இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினரும், புலிகளின் தற்காப்பு வெடிகுண்டு அணியும். |
வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல்இ இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது. வான் புலிகளைத் தேடியே விமானப் படையினர் இந்தக் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். புலிகளின் வான் வழித் தாக்குதலையடுத்து அவசர அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்த படைத்தரப்பு தற்போது வான் புலிகளின் அடுத்த வருகைக்காக காத்திருக்கின்றனர். வான் புலிகளை வரவழைப்பதற்காகவே வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் வான் புலிகளை முழு உலகிற்கும் அறிமுகப்படுத்தியது. அன்று வான் புலிகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் அடுத்த தடவையாவது புலிகளின் வானூர்திகளை அழித்துவிட வேண்டுமென்பதில் அரசும் படைத்தரப்பும் குறியாகவுள்ளன. புலிகளின் முதல் தாக்குதல் நடைபெற்று சுமார் ஒரு மாதங்களாகிவிட்ட நிலையில் அவர்கள் அடுத்த தாக்குதலை எங்கேஇ எப்போது நடத்துவார்களென்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தாக்குதலின் போது படையினர் அதனை எவ்வாறு எதிர்கொள்வரென்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பும் பேசினாலும் அது சாத்தியப்படாததொன்றாகவேயுள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுகள் நடைபெற வேண்டுமென புலிகள் வலியுறுத்துகையில் அந்த உடன்பாட்டின் அடிப்படையில் பேச்சுகள் நடத்தத் தாங்கள் தயாரில்லையென அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டதுடன் அந்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் பேசுவதென்றால் கிழக்கில் இராணுவத்தினர் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து அவர்கள் விலக வேண்டும். போர்நிறுத்த உடன்பாடானது வடக்கு - கிழக்கில் இரு தரப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் எல்லை நிர்ணயம் செய்கிறது. இதனால்இ இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதாயின்இ இந்த உடன்பாடு கைச்சாத்திட்ட காலப்பகுதியில் இருதரப்பும் எங்கெங்கு நிலைகொண்டிருந்தார்களோ அந்தந்த இடங்களுக்கு அவர்கள் செல்ல வேண்டும். ஆனால்இ கிழக்கில் புலிகள் வசமிருந்து பல பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்டதாகக் கருதும் அரசுஇ அந்தப் பிரதேசங்களை புலிகளிடம் மீண்டும் ஒப்படைக்கத் தயாரில்லை. இதனால்இ போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் பேசத் தயாராயில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரம்இ போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்தும் விலக அரசு தீர்மானித்துள்ளது. தற்போது கிழக்கில் பெற்ற வெற்றியைப் போல் வடக்கிலும் பெற முடியுமெனக்கருதும் அரசுஇ வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளைத் தொடங்க இந்த உடன்பாடு பெரும் தடையாகவேயிருக்குமெனக் கருதுகிறது. இதனால்இ போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி முழு அளவில் போர்ப் பிரகடனம் செய்ய அரசு விரும்புகிறது. சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சியின் அடித்தளமே இந்தப் போர்நிறுத்த உடன்பாடுதான். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. ஆனால்இ புலிகள் இன்று பலமிழந்துவிட்டதாகக் கருதும் அரசுஇ இந்த உடன்பாடானது படையினரின் நடவடிக்கைகளுக்கு மிகப் பெரும் தடையாகவிருக்குமெனக் கருதுகிறது. ஆனாலும்இ இந்த உடன்பாட்டிலிருந்து ஒருதலைப்பட்சமாகத் தான் விலகிவிடுவதை அரசு விரும்பவில்லை. உடன்பாட்டின்படி 14 நாள் முன்னறிவித்தலை கொடுத்துவிட்டு விலகிவிடலாம். ஆனால்இ அது சர்வதேச ரீதியில் தங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமெனக் கருதும் அரசுஇ அதனை மக்களைக் கொண்டு ரத்துச் செய்ய விரும்புகிறது. போர்நிறுத்த உடன்பாடு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அதன் மூலம் உடன்பாட்டை நிராகரித்துவிடத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்இ மக்கள் ஏற்காத உடன்பாடொன்றை தாங்களும் ஏற்கப் போவதில்லையெனக் கூறி அதிலிருந்து விலகி முழு அளவில் புலிகளுக்கெதிரான போரில் இறங்கிவிடலாமெனக் கருதுகிறது. அண்மையில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில்இ இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமென பெருமளவு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கிழக்கில் அண்மைக் காலமாக படையினர் பெற்ற வெற்றியும் தற்போதைய யுத்தமுனைப்புகளுமே தென்னிலங்கை மக்களை இராணுவத் தீர்வுக்கு ஆதரவு வழங்கச் செய்துள்ளது. இந்த மக்கள் கருத்துக் கணிப்பும் போர்நிறுத்த உடன்பாடு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அரசைத் தூண்டியுள்ளது. இதன்மூலம் சமாதான முயற்சிகளை விடுத்து புலிகளுக்கெதிராக முழு அளவில் போரொன்றை தொடுக்க அரசு தீர்மானித்துவிட்டது தெளிவாகிறது. பல்வேறு நாடுகளிலிருந்தும் வாங்கிக் குவித்துள்ள ஆயுதங்களை புலிகளுக்கெதிரான போரில் பயன்படுத்திவிட வேண்டுமென்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது. மக்களே சமாதான முயற்சியை விரும்பாது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்குமாறு அனுமதி வழங்குகையில் பேச்சுக்கான தேவையில்லையெனக் காண்பிக்கவும் அரசு விரும்புகிறது. போர்நிறுத்த உடன்பாடானது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டால்இ அது சமாதான முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கும் செயலென்பதுடன் வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு அரசுக்கு கிடைக்கும் மக்கள் அங்கீகாரமாகவே கருதப்படும். சர்வதேச ரீதியிலும் இதனை நியாயப்படுத்த அரசும் முயலும். போர்நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து போருக்கு அங்கீகாரம் வழங்கும் தென்னிலங்கை மக்களின் செயலானது யுத்தம் வடக்கு - கிழக்கில் மட்டுமே நடைபெற வேண்டுமென அங்கீகரிப்பதாயிராது. அது முழு நாட்டுக்குமுரியதாயிருக்குமென்பதை அவர்கள் உணர வேண்டும். அதனால்இ போர்நிறுத்த உடன்பாட்டை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிராகரிப்பதென்பது முழு நாட்டையும் போருக்குள் தள்ளிவிடுவதற்கு தென்னிலங்கை மக்கள் வழங்கும் அங்கீகாரமாகவேயிருக்கும். வடக்கு - கிழக்கில் அண்மைக்காலமாக அரசு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகையில் புலிகளும் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். வான் புலிகளின் வருகையானது இதனையே காட்டுகிறது. இதைவிட யாழ். குடாநாட்டிற்குள் புலிகளின் தற்காப்பு வெடிகுண்டு அணி' ஊடுருவியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது. கரும்புலி அணி போன்றல்லாது இந்த ஹதற்காப்பு வெடிகுண்டு அணி'யின் செயற்பாடிருக்குமென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது. இடுப்புப் பட்டியில் வெடி குண்டைப் பொருத்திக் கொண்டு இந்த அணி தனது தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும். படையினரிடம் இவர்கள் பிடிபடும் பட்சத்தில் சயனைட் உட்கொள்ள மாட்டார்கள். மாறாகஇ தங்கள் இடுப்புப் பட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் குண்டை வெடிக்க வைத்து தாங்களும் இறப்பதுடன் தங்களைப் பிடிக்க முயலும் படையினரையும் கொல்வதே இந்தத் ஹதற்காப்பு வெடிகுண்டு அணி'யின் நடவடிக்கையாக இருக்கும். போராளி ஒருவர் சயனைட் அருந்தி இறப்பதை விட படையினருக்கும் இழப்பை ஏற்படுத்தும் புதிய உத்தியில் புலிகள் இறங்கியுள்ளனர். இதனைப் படையினரும் அறிவர். ஏற்கனவேஇ இரு சம்பவங்கள் இவ்வாறு நடந்துள்ளன. ஆனைக்கோட்டையிலும் யாழ் நகரில் நாவலர் வீதியிலும் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை கரும்புலித் தாக்குதலென படையினர் கூறியிருந்தனர். ஆனால்இ இரு இடங்களிலும் படையினருக்கு இழப்புகளை ஏற்படுத்திவிட்டு தங்களையும் அழித்துக் கொண்டவர்கள் புலிகளின் ஹதற்காப்பு வெடிகுண்டு அணி'யைச் சேர்ந்தவர்களே. இதுபோன்று புலிகளின் பல்வேறு செயற்பாடுகளும் களமுனையில் படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படுகின்றன. இவற்றை எதிர்கொள்வதில் படையினர் தற்போது புதிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். வான் புலிகளின் வருகை படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வான் புலிகளை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு - கிழக்கு எல்லைப்புறங்களிலுள்ள படைமுகாம்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அத்துடன்இ முக்கிய படைத்தளங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்படவுள்ளன. மிகவும் தாழ்வாகப் பறக்கும் புலிகளின் விமானங்களை கண்டறிவதற்காக மிக நவீன ராடார்களை கொள்வனவு செய்வதிலும் அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது. வான் புலிகள் மீண்டுமொருமுறை வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்திவிடக் கூடாதென்பதில் படைத்தரப்பு தீவிர கவனம் செலுத்துகிறது. அதேநேரம்இ வான் புலிகளின் வருகையைத் தூண்டும் விதத்தில் வன்னியில் தினமும் இரவு பகலாக கடும் விமானத் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலால் புலிகள் சீற்றமடைந்து வடக்கு - கிழக்கில் அல்லது தெற்கில் எங்காவது பாரிய தாக்குதலொன்றுக்காக தங்கள் விமானங்களை அனுப்பும் போது அவற்றை தாக்கிவிட வேண்டுமென படைத்தரப்பு முனைப்புக் காட்டுகிறது. இதனைப் புலிகளும் நன்கறிவர். இதனால்இ படையினர் எதிர்பார்த்து காத்திருக்கையில் அவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பரென்றே கருதப்படுகிறது. மட்டக்களப்பில் குடும்பிமலை (தொப்பிகல) பகுதியை கைப்பற்றிஇ கிழக்கில் புலிகளின் பாரிய தாக்குதல் பலத்தை முறியடித்து விட்டால் பின்னர் வடக்கில் முழுக் கவனத்தையும் செலுத்த முடியுமென அரசு கருதுகிறது. கிழக்கில் புலிகளின்இ மரபு வழிப் போர் முறையை முறியடிப்பதற்கான கடைசித் தாக்குதலை ஆரம்பிக்க படையினர் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்இ வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு இரு தரப்பும் தயாராகிவிட்டன. மீண்டும் சமாதானப் பேச்சுகள் குறித்து பேச்சடிபட்டாலும் அது ஒரு கண் துடைப்பாகவேயிருக்கப் போகிறது. போர்தான் முடிந்த முடிவாகிவிட்டது. இந்த யுத்தத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகையில் போர் மேலும் தீவிரமடையுமானால் அவர்களது நிலைபற்றி எடுத்துக் கூற முடியாதளவுக்கு அவலம் நிறைந்ததாயிருக்கும். இதனை உணர்ந்தாவது இந்தப் போரை நிறுத்த சர்வதேச சமூகம் தலையிடமாட்டாதா என அவர்கள் ஏங்குகின்றனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக