செவ்வாய், 23 நவம்பர், 2010
ஈழப்போராட்டத்தில் சீலன் என்ற ஆளுமை
| சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர். தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி 'நாராயணசாமியும்' எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை. பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது. இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.) புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.) ![]() அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, 'அதோ அந்தப்பறவை போல…'. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார். அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது. புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் 'இதயச்சந்திரன்'. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான். புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது. சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை. ----------------------------------------------------- சீலனினதும் ஆனந்தினதும் நினைவாக மீசாலையில் நிறுவப்பட்டிருந்த நினைவிடமும் சிறுவர் பூங்காவும் சிங்களப் படையினரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த இடத்தில் நினைவிடம் மட்டும் நிறுவப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நினைவிடமே இது. ![]() |
வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.
| இன்று மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாள இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமது மக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13. 1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம்; ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது. ![]() ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப்படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்திலிருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப்பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள். ![]() போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர். ![]() கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறியபோதுதான் பெண்புலிகளின் பெயர்பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம். பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது. சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது. இதற்கிடையில் மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்ற நடவடிக்கை மூலம் ஒட்டிசுட்டான் இராணுவத்தாற் கைப்பற்றப்பட்டது. றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள். முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997). இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு. இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல். இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு. மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு. நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும். 2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?” பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான். ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது. இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம். இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான். இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள். வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது. ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது. ஜெயபாலனின் சொற்களில், "வன்னியில் மயிர் பிடுங்க வந்தோரின் தலை பிடுங்கி…." வென்றவரின் கல்லறைகள் அவைகள். |
செவ்வாய், 9 நவம்பர், 2010
எல்லாளன் நடவடிக்கை அணி மீது நடந்த கிளைமோர் தாக்குதல்! - சுபன்
22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.

இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது.

ஒரு ஆண்டிற்கும் மேற்பட்ட கடும் பயிற்சியில்தான் இந்த எல்லாளன் பிறப்பெடுத்தான். இதற்கான வேவு நடவடிக்கைகள் ஆண்டுக்காணக்காக நடைபெற்றன. வேவுப் போராளிகளின் நடவடிக்கையினால்தான் அந்தப் பிரமாண்டமான தளத்தின் பல உண்மைகள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கான வேவு நடவடிக்கைக்கென சிறப்பு அணியாக நான்கு பேர் கொண்ட வேவு அணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வேவு அணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தமிழ்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அநுராதபுர வான்படைத் தளத்தினை முழுமையாக வேவு அணியினர் கண்காணித்து ஒளிப்படம் (வீடியோ) எடுத்து, எங்கு எங்கு காவலரண்கள் இருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன, எந்த எந்தப் பகுதிகளில் விமானங்கள் தரித்து நிக்கின்றன என்பன தொடர்பான முழுமையான தகவல்கள் வேவு அணியினரால் சேகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களை உள்வாங்கி எல்லாளன் நடவடிக்கைகான செயற்திட்டங்கள் தமிழீழ தேசியத் தலைவரால் நேரடியாக வகுக்கப்பட்டு, படையப் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த றெட்ணம் மாஸ்ரர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்காக 21 கரும்புலிப் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கான திட்டம் வெளியில் அல்ல போராளிகளின் உயர் மட்டங்களில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் இரகசியம் காக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த 21 கரும்புலி போராளிகளிடமும் தாக்குதலுக்கான திட்டங்கள் நேரடியாக விபரிக்கப்படும். இந்தத் தகவல்களை உள்வாங்கி தாக்குதல் திட்டங்களை இந்த அணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ ஏனைய கரும்புலிப் போராளிகளுக்கும் அத்திட்டத்தை புரியவைப்பான்.

இந்தக் கரும்புலி அணியினருக்கான பயிற்சிகள் ‘அல்லா-4’ என்ற பயிற்சித் தளத்தில் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சில தேவைகள் கருதி வேறு இடங்களிலும் நகர்வுப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சி ஆசிரியருடன் லெப்.கேணல் இளங்கோவும் ஒரு பயிற்சி ஆசிரியராக அன்று செயற்பட்டுக்கொண்டிருந்தான்.
இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னான மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக அநுராதபுர வான்படைத் தளத்திற்கான இறுதி வேவு நடவடிக்கை லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் மேற்கொண்டிருந்தார்கள். அந்த இறுதி வேவு நடவடிக்கையே 8 மாத காலப்பகுதியாக நடைபெற்றது.
அனைத்து தரவுகளும் உறுதிப்படுத்திக்கொண்டு, இறுதி வேவு பார்த்துவிட்டு தளம் திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த வெடிவிபத்து இடம்பெற்றது. சிங்களக் கிராமங்களின் ஊடாக அனுராதபுர காட்டுப்பகுதியில் வேவுப் போராளிகள் சென்றுகொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுக்குழல் துவக்கில் அகப்பட்டு தமிழ்மாறன் காயம் அடைகின்றான். காயத்துக்கான முதலுதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வேவு அணியினர் நகர்கின்றார்கள். இவர்களின் வருகைக்காக அன்று மன்னார் மாவட்டத்தின் எல்லைப் பகுதி ஒன்றில் தளபதி றெட்ணம் மாஸ்ரர் அவர்களும், லெப்.கேணல் இளங்கோவும் காத்திருக்கின்றார்கள்.
அடம்பன் பகுதியில் வேவு அணியினர் இவர்களை சந்திக்கின்றார்கள். அங்கிருந்து வாகனம் ஒன்றில் கிளிநொச்சி நோக்கி பயணத்தை தொடர்கின்றார்கள். இந்த காலகட்ட பகுதியில் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை பரவலாக நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்நிலையில் இவர்களது வாகனமும் சிறீலங்காப் படையினரின் கிளைமோர் தாக்குலுக்கு இலக்காகின்றது. ஆனால் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. உடனடியாக வாகனத்தில் இருந்த இளங்கோ மற்றும் வேவு அணி போராளிகள் காட்டுக்குள் இறங்கி தாக்குதல் தொடுத்து, எதிரியை விரட்டிக் கலைத்தார்கள்.
அன்று அந்தக் கிளைமோர் தாக்குதலில் இவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால், எல்லாளன் நடவடிக்கை அன்றே இடைநிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சூள்நிலையில்தான் அன்றைய இறுதி வேவு தகவல்களுடன் போராளிகள் தலைமைப்பீடத்தினை சென்றடைந்து அங்கு அனைத்தையும் பற்றி விபரிக்கின்றார்கள். பின்னர் கரும்புலிகள் அணியினருக்கு விளங்கப்
படுத்துகின்றார்கள். எல்லாளன் நடவடிக்கைக்குரிய மாதிரிப் (மொடல்) பயிற்சியும் முடிந்துவிட்டது. மாதிரிப் பயிற்சி முடிந்துவிட்டால் இனி இறுதிச் சண்டைதான் என்ற மனசந்தோசதம் போராளிகள் மத்தியில் வந்துவிடும். இதன்பின்னர்தான் தலைவருடன் படம் எடுத்து, உணவு உண்டு அளவளாவி பேசி விடைபெறுகின்றார்கள். யாருக்கும் தெரியாமல் ஊர் மக்கள் உலாவிய அந்த வீதியால்தான் அநுராதபுரம் நோக்கி நகர்கின்றார்கள். அந்த 21 சிறப்புக் கரும்புலிகளும் அந்த இரவுப் பொழுதில் தாம் உலாவிய நகர்களுக்கு விடை
கொடுக்கின்றார்கள். இவர்கள் நகர்ந்து சொல்லவேண்டிய தூரம் 50 கிலோ மீற்றருக்கு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.
காட்டுக்குள்ளால் தங்களுக்கு தேவையான வெடிமருந்து உணவுகளுடன் எத்தனையோ ஆறுகளை தாண்டிசெல்லவேண்டிய தேவை. இவ்வாறு நகர்ந்து சென்றுதான் தமது இலக்கினை அடைந்துகொள்கின்றார்கள். இவர்களை அந்த வேவு அணி போராளிகள்தான் இலக்குவரை கொண்டுசென்று விடுகின்றார்கள். உண்மையில் சிங்கப்படையினைபோல் பிணந்தின்னும் கழுகுகளாக அவர்கள் போகவில்லை. இறுதியாக தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைகளை மனதில் சுமந்தபடியே சென்றார்கள். “இதுமுற்றுழுதாக படைத்தளம். அங்கு உங்கள் வீரத்தைகாட்டுங்கள். ஆனால் படை அதிகாரிகள் யாரினாவது குடும்பங்கள், பிள்ளைகள் அங்கு நிற்கக்கூடும். தாக்குதல் நடக்கேக்க அவர்களை பத்திரமாக அகற்றி, அவையளுக்கு ஒன்றும் நடக்காமல் பாத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைவரின் அக்கறையையும், மனித நேயத்தையும் அந்தக் கரும்புலி அணியினர் புரிந்துகொண்டிருந்தனர்.
தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைளை நினைவிற்கொண்டு அந்தக் கரும்புலி மறவர்கள் சிங்களத்தின் குகைக்குள் புகுந்துகொள்கின்றார்கள். அந்தவீரர்களின் ஒவ்வொரு நகர்வும் தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். 21 சிறப்பு கரும்புலிகள் தமிழீழ எல்லை கடந்து எதிரியின் எல்லைக்குள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அவர்கள் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அன்று அதிகாலை பொழுது நகர்ந்துகொண்டிருக்கின்றது.
முதன்நாள் இரவு சில தளபதிகளை தலைவர் அவர்கள் தனது இடத்திற்கு அழைத்திருந்தார். காரணம்தெரியாமலேயே தளபதிகள் அங்கு கூடியிருந்தனர். அப்போது, ‘இன்று உங்களுக்கு எல்லாளனை காட்டபோகின்றேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்துவரும் தகவல்களுக்காக தளபதிகளும் தலைவரும் காத்திருக்கின்றார்கள். பெரும் இலட்சிய நெருப்பை சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்து தமிழீழ மண்ணின் வரலாறாக வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில், இலக்கினை அடைகின்றார்கள் கரும்புலிகள்.
இந்த சிறப்பு கரும்புலிகள் அணியினருக்கு வழிகாட்டி அநுராதபுர தளத்திற்குள் கொண்டுசென்று விட்ட வேவு அணியினர், தகவல்களை தலைமைபீடத்திற்கு தெரியப்படுத்தி, உறுதிப்படுத்துவதற்காக ஒளிப்படம் எடுக்கின்றார்கள். தாக்குதல் தொடங்குவதில் இருந்து அநுராதபுரம் தீ மூழும்வரை ஒளிப்படம் எடுத்தவர்கள், கரும்புலிகள் அணியினரின் அனைத்து செயற்பாடுகளையும் தொலைத்தொடர்பு ஊடாக கேட்டுக்கொண்டு அதனை தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டும் நின்றார்கள்.
அதிகாலை 1.30 மணி, அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற வேளையில், உள்நுழைந்தவர்கள், அதிகாலை 3.00 மணிக்கு தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். 21 கரும்புலிகள் சுமார் ஏழு மணி நேரம் அப்பெரும் தளத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்திருந்தது ஒரு பெரும் சாதனை. சண்டை 10.00 மணிக்கு இறுதிக் கரும்புலியின் வீரச்சாவுடன் நிறைவுக்கு வருகின்றது. இலக்குகளை தாக்கி அழித்துவிட்டு பெரும் வெற்றியைத் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு கரும்புலிகள் அனைவரும் விழிகளை மூடிக்கொண்டார்கள்.
இவர்களின் வீரச்சாவை உறுதிப்படுத்திக்கொண்டுதான் லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் தாயகம் நோக்கி திரும்புகின்றார்கள். கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு பக்கபல உதவியாக விடுதலைப் புலிகளின் வான்புலிகளும் குண்டுகளை வீசி அநுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்துவிட்டு தளம் திரும்பி விடுகின்றார்கள். எதிரியின் சரமாரியான தாக்குதலுக்கு மத்தியிலும் வான்புலிகள் நடத்திய இந்தத் தாக்குதல் வான் புலிகளின் தாக்குதல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் சிறீலங்காப் படைக்கு உதவிக்கு வந்த உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டுவீழ்த்தப்படுகின்றது. ஒரு சில மணி நேரங்களுக்குள் பல கோடி பெருமதியான போர் விமானங்களையும், இராணுவ தளவாடங்களை இழந்தது. இந்த அவமானத்தை தாங்கமுடியாத சிங்களத் தலைமைகளும், சிங்களப் படையினரும் தமது ஆற்றமையினை அந்தப் போராளிகளின் வித்துடல்கள் மீது காண்பித்தார்கள். அந்த வழித்தோன்றல் நாகரீகம் சிங்களத்தோடு கூடப்பிறந்தது என்பதை முள்ளிவாய்கால் வரையான படுகொலைகளின் சாட்சியங்களும் இப்போது எடுத்துக்காட்டுகின்றன.
அன்று அந்த 21 சிறப்பு கரும்புலிகளும் அநுராதபுரம் வான்படைத் தளத்தில் மட்டும் தீயினை மூட்டவில்லை, பெரும் விடுதலைத் தீயினை உலகில் பரந்துவாழும் தமிழ் மக்களின் இதயங்களில் மூட்டியிருக்கின்றார்கள். நிச்சயம் தமிழீழம் அமைப்பது உறுதி அந்த மாவீரர்களின் இலட்சிய கனவு நனவாவதும் உறுதி.

புலி. சிங்களப் படையின் பெரும் இன அழிப்புப் போரில், முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய வீரன். அந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே விதையாக வீழ்ந்தான்.




