புதன், 27 ஜனவரி, 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை குறித்த அச்சம் சிங்கள இராணுவத்தை நித்திரையின்றி அலையவிட்டிருக்கிறது.
எந்த நேரத்திலும் போர் வெடிக்கக்கூடும் என்ற கொதிநிலையில் இலங்கை இருக்கிறது.
எங்கிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் நடைபெறும் என்று கிலி பிடித்து கிளிநொச்சியின் வான்பரப்பையே சிங்கள இராணுவம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இந்தச் சூழலில் சிங்கள இராணுவ வீரர்களின் அச்சத்தை போக்கிக்கொள்ள இந்தியாவிடம் இப்போது சரணாகதி அடைந்துள்ளது சிங்கள இராணுவம்.


தெற்காசிய வல்லரசாக தன்னை நினைத்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்திய அரசும் சிங்களப் படைக்கு வரவேற்புக் கொடுத்து பயிற்சிக் கொட்டடிகளை திறந்துவிட்டிருக்கிறது.

இது குறித்த விவரங்களை இந்த செய்தியில் இறுதியில் கொடுத்துள்ளோம்.

அதற்கு முன்னதாக தமிழீழ விமானப் படை குறித்த இந்திய, சிறிலங்கா அரசுகள் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.

சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்ற போது அந்நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுகளில் மிக முக்கியமானதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை குறித்தே இருந்துள்ளது.

நீடித்த நிழல் யுத்தத்தை நடத்தி வரும் சிறிலங்கா இராணுவத்தால் எந்தச் சூழலிலும் போர் வெடித்துவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை எப்படி எதிர்கொள்ள முடியும் என்ற அச்சத்திலேயே புதுடில்லியிடம் இந்தக் கொழும்பு பிதாமகள் சரணாகதி அடைந்ததாக புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் நகைச்சுவையாக குறிப்பிடுகின்றனர்.


சர்வதேச அரசியலில் இந்திய அரசிற்கு கிடைக்கும் லாப நட்டங்களைக் கணக்கில் கொண்டு சந்திரிகாவின் சரணாகதிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்திய பிரதமர்-சிறிலங்கா அரச தலைவி இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையை நேரடியாகக் குறிப்பிடாமல் "சட்டவிரோத வான்தள பயன்பாடு" குறித்து கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்திரிகாவின் இந்த பயணத்துக்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை குறித்து உலகின் 4 ஆம் படை வலுகொண்டுள்ள தெற்காசிய வல்லரசு என்ற பெரிய அண்ணணாகிய நாங்கள் அச்சப்படுகிறோம். கவலைப்படுகிறோம் என்று ஒப்பாரி வைத்திருந்தார்.


சென்னையிலிருந்து வெளியாகும் தமிழின விரோத ஆங்கில ஏடான "ஹிந்து" விற்கு அளித்த நேர்காணலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கூடுதலாக விமானங்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்று கண்ணீர் விட்டிருந்தார்.

அத்துணை பொருளாதரத் தடைகளையும் மீறி ஒரு வல்லமை பொருந்திய விமானப் படை தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி உருவாக்கினார்கள் என்று பல்வேறு நாடுகள் வினாக்கனை எழுப்பி வியந்தனர். சிங்கள அரசோ யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தைப் பயன்படுத்தி விமானப் படையை உருவாக்கிவிட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று திசை திருப்ப பார்த்தார்.

ஆனால் 1998 ஆம் ஆண்டே எமது விமானப் படையை நாம் உருவாக்கிவிட்டோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் வெளிப்படையாக அறிவித்தார்.


அந்த ஆண்டுக்காலங்களில் சிங்கள ஊடகங்கள் இது தொடர்பாக எழுதியான பல செய்திகளும் மீண்டும் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் தற்போதைய பயிற்சிப் படலம் தொடங்கியுள்ளது.

இந்தியா சென்று பயிற்சி மேற்கொள்வதற்கான நிலைமைகளை அறிவதற்காக கடந்த மாதம் சிறிலங்கா விமானப் படையின் 5 பேர் கொண்ட குழு கடந்த மாதம் இந்தியா சென்றது.

இக்குழுவில் விமானப் படையின் உயர்நிலை அதிகாரிகளான

ஏயார் மார்சல் சன்ன குணரட்ன (விமானப்படை தலைமையக திட்டமிடல் அதிகாரி)

விமானப்படை கொமடோர் றோசான் குணதிலக்க (நடவடிக்கைக் குழுவின் பணிப்பாளர்)

குறூப் கப்டன் ககன் புளத் சிங்கள (சீனன்குடா விமானப்படைத் தள நிலைய பொறுப்பதிகாரி)

குறூப் கப்டன் றோகான் பத்திரகே (இலத்திரனியல், தொலைத்தொடர்பு அதிகாரி)

குறூப் கப்டன் விஜித குணரட்ன (விமானப்படையின் இரத்மலானை குறூப் கப்டன், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானப்படையின் கட்டளையிடும் அதிகாரி)

ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் இந்திய விமானப் படை தளபதி சசிந்திர பால் தியாகி உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை பலத்தை எதிர்கொள்ள ஆலோசனை நடத்தி உள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் உள்ள இந்திய விமானப் படை தளத்துக்குச் சென்ற சிறிலங்கா குழுவினர் அங்குள்ள பயிற்சிக்குரிய வசதிகளை ஆய்வு செய்துள்ளனர். அங்கு இந்தியப் படையினருக்கு அளிக்கப்படுகிற பயிற்சிகளையும் பார்வையிட்டனர். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உத்ரேலி விமான தளத்துக்கும் சென்று ராடர் உள்ளிட்ட விமானப் படை தளவாடங்களைக் கையாளுதல் குறித்தும் பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் தென்னிந்தியாவில் உள்ள பெங்களுரின் ஜலஹலி விமானத் தளத்துக்கு இக்குழு சென்றுள்ளது. 1987 களில் இந்திய அரசின் இராணுவம் இந்த விமான தளத்திலிருந்துதான் யாழ். குடாநாட்டில் உணவு பொருட்களை விநியோகம் செய்தனராம்.

சிங்கள இராணுவத்தின் இந்த சரணாகதியைத் தொடர்ந்து 20 சிறிலங்கா விமானப் படை அதிகாரிகள் தற்போது இந்தியாவில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விமானப் படையின் மின்னணு தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட விமானப் படையின் பல்வேறு பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

1967 இஸ்ரேல், அரபு உலகத்தின் மீது நடாத்திய யுத்தக் களத்தில் 385 விமானங்களை எகிப்து தேசம் இழந்ததாக வரலாறு. அந்நாளில் சோவியத் யூனியன் அள்ளி அள்ளி கொடுத்த விமானங்கள் அவை. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு இராணுவ ஒத்துழைப்பும் இருந்தன.

ஆனால் தமிழீழத்திற்கு எந்த தேசம் கொட்டிக் கொட்டி கொடுத்தது?

உலகின் 4 ஆம் படைவலுகொண்டு இருப்பதாக சொல்லப்படுகிற இந்திய அரசு அச்சப்படுகிற அளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருக்கும் விமானப் படை விவரங்கள் எவை என்று சிங்களப் படை சொல்லுகின்றன தெரியுமா?

அமெரிக்க தயாரிப்பான ஹெர்குலஸ் சி-130 ரக சரக்கு போக்குவரத்து விமானம் உள்ளிட்ட 2 அல்லது 3 விமானங்கள். இவற்றில் செக் தயாரிப்பான ஜிலின் இசட்-143 என்ற விமானம் இரவு நேர பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

திருமலையில் கூட இப்போது விமான ஓடுபாதை கட்டுவதற்காகதான் துப்பரவாக்கம் செய்கிறார்களாம்.

இந்திய-சிங்கள அரசுகள் அச்சப்பட்டு ஓலம் எழுப்பும் வகையில் இங்கே தமிழீழத் தேசத்தில் வகை வகையான விமானங்கள் குவிக்கப்பட்டுக் கிடக்கவில்லை.

ஒரு தேசத்தின் ஆளுகையாளர்கள் ஒரு மக்களின் நல்லாட்சியாளர்கள் ஒரு அரசின் கடமை என்கிற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்களது தாயக மக்களைக் காப்பாற்ற விமானப் படையை உருவாக்கிக் கொண்டது எந்த சர்வதேச விதியிலும் எப்போதுமே சரியானதாகத்தான் இருக்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக