புதன், 27 ஜனவரி, 2010

பாதுகாப்பு வளையத்தில் பிரபாகரன்!

பாதுகாப்பு வளையத்தில் பிரபாகரன்!


இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித், வே.பிரபாகரன், யோகி

இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித், வே.பிரபாகரன், யோகி
திடீர் திருப்பமாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்துக்கு ஜூலை 19, 1987 அன்று வருகை தந்தார். அவருடன் வேறு சிலரும் வந்து விடுதலைப் புலிகள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மிகவும் அவசரமான சந்திப்பு எனவும் தெரிவித்தனர். உடனே பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு நடைபெற்றது.

சந்திப்பின்போது பிரபாகரனுடன் யோகி (எ) யோகரத்தினமும் இருந்தார். பூரி, அவர்களிருவரிடமும், இந்தியா-இலங்கைக்கு இடையே ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கையெழுத்திடும் முன்பாக பிரபாகரனைச் சந்திக்க பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புகிறார் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரபாகரன் மேலும் கேட்டதற்கு, அதுபற்றிய விவரங்களை பிரதமர் தெரிவிப்பார் என்றும், விவரம் குறித்து அவரிடம் விவாதிக்கலாமென்பதையும் பூரி தெரிவித்தார்.

பிரபாகரனும் யோகியும் இதுகுறித்து தங்களுக்குள்ளே யோசிக்கவும், "இதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். மிக முக்கியமான விஷயம். இதைத் தவறவிட வேண்டாம்' என்று பூரி அவர்களைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார்.

பிரபாகரன் தில்லிக்குச் செல்ல ஒத்துக்கொண்டார். அதே வேளையில் அன்டன் பாலசிங்கமும் எங்களுடன் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். பூரி தில்லிக்குத் தொடர்புகொண்டு பாலசிங்கம் உடன் இருப்பதற்கான உறுதியைப் பெற்றார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக பாலசிங்கத்தை, காவலர்கள் குழு ஒன்று அழைத்துச் சென்றது. அங்கே அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பிரபாகரனும் மற்றவர்களும் சென்னை வருகிறார்கள் என்றும் அவர்களுடன் விமானநிலையத்தில் சேர்ந்துகொண்டு டெல்லி செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. (சுதந்திர வேட்கை நூலில் அடேல் பாலசிங்கம்-பக்.170)

அடுத்த நான்கு நாட்கள் கழிந்த பின்னர் ஜூலை 23-ம் தேதி, யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் திடலில் இரு ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்கின. ஹெலிகாப்டரில் ஏறும் முன்பாக விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எழுந்துள்ள ஒப்பந்தத்தை முன்னிட்டு இந்தியா செல்கிறேன். அது ஒப்பந்தமோ அல்லது வேறு எதுவுமோ, எதுவாக இருந்தாலும் தமிழீழ மக்களின் நலன் காக்கப்படும் விதத்தில் அமைந்தால் மட்டுமே ஏற்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அங்கு வந்திருந்த பூரியிடம், "எந்த நிலையில் எங்களது தலைவரையும் தளபதிகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறோமோ அதே நிலையில், அவர்களை இங்கே கொண்டுவந்து சேர்க்கவேண்டும்' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

அவரும் அவ்வாறே இந்தியா நடந்துகொள்ளும் என்று உறுதியளித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், யோகி (எ) யோகரத்தினம், யாழ்ப்பாணம் அரசியல் செயலாளர் திலீபன் ஆகியோரையும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் நோக்கிப் பறந்தது.

விமானநிலையத்தில் இவர்கள் வருவதற்கு முன்பாகவே அன்டன் பாலசிங்கம் வந்திருந்தார். அங்கு பாலசிங்கத்தைச் சந்தித்ததும், "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்தவிருக்கும் ஒப்பந்தம் குறித்துத் தெரிவிக்கவும், ஆலோசிக்கவும் என்று வரச்சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் எதுவும் தெரியவில்லை. பூரியிடம் கேட்டால் அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார். அவர் திரும்பத் திரும்பச் சொல்வது தில்லியில் இந்தியத் தூதர் உங்களுக்கு விளக்குவார் என்பதுதான்' என்று பிரபாகரன் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் விமானத்தில் தில்லி கிளம்பினர். சில மணி நேரங்களில் தில்லி வந்ததும், அவர்கள் தங்குவதற்காக ஒரு தளமே நட்சத்திர ஓட்டலான "ஓட்டல் அசோகா'வில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 513 எண் கொண்ட அறைக்கு பிரபாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஓட்டலின் வெளியே கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பிரபாகரன் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, "உங்களது பாதுகாப்புக்காகத்தான்' என்றார்கள். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை இருந்த தளத்திலும் கருப்புப்பூனை அதிரடிப்படையினர் காவல் காத்தனர்.

அவர்கள் கைகளில் உயர்ரக ஆயுதங்கள். ஓட்டலின் அறையில் காலடி எடுத்துவைக்கும்போது, "உச்சகட்ட பாதுகாப்பில் இந்த அறையில் தங்குகிறீர்கள். அனுமதியின்றி இங்கிருந்து நீங்கள் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது. அறையிலுள்ள டெலிபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன' என்று உடன் வந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அடுத்தடுத்த சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலைக்குப் பிரபாகரனும் மற்றவர்களும் ஆளானார்கள்.

"பாலா அண்ணே, இந்த தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்பது நமக்கு வைக்கப்பட்ட பொறி' என்று பிரபாகரன் சொன்னார்.

சற்று நேரத்தில் இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் அவர்களின் அறைக்குள் நுழைந்தார். அவரது முகம் இறுகின நிலையில் இருந்தது. சோபாவில் அமர்ந்தார். தனது பாக்கெட்டிலிருந்து "பைப்'பை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு புகையிலைத் துகள்போட்டு பற்றவைத்துக்கொண்டார். இரண்டு மூன்று தடவை புகையை இழுத்து வெளியேவிட்டார்.

பிரபாகரன் உள்ளிட்டோர் இவரது செயலையே பார்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் பேசவில்லை. அவர் சொல்லப்போகும் செய்தியை அறிந்துகொள்வதில் அவர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் அவர் வாய்திறந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படப்போவதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு செல்லவிருப்பதாகவும், அவ்வொப்பந்தம் தமிழர்களுக்கு நியாயமான தீர்வாக இருக்கும் என்றும், தெரிவித்துக்கொண்டே வந்தவர், ""நீங்கள் இந்த ஒப்பந்தத்தை கட்டாயம் ஆதரிக்கவேண்டும்'' என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, ""இதோ அவ்வொப்பந்தத்தின் ஆங்கிலப் பிரதி'' என்று பாலசிங்கத்திடம் நீட்டி, ""இதனைப் பிரபாகரனுக்குத் தமிழ்ப்படுத்திச் சொல்லுங்கள். நான் இன்னும் இரண்டுமணி நேரத்தில் திரும்பி வருவேன். வரும்போது நீங்கள் இதன்மீது சாதகமான முடிவொன்றைத் தெரிவிக்கவேண்டும்'' என்று கூறிவிட்டு, அவர் அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

1. ஒப்பந்தத்தில் இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாடு வலியுறுத்தலும்,

2. தமிழ் பேசும் மக்களுக்கான மாகாண சுயாட்சி

3. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகள்

4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

5. வடக்கு-கிழக்குப் பகுதிகள் இணைப்புக்கு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு.

போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டிருந்தது அந்த ஒப்பந்தம். சாதகமான அம்சம் என்னவென்றால் வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு ஏற்றுக்கொண்டமைதான்.

மற்றொன்று போராளி இயக்கங்களை அங்கீகரித்ததும் அதன் உறுப்பினர்களைப் "போராளிகள்' என்றழைத்தது ஆகும். மத்திய அரசின் அதிகாரங்களை வலியுறுத்தும்போது வெளிப்படையாகவும், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு -விஷயத்தில் பூடகமாகவும் செய்திகள் உள்புகுந்திருந்தன. மொழி விஷயத்தில் சிங்களம் மட்டும்- ஆனால் தமிழும் ஆங்கிலமும் கூட இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்று உறுதியாகக் கூறப்படவில்லை.

"எஞ்சிய விஷயங்கள்' பேசித் தீர்க்கப்படும் என்பதிலும் பல உட்பொருள்கள் இருந்தன. இவையெல்லாவற்றையும்விட ஒப்பந்தம் கையொப்பமான 72 மணிநேரத்தில் போராளி அமைப்புகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்ததைக் கண்ட பிரபாகரனின் கண்கள் சிவந்தன.

அவர், "இல்லை-முடியாது-இந்த ஒப்பந்தத்தை ஏற்கவே முடியாது' என்று கொதித்தெழுந்து சொன்னார்.

தீட்சித் இரண்டுமணி நேரம் அவகாசம் கொடுத்தார். அந்த அளவுக்கு நேரம் தேவைப்படவில்லை. மேற்கொண்டு படிக்கத் தேவையில்லாத ஒப்பந்த வரைவாக அது அமைந்துவிட்டது.

இரண்டு மணிநேரம் கழித்து, அந்த அறைக்கு தீட்சித் வந்தார். வந்ததுமே, "தீர்மானத்துக்கு வந்தாகிவிட்டதா?' என்ற கேள்வியை எழுப்பினார்.

பாலசிங்கம், "நாங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதற்கில்லை' என்றார்.

"ஏன், என்ன காரணம்?' கேட்டார் தீட்சித்.

"சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களின் விருப்பத்தை ஒப்பந்தம் பூர்த்தி செய்வதாக அமையவில்லை. மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஆயுதம் ஒப்படைப்பு என்பதை ஏற்பதாக இல்லை. உறுதியான தீர்வும், தமிழ்மக்களுக்கு உரிய பாதுகாப்பும் ஏற்படும்வரை நாங்கள் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா எவ்வாறு கேட்கக்கூடும்.

இந்த ஆயுதங்களை நாங்கள் எந்த அரச பயங்கரவாதிகளிடம் இருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பறித்தோமோ, அதே அமைப்பிடம் இவை திரும்பப் போய்ச்சேரும். நாங்கள் ஆயுதங்களைக் கையளிப்பது என்பது நடக்கவே நடக்காது' என்று சொன்னார்.

தீட்சித் இந்த வாதத்தை ஏற்கவில்லை. "இது ஒரு அருமையான திட்டம். இதை நிறைவேற்றியே தீருவோம். இந்திய அமைதிப்படை இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஆயுதம் எதற்கு? எங்களை நம்புங்கள். யோசியுங்கள்' என்றார்.

பிரபாகரன் தரப்பினர் பதிலளிக்காமல் இருக்கவும், "நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி. இது இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம்' என்றார்.

பிறகு மறுபடியும் தீட்சித்தே பேசினார், "நீங்கள் இதை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்.'

"அப்படியா, என்னமாதிரியான விளைவு?' என்று யோகி கேட்டார்.

"நீங்கள் இந்த அறையிலேயே சிறை வைக்கப்படுவீர்கள்-ஒப்பந்தத்தை ஏற்கும்வரை' என்றார் தீட்சித்.

பாவை சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக