கிளிநொச்சிக்குப் போனேன். காயமுற்ற புலிப்போராளிகளுக்கான மறுவாழ்வு மையத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டேன். அங்கே சம்பிரதாய பூர்வமான அறிமுகங்களுக்குப் பின்னர், நாங்கள் ஒரு சுதந்திரப் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட பல விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடினோம். எனது கத்தோலிக்க கடவுள் பற்றிய சாஸ்திர அறிவு லத்தீன்- அமெரிக்க அணுகுமுறை பற்றிய தெளிவைத் தந்தது. ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் கடவுளின் சாம்ராஜ்யத்திற்கு, தெரியப்படுத்த வேண்டுமென யேசுவின் உபதேசத்தில் சொல்லப்படுவதே முக்கியமானது என்று அது கூறுகிறது. இதுவே யேசுவின் உபதேசத்தின் சாரமாகும். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முதலில் ஒடுக்கப்பட்டவர்களின் அவலக்குரலைக் கேட்கவேண்டும்.

பின்னர் அவர்களின் அவலத்திற்கான காரணத்தையும் அதற்குப் பின்னர் அவர்களின் ஒடுக்குமுறைபற்றிய சரித்திரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். எகிப்தில் ஒடுக்கப்பட்ட இஸ்ரேலியரின் விவிலிய கதை இதுவே. பின்னர் விடுதலைக்கான அறைகூவலைச் செய்வதற்கு மக்களை இட்டுச்சென்ற இன, சமூக, அரசியல் அமைப்பு பற்றிக் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய ஒடுக்கு நிலை ஏற்படுவதற் கான காரணத்தை ஆராய்ந்து காணவேண்டும். தீர்க்கதரிசிகளைக் குறைகூறியமை பற்றியும் பாலஸ்தீனத்தில் தாபனப்படுத்தப்பட்ட சமயமுறைக்கு எதிராக யேசு ஆற்றிய சொற்பொழிவுகள் பற்றியும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். கடைசிப் படியாக, கிறிஸ்தவர்களாகிய நாங்கள் விடுதலைக்கு உதவும் முகமாக என்ன செய்யலாம் என்று ஒருவரை ஒருவர் கேட்கவேண்டும். ஒடுக்கமுறைக்கு இட்டுச்சென்ற நிலையை நீக்குவதற்குப் போராட முடியுமா?,

இதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் சரித்திரச் சூழ்நிலையைப் பார்ப்பது முக்கியமானது. இறந்த காலத்தில் அவர்களுக்கிருந்த சாத்தியக்கூறுகள் யாவை, இப்பொழுது அவர்களால் என்ன செய்யமுடியும்? இதுதான் சுவர்க்கத்தின் ராஜ்யத்தின் தொடக்கம். யேசு தனது போதனையில் ‘சுவர்க்கத்தின ராஜ்யம் உன்னுள்ளேயே உள்ளது' என்று கூறுகிறார். பார்த்து, தீர்மானம் எடுத்துச் செயற்படுவதே விடுதலை பற்றிய சாஸ்திர அறிவு என்று சொல்லப்படுவதின் சாரங்களாகும். எங்களின் கலந்துரையாடல்களின்போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. ஒன்று வன்முறை பற்றியது, மற்றது நீண்டகாலமாக நான் தமிழர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும் ஏன் என்னால் தமிழில் பேசமுடியவில்லை என்பது பற்றியது.

யேசு சாத்வீக வழிநிற்போரைப்போற்றினார். போரின் பின்னர் அமைதியும் இணக்கமும் ஏற்படுவது பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. ஆனால் கடுமையான சரித்திரச் சூழ்நிலைகளில் எதுவித மறுமொழியும் சாத்தியமாகாது. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து பேச்சு வார்த்தை மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. எனவே இழந்த தமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராட வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிலக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள இராணுவத்தினால் தமது மக்கள் மீது புரியப்படும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவே அவர்கள் சண்டையிடுகிறார்கள். விடுதலை பற்றி உள்ளுக்குள் இருந்துகொண்டுதான் புரியமுடியும். ஒடுக்கப்பட்டவர்களது சரித்திரம் பற்றி அறியாதவர்கள், அது பற்றித் தீர்ப்புக்கூறத் தகுதியற்றவர்கள்.

தமிழர்களது விடுதலைப் போராட்டம் பற்றி நான் புரிந்துகொண்டதிலிருந்து கூறுவதென்றால், வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் தொடக்கப்பட்ட போராட்டமானது சிறீலங்காவின் நிலைக்கு அளிக்கப்படும் சரித்திர ரீதியான மறுமொழியேயாகும். கடைசியில் இப்போராட்டம் தமிழர்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து அவர்கள் விரும்பும் அமைதியைக் கொண்டுவருமென்பதே எனது நம்பிக்கை. வன்னியில் கேட்கப்பட்ட அடுத்த கேள்வி கூட்டுப் பொறுப்புரிமை பற்றியதாகும். ஒரே மொழியைப் பேசுவது என்பது ஒன்றாயிருப்பதற்கான முக்கியமாக அடையாளம் என்பதை காயமுற்ற புலிகள் மிகவும் தெளிவாகவே புரிந்துகொண்டிருந்தனர்.

விடுதலைக்கான போராட்டத்தில் கிருஸ்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்களோடு ஒரே கூறாக அல்லது அவர்களின் ஒரு பகுதியாகத்தானும் இருக்கவேண்டும் என்பது முக்கியம். ஆனால் நான் ஒரு தமிழன் அல்ல. நான் ஒரு ஜெர்மன் நாட்டவன். நான் முதலாவது பணக்கார உலகத்தின் ஓர் அங்கத்தவன். குடியேற்றத்தின்போது மக்களையும் நாடுகளையும் ஒடுக்கியதோடு, இன்று வரை பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டுவரும் ஒரு குற்றமுள்ள கலாச்சாரத்தின் அங்கத்தவன். நான் ஒரு செயற்கையான கூட்டுப்பொறுப்புரிமையைக் காட்டமாட்டேன்.

எனது நாட்டில் தமிழரது போராட்டத்திற்காக ஒரு நிலைப்பாடு எடுப்பேன். தமிழருடைய தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாளுக்காக நான் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். நான் அவரை என்றும் சந்தித்ததில்லை. அவர் சமாதானத்தின் ஓர் அடையாளம் மட்டுமல்ல, அதையும் விடக்கூடியவர். அவர், என்றும் தோற்கடிக்கப்படாத தமிழ் மக்களின் அடையாளம். எப்பொழுதும் தன்னம்பிக்கை கொண்ட மக்களின் அடையாளம் அவர். பல நூற்றாண்டுகளாக ஒடுக்கு முறைக்குள் வாழ்ந்துவிட்டு, தன்னம்பிக்கையுடன் வாழ முயல்வது ஒரு புத்தம்புதிய அனுபவமாகும். வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ் மக்களது தன்னம்பிக்கைளை மீளக்கொடுத்திருக்கிறார். அதனைத் தன்னுள் மீளக்கண்டு பிடிப்பது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

மானுட, சமூகவியல் ஆய்வாளர்,

ஜேர்மனி.

கலாநிதி அருட்திரு.

அல்பேட் கூலன்