[ வெள்ளி நாதம் ] - [ Jan 28, 2010 05:00 GMT ]
யோ.செ.யோகி பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப.; ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவடைந்த செய்தியானது உலகெங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அறிந்தோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வன் உலகெங்கும் புலிகளோடு தொடர் புடையோருக்குத் தெரிந்த முகம். ஒரு வகையில் தமிழீழம் வேண்டி நிற்கின்ற நியாயபூர்வமான சமாதானத்தின் முகம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அவர் பணியாற்றியிருந்தார். யாழ்ப்பாண இடப்பெயர்வு, சத்யெய, செயசிக்குறு போன்ற சிங்களப் படையின் படையெடுப்புக்கள் போன்ற மிக இக்கட்டான காலத்தில் பல இன்னல்களுக்கிடையே அவர் ஆற்றிய பங்கு அளப்பெரியது. தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று அவரது ஊனை உருக்கி அவர் பணியாற்றினார்.
தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழப் பொருண்மியம், தமிழீழ மருத்துவ சேவை, தமிழீழ ஊடகங்கள், தமிழீழ விளையாட்டுத்துறை என அவர் பல துறைகளைக் கவனித்த படி களமுனைகளிலும் செயலாற்றினார்.
உலக அரசியல் என்பது சிக்கலானது. அது ஒரு கூரான கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது. எமது போராட்டத்திற்கான நியாயங்களைக்கண்டு கொள்ளாது எம்மில் பிழைகாண வழிதேடும் உலகத்தோடு பேசி வெற்றி காண்பது என்பது ஒரு வகையில் கல்லில் நார் உரிக்கும் பணிதான்.
தமிழீழத் தேசத்தின் குரல் பாலா அண்ணாவோடு இணைந்தும் அவரின் மறைவின் பின்பு தனித்தும் அவர் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார். தமிழீழ மக்களின் உரிமையைவிட்டுக்கொடாது அதேவேளை அமைதித்தீர்வில் ஆர்வங் காட்டியோரோடு பகை முரண் ஏற்படாத வகையில் அவருக்கே உரிய இயல்பான அழகான புன்னகையுடன், பணிவுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தமிழீழப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்திற்கு சிறிது சிறிதாகப் பலம் சேர்த்தது.
இன்று உலகு எமது நியாயபூர்வமான போராட்டம் குறித்து நன்கறிந்துள்ளமைக்கும் சிங்கள தேசத்தின் பேரினவாதத்தைப் புரிந்து கொண்டுள்ளமைக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது தேசத்தின் குரலோடு இணைந்து அவர் செயற்பட்ட முறையும் வைத்த கருத்துக்களுமே பெருமளவிற்கு காரணமாய் அமைந்தது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது.
தமிழீழ மக்கள் மனதில், புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மனதில், தமிழ்நாட்டு மக்கள் மனதில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோர் மனதில் அவர் தமிழீழம் வேண்டி நிற்கும் நியாயபூர்வமான அமைதியின் முகமாகவே காட்சி தந்தார்.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் போராட்ட வாழ்வு மிக நீண்டது. ஏறத்தாழ இருப்பத்து மூன்று ஆண்டுகள் அவர் நேடியாகத் தமிழீழப் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளார். தமிழ்ச்செல்வன் 29.07.1967 இல் மட்டுவிலில் பரமு, விசாலாட்சி ஆகியோருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். இவர் கல்வியை சாந்தநாயகி வித்தியாலயத்திலும் மட்டுவில் மகாவித்தியாலயத்திலும் கற்றார். வகுப்பில் தொடர்ச்சியாக முதல் மாணவனாக வந்தார். இவரின் நல்லியல்பு காரணமாக வகுப்பில் தொடர்ச்சியாக மாணவ முதல்வனாகவும் இருந்து வந்தார். க.பொ.த. சாதாரண தேர்வில் சித்தியடைந்து உயர்தர வகுப்பில் கற்கும் போதே விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 இல் இணைந்தார்.
தமிழ்ச்செல்வனின் அண்ணர் மூர்த்தியும் அவர் குடும்பத்தினரும் இடதுசாரி அமைப்பின் சார்பில் பல போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள். மூர்த்தி அண்ணர் தமது அரசியற்பணிக்கான எழுத்துக்களை தமிழ்ச்செல்வனைக் கொண்டே படியெடுத்து வந்தார். அவரது எழுத்து அழகாக இருக்கும். தமிழ்ச்செல்வனுக்குத் தெரியாமலேயே அவரது வீடு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் வந்து செல்லும் இடமாக இருந்தது. மூர்த்தி அண்ணரோடு அவர்களுக்குத் தொடர்பிருந்தது. அங்கு வந்து போகும் விடுதலைப் புலிகள் உறுப்பினரும் தமிழ்ச்செல்வனின் உறவினருமான மேயர் மாறன் தமிழ்ச்செல்வனை விடுதலைப் புலிகளோடு இணைத்து இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார்.
அவர் 1984-இல் விடுதலைப் புலிகளின் நான்காவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றார். அப்போது, அவரது இயக்கப் பெயர் தினேசு ஆகும். பின்னாளில் தூய தமிழில் பெயரை மாற்றியபோது அவர் அவரது இயற்பெயரான தமிழ்ச்செல்வன் என்ற பெயரா லேயே அறியப்பட்டார். தலைவரின் மெய்க்காவலர் அணியில் முதலில் கடமையாற்றிய அவர் 1987-இல் தென்மராட்சிக் கோட்டத் தளபதியானார். 1991 இல் யாழ். மாவாட்டத் தளபதியாகப் பணிபுரிந்த அவர் 1993 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளரானார்.
1987 இல் இந்தியப் படை போர் தொடுத்தபோது தென்மராட்சியுள் நின்று அவரது அணியினரை ஒருங்கிணைத்துப் பல தாக்குதல்களை வழி நடத்தி அதன் இருப்பைக் கேள்விக்குறியாக்கினார். 'இக்காலப் பகுதியில் சாரமணிந்து, காலணிகள் அற்று தமிழ்ச்செல்வன் நாவற்குழியிலிருந்து, சுண்டிக்குளம் வரை நடந்து செல்லாத இடமில்லை. மிருசுவிலில் முப்பது படையினரைக் கொண்டிருந்த இந்தியப்படையின் சிறு பாசறை மீதான தாக்குதலில் முதலில் இரு கைக்குண்டுகளுடன் குதித்தவர் அவர்தான்" என திரு.பாப்பா அவரது துணிவைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் படை தென்மராட்சியினைக் கைப்பற்றிய பின்பு அங்கு இந்தியப்படையுடன் செயற்பட்ட துரோகக்கும்பலை மட்டுவில் நுணாவில் வீதியில் வைத்து லெப். கேணல் குணா, பாப்பா ஆகியோர் தாக்கி ஒரு பு3 இனையும் 2 ளுடுசு இனையும் முதலில் கைப்பற்றினர். இதனை அடுத்து தமிழ்ச்செல்வன் தானே நேரில் வேவு பார்த்து நாகர்கோயில் எடுதுமட்டுவாளுக்கான கண்டல் வீதியில் இந்தியப் படையைத் தாக்கி 2 ளுடுசுஇ 2 ளுஆபுஇ ஒரு தொலைத்தொடர்புக் கருவி ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
ஒருமுறை உசன் பகுதியில் நாற்பத்தைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகளால் தமிழ்ச்செல்வன், ரேகா, ரவி, லெப். கேணல் அம்மா உட்பட ஆறு பேர் சுற்றிவளைக்கப்பட்டனர். தமிழ்ச்செல்வன் உடனடியாக அங்கு மற்றையோருடன் நிலையெடுத்துக் கடுமையாகத் துரோகக் கும்பலுடன் பொருதி அவர்களில் பலரைக் கொன்று விரட்டி அடித்தார்.
இன்னுமோர் முறை லெப். பாபு, கப்டன் நடேசு ஆகியோர் துரோகக் கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து கடுஞ்சினமடைந்த தமிழ்ச்செல்வன் அவர்களது உடல்களை தான் வரும் வரை விதைக்க வேண்டாம் எனக் கூறிவிட்டு இந்தியப் படையைத் தேடியலைந்தார். வேல் சினிமாவில் நிலைகொண்டிருந்த இந்தியப் படை டச்சு வீதியால் வெளிவருவதாக அறிந்து உடனடியாக அவரது அணி அங்கு சென்றது. விடுதலைப் புலிகளின் வருகையை அறிந்ததும் அவர்களது பாசறைக்கு விரைந்து பின்வாங்கிய இந்தியப் படையினரைப் பாசறை வாசல் வரைச் சென்று தாக்கி சிலரைக் கொன்று அவர்களின் சுடுகலங்களை எடுத்துச் சென்று வீரச்சாவடைந்த வீரர்கள் அருகே வைத்த பின்பே அந்த வித்துடல்களை விதைத்தார்.
ஈ.என்.டி.எல்.எவ் துரோகக் கும்பல் சாவகச்சேரி தனங்கிளப்பில் ஒரு வீட்டில் நிலை கொள்கின்றது என்பதை அறிந்து எப்படியும் அந்தக் கும்பலை அழித்துவிட வேண்டும் எனத் தமிழ்ச்செல்வன் ஆணையிட்டார். ஒரு ஊர்தியிற் சென்று திடீரென இறங்கித் தாக்குதலைத் தொடுத்து அங்கிருந்தோரைக் கொன்ற பின்பு அவர்கள் இருந்த இடத்தை இரண்டு 25 லீற்றர் வெடிபொருள் கொள்கலங்கள் மூலம் அவரது அணியினர் தகர்த்தழித்த பின்பே அவர் அமைதியானார்.
இந்தியப்படை இம்மண்ணை விட்டு வெளியேற முதல் பளையிலிருந்து புளோப்பளை நோக்கி நூறு படையினருடன் நகர்ந்தபோது அந்த அணியை இருபது பேருடன் தமிழ்ச்செல்வன் எதிர்கொண்டு விரட்டி அடித்தார். அந்தச் சண்டையில் எட்டு இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். மூன்று மணி நேரச் சமரின் பின் இந்தியப்படை பின்வாங்கியது.
ஒரு முறை தமிழ்ச்செல்வனைத் தேடி மூன்று நாட்கள் கண்டல் காட்டுப் பகுதியிலிருந்து விட்டு நூறு இந்தியப் படையினர் வடமராட்சி, கனகம்புள்ளியடி சாலை வழியே இருபக்கமாக வந்து கொண்டிருந்தனர். ஒரு ஈருருளியில் பாப்பா அதை ஓட்ட தமிழ்ச்செல்வன் முன்னிருக்க ஓர் ஒழுங்கையால் வீதிக்கு வந்து இடது புறம் திரும்பியபோது தமக்கு முன்னால் இந்தியப்படை இரண்டு வரிசையில் வருவதை இருவரும் கண்டனர். இந்தியப் படையை கைச்சுடுகலனால் சுட்டு விட்டு நச்சுவில்லையை கடிப்பதா இல்லையா என்ற மனப்போராட்டத்தோடு இருவரும் வீதியின் நடுவாக இந்தியப் படையைப் பார்த்துச் சிரித்தபடி நகர்ந்தனர். களைப்படைந்திருந்த இந்தியப்படை சாரத்தை மடித்துக் கட்டியபடி ஈருருளியிற்சென்ற இவர்களைக் கண்டபோதும் இவர்கள் யார் எனக் கேட்காமலேயே நகர்ந்து சென்றது. இந்தியப்படையை விலத்தியதும் அடுத்திருந்த ஒழுங்கை வழியாக ஈருருளியைச் செலுத்தி இருவரும் தப்பிச் சென்றனர்.
ஆகாயக் கடல்வெளிச் சமரின்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்காக அதனைத் தமிழ்ச்செல்வனே எடுத்தார் என எண்ணித் தலைவர் அவரைக் கடிந்து கொண்டார். அந்த முடிவை தமிழ்ச்செல்வன் எடுக்காதபோதும் அவர் அதனை மறுக்காது அமைதியாக இருந்தார். பின்பு அவர் களமுனையில் மிகவும் மூர்க்கமாகச் சமரில் ஈடுபட்டு விழுப்புண்ணடைந்தார்.
தமிழ்ச்செல்வன் தான் கடிந்ததால்தான் இவ்வாறு மூர்க்கமாகப் போரிட்டு விழுப்புண்ணடைந்தாரோ என எண்ணிய தலைவர் அவருக்கு 'நான் உன்னை ஒரு பிள்ளைபோல வளர்த்தேன் நான் கடிந்தேன் என்பதற்காக நீ மூர்க்கமுடன் போராடி விழுப்புண்ணடைந்தாய் என அறிந்தேன்." என மனங்கலங்கி ஒரு கடிதத்தை எழுதி என்னிடம் தந்தார். அக்கடிதத்தை மருத்துவமனையில் படுத்திருந்த தமிழ்ச்செல்வனுக்கு வாசித்தேன். அவர் மிகவும் நெகிழ்ந்து போனதை அப்போது கண்டேன்.
ஆகாயக் கடல்வெளிச் சமரின்போது விழுப்புண்ணடைந்த போதும் அதை உணராது மிகுந்த மூர்க்கத்துடன் சமரில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வனை எவ்வாறு மிகக் கடினப்பட்டு பின்னால் அழைத்து வந்தோம் என அவரது வீரம் குறித்து திரு.பொட்டு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச்செல்வனின் இயல்பை, ஆற்றலை அவரது இளமைக்காலத்திலேயே தலைவர் நன்கு அறிந்திருந்தார். அதன் காரணமாகவே அவர் அவரைப் படிப்படியாக வளர்த்தெடுத்தார். தமிழ்ச்செல்வன் அவரது வழிகாட்டலின் கீழ் அவரது நம்பிக்கைக்கு எவ்வித குறைவும் ஏற்படாத வகையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து ஓர் ஆளுமைமிக்க அரசியற்றுறைப் பொறுப்பாளராக வளர்ச்சியடைந்தார்.
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இழப்பு என்பது ஏறத்தாழ இருப்பத்து மூன்று காலப்போராட்ட வாழ்வின் பட்டறிவின் இழப்பு, குறிப்பாகப் போராட்ட வாழ்வில் நாம் எதிர்கொண்ட இந்தியப் படையெடுப்பு, சிங்கள அரசின் செயசிக்குறு படையெடுப்புப் போன்ற மிகுந்த இடர்மிகு காலத்தில் செயற்பட்ட பட்டறிவின் இழப்பு, பதின்மூன்று ஆண்டு கால நீண்ட அரசியற்றுறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய பட்டறிவின் இழப்பு, சிறிலங்கா அரசோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பட்டறிவு இக்காலப்பகுதியில் உலகத் தூதுவர்கள், தலைவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் பட்டறிவு எனப் பல்வேறு பட்டறிவுகளின் இழப்பாகும். இவற்றை ஈடுசெய்தல் கடினம்.
இவற்றிற்கு அப்பால் தலைவர் மேல், போராட்டத்தின் மேல், தமிழீழத்தின் மேல் பற்றுறுதி கொண்ட வரும் இயல்பான புன்னகையோடு எல்லோருக்கும் அன்பு மகனாய், அண்ணனாய், தம்பியாய் இருந்த ஒருவரினது இழப்பாகும்.
கப்டன் பண்டிதர், லெப். கேணல் திலீபன் போன்ற ஆளுமைமிக்கோரின் வீரச்சாவை அடுத்து வஞ்சினங்கொண்டு எழுந்தது போன்றே பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரச்சாவின் பின்பும் தமிழீழப் போராட்டம் வஞ்சினம் கொண்டு எழும். நிச்சயம் தமிழீழத்தை அமைத்தே தீரும்.
- தென்மராட்சிக் களத்தகவல்களைத் தந்தவர் திரு. பாப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக