புதன், 27 ஜனவரி, 2010



“நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்” என்ற தலைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு சில எதிர்வினைகள் வந்திருந்தன. புலிக் கொடி நாடு கடந்த அரசின் கொடியாக இருக்க முடியாது என்று நான் எழுதியிருப்பதாகவும், புலிக் கொடியை எதிர்ப்பதாகவும் கருதி சில கண்டனங்கள் வந்தன.

இதைப் பற்றி சில விளக்கங்களை சொல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

”புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது.

புலிக் கொடி என்பது தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. இதை தமிழர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும், தேசியத்தையும் அடையாளப்படுத்துவது புலிக் கொடி.

புலி, புலிக்கொடி போன்றன எந்த ஒரு அமைப்புக்கோ இயக்கத்திற்கோ மட்டும் சொந்தமானது அன்று. இவைகள் தமிழினத்திற்கு சொந்தமானவை. தமிழர்களின் பண்பாட்டிற்கும், தேசியத்திற்கும், தாயகத்திற்கும் சொந்தமானவை.”

இந்த ஆண்டு மார்ச் கடைசியில் வெளிவந்த ஒருபேப்பரில் புலிக் கொடி குறித்து எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த நிலைப்பாட்டில் என்னிடம் ஒரு மாற்றமும் இல்லை. புலிக் கொடி என்பது தமிழர்களின் கொடி. அது தேசம் கடந்தது. தமிழர்களின் பண்பாட்டின் சின்னம் புலிக் கொடி.

ஆனால் தமிழீழத்தின் தேசியக் கொடியை நாடு கடந்த அரசு தன்னுடைய கொடியாக கொள்ள முடியாது. மக்கள் விரும்பினாலும் கூட நாடு கடந்த “அரசு” என்பதன் அடிப்படையில் மரபுகளும் உலகின் சட்டங்களும் அதை அனுமதிக்காது.

சோழ மன்னர்களும் தமது கொடியாக புலிக் கொடியைக் கொண்டிருந்தனர். வேறு சில மன்னர்களும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டிருந்தனர். தமிழீழ அரசும் தன்னுடைய நாட்டின் கொடியில் புலியை முக்கியமானதாக பொறித்திருந்தது. இந்தப் புலிக் கொடிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சோழர்களின் புலிக் கொடி பக்கவாட்டாக நிற்கின்ற புலியைக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது. தமிழீழத்தின் புலிக் கொடி உறுமிக் கொண்டு பாயும் புலியின் முகத்தைக் கொண்டிருக்கிறது.

அனைத்துமே புலிக் கொடிதான் என்றாலும், வேறுவேறு நாடுகள் என்பதனால் புலிக் கொடியின் தோற்றமும் வேறுவேறானதாக இருக்கின்றது.

22 அரபு நாடுகள் இருக்கின்றன. அனைத்திலும் அரேபிய மக்களே பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அந்த நாடுகளுக்கு தேசியக் கொடிகள் இருக்கின்றன. அனைத்துமே வேறுவேறு தோற்றுங்களை உடையவை. சில கொடிகள் ஒத்த தன்மையை கொண்டவையாக இருப்பினும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு அரசும் தனித்துவமான கொடிகளைக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் அவுஸ்ரேலியாவில் குடியேறி அங்கே மண்ணின் மைந்தர்களை ஒடுக்கி விட்டு ஒரு புதிய அரசை அமைத்த பொழுது, அவுஸ்ரேலியாவிற்கு என்று தனியான கொடியையே உருவாக்கினார்கள். தமது பூர்வீகத்தையும், தமது நாட்டின் அரசராக இங்கிலாந்து அரசரை ஏற்றிருப்பதையும் குறிக்கும் பொருட்டு இங்கிலாந்தின் கொடியையும் அதன் மூலையில் பொறித்தார்கள். எப்படித்தான் இருந்தாலும் அவுஸ்ரேலிய அரசை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் தனியான கொடியையே அந்த அரசுக்கு உருவாக்கினார்கள்.

இப்பொழுது நாம் அமைக்கவிருக்கின்ற நாடு கடந்த அரசும் தனித்துவம் மிக்க ஒரு அரசுதான். இந்த அரசு தனித்துவமான கொடியையும் அடையாளங்களையும் கொண்டிருப்பதுதான் மரபுகளுக்கும் உலகின் சட்டங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

தமிழீழப் புறநிலை அரசை அமைப்பதாக இருந்தால் தமிழீழத் தேசியக் கொடியே புறநிலை அரசின் உத்தியோகபூர்வமான கொடியாக இருக்கும். புறநிலை அரசு என்பது தமிழீழத்தில் இயங்கிய அதே அரசு வேறு ஒரு நாட்டில் தொடர்ந்து இயங்குவது. அந்த வகையில் அதன் கொடி மாறப் போவது இல்லை. ஆனால் நாம் “நாடு கடந்த அரசு” என்னும் புதிய வழிமுறை ஒன்றைய திட்டமிடுகின்றோம். தற்போதைய உலக ஒழுங்குக்கு இது ஏற்றதாக இருக்கும் என்றும் நம்புகின்றோம்.

புறநிலை அரசு வேறு, நாடு கடந்த அரசு வேறு என்பதை புரிந்து கொண்டால் இந்தக் கொடி பற்றிய சந்தேகங்கள் வராது. தமிழீழ அரசின் கொடியை புலம்பெயர் மக்கள் உருவாக்குகின்ற நாடு கடந்த அரசோ அல்லது வேறு கட்டமைப்புகளோ தமது உத்தியோகபூர்வமான கொடியாக கொள்ள முடியாது.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை ஆதரிப்பதையும், தமிழீழமே தமது தாய் நாடு என்பதை வெளிப்படுத்துவதையும், அந்த இலட்சியத்திற்காக போராடுவதையும் குறிக்கும் பொருட்டு தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றுவதும், அதை உயர்த்திப் பிடிப்பதும் இயல்பான ஒரு விடயம். ஆனால் அதற்காக நாம் உருவாக்குகின்ற புது வகையான அரசு ஒன்றின் கொடியாக அதை பிரகடனப்படுத்த முடியாது.

நாடு கடந்த அரசின் கொடியிலும் புலி இடம் பெறலாம். அதில் எந்த வித தவறும் இல்லை. ஆனால் அது தமிழீழத் தேசியக் கொடியில் இருந்து வேறுபட்டு தனித்துவம் மிக்கதாக இருப்பதே சரியானது. வேண்டுமென்றால் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அவுஸ்ரேலியக் கொடி போன்று, தமிழீழத் தேசியக் கொடியும் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு கொடியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கலாம்.

நாடு கடந்த அரசுக்கு புதிய கொடி உருவாக்க வேண்டியதன் காரணம் பற்றி இம் முறை எழுதியிருப்பதை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

வி.சபேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக