பல சண்டைகளில் வெற்றி கொண்ட பெருமிதம் ஒரு புறமிருக்க, அதேகளங்களில் போராளிகளின் இழப்புக்கள் நெஞ்சை வருட, அவர்களின் பல்லாயிரக் கணக்கான கனவுகளில் ஒன்றானதும் அனைத்துப் போராளிகளினதும் முதன்மைக் கனவான "ஆனையிறவை எதிரியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற" எண்ணத்துடன் ஒவ்வொரு போராளியும், தன் ஈழவிடுதலைக் கருவுக்கு உயிரிட்டு சண்டைக்கு தயாராகினர்.

நீண்டகால தங்களது கனவு மெய்ப்படப்போவதும், வெற்றி எமக்கே என்ற அசையாத நம்பிக்கையுடனும் போராளிகள் சண்டைக்குத் தயாராகி விட்டனர்.

இதுவரை தாங்கள் செய்த சமர்களிலேயே மிகப்பெரிய சண்டைக்கு தயாராகிவிட்ட உணர்ச்சிப் பெருக்கால், ஆண்,பெண் போராளிகள் அனைவரும் சிரிப்பொலியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தவறவில்லை. அந்த நேரத்தில் கிடைத்த உணவுகளை தங்களிடையே பகிர்ந்து கொண்டும், கிடைத்த பானங்களை ஒருவர் மாறி ஒருவராகக் குடித்துக்கொண்டும், அந்நேரத்தில் மட்டும் ஓடியாடி ஒருவர் மாறி ஒருவராக அடித்துப் பிடித்து விளையாடவும் செய்தனர்.

பகிடிக் கதைகளை ஒருவர் மாறி ஒருவராகப் பேசுவதும் , ஒருவரை ஒருவர் குறைகூறி எல்லோரும் சிரிப்பதுமாக அந்த நிமிடங்கள் இருந்தாலும் தங்களின் எண்ணங்கள் யாவற்றையும் எதிர்கொள்ளப் போகும் ஆனையிறவு தாக்குதல் பற்றியே நேர்நோக்கி இருந்தனர்.

சண்டைக்கு தயாரான மகிழ்வான சில நிமிடங்கள் கவலை தரும் நிமிடங்களாக மாறத் தொடங்கியது. முறையாக படைய செயற் பாடுகளுக்கு அமைவாக பிரித்து செயல்வடிவம் கொடுக்க இருந்த அணிகள் சண்டைக்கு தயாராகினர்.
தலைவரின் பெரியதொரு எண்ணக்கருவிற்கு உயிர் கொடுக்க களம் விரையவென காத்திருந்த அணிகளுக்கான ஒன்றுகூடல் எளிமையும் அமுக்கமும் நிறைந்த ஓர் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.விடுதலைப்புலிகளின் படை வலுக்கொண்ட அனைத்து அணிகளும் ஒன்றுகூட்டப்படுகின்றன.

25.03.2000அதிகாலை 06.05 மணி படைய நியதிகளுடன் அணிவகுத்திருந்த அணிகளுக்கு முன்பாக உறுதி உரையை போராளி ஒருவன் சொல்ல அனைவரும் மிக உறுதியுடனும், தெளிவுடனும் கூறி முடிக்க "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்றே முழங்கினர்.


குடாரப்பு தரையிறக்கம் ஊடாக ஆனையிறவுத் தளத்தை வெற்றி கொள்ளும் நடவடிக்கைக்கு தலைமையேற்கப்போகும் அனைத்து கட்டளைத் தளபதிகளும் நடக்கவிருக்கும் சண்டை சம்பந்தமான அனைத்து திட்டங்கள், நகர்வுகள், நகர்வுப் பாதைகள் அனைத்தையும் அதில் ஏற்படும் மாற்றங்கள், மாற்றங்களைச் செய்யவேண்டிய உடனடி நடவடிக்கைகள் என்பனவற்றை தெளிவு படுத்துகின்றனர். சிறப்பாக இதுவரை நடந்த தாக்குதல்களிலேயே இல்லாத அளவு நேர முகாமைத்துவத்தை யும் கடைப்பிடிக்க பணிப்புகள் வழங்கப்பட்டன.

பாடல், ஆடல்கள் சில நிமிடங்கள் தொடர அணிகள் நகரத் தொடங்கின. போராளிகளின் கைகள் ஒருவர் மாறி ஒருவருக்காய் கையசைத்து விடை பெற்றன. கையசைத்து கையசைத்து சென்றவர்கள் தங்களது பிரிவை உணர்ந்தவர்களாய் ஓடோடி வந்து கட்டியணைத்து "போயிட்டுவாறன்"

" கவனமாச் சண்டை பிடிக்கோணும் என்ன! என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்று தங்களின் அணிகளில் சேர்ந்து கொண்டனர்.

மீண்டும் திரும்பிப் பார்த்து விடைபெறுதல். மீண்டும் கையசைவுகள் என எல்லாமே தொடர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்திற்கு முதன்மையாக தரையிறங்கும் 70 பேர் கொண்ட சிறப்பானதும், கடுமையானதுமான அணி அன்று மாலையே கடற்கரையை அடைந்தது.

தமிழீழத்தின் வரலாற்றில் முதல் தடவையாக சிறப்பாக, மிகக் கடினத்திற்குள், "கடற்புலிகள்" தரையிறக்கம் செய்யத் தயாராகிவிட்டனர். கடற்கரையிலும் கையசைத்து விடைபெறல் தொடர தமிழீழக்கடலில் தமிழர் படை ஆனையிறவு கொடிய அரக்கனை வெற்றிகொள்ள பயணித்து விட்டது.

கடினமே உருவான கடற்புலிகளின் செயல் மேலும் பலமடங்கு கடினமான போதும் இறுதிவரை உறுதி தளராது பலமுறை படகுகளோடு போராடி குடாரப்பு கரையை நெருங்கினர். "கடலிலே காவியம் படைப்போம்" என்ற கடற்புலிகளின் வீரமுழக்கம் பொய்த்துவிடாமல் கரையில் இறங்கிவிட அணிகள் ஒன்றுமாறி ஒன்று நகரத்தொடங்கின.

இடறு முரடான பாதை ஒருபுறம், படையப் பொருட்களின் பாரம் ஒருபுறம், இதைவிட நீரேரியின் நீர், சகதி, அடிக்கடி காலை சிக்க வைக்கும் நீர்த்தாவரங்கள் ஒருபுறம் குறிக்கப்பட்ட நேரம் ஒருபுறமெனப் புலிகள் அணி இன்னோரன்ன கடின உபாதைக்குள் சிக்குண்டு, சிறுகடல் கடந்து முன்னேறத் தொடங்கியது.

எஞ்சியிருக்கும் பாதையும் தென்னங்காணிகளில் உழுபொறிகொண்டு உழுது கிளறிவிடப்பட்ட மண் என்பதனால் பல தடவைகள் அவர்களின் பாதங்கள் கரையில் சறுக்கியும், இடறியும் விழுந்தனர்! எழும்பினர்! மீண்டும், மீண்டும் விழுந்தெழும்பி உன்னத பயணம் தொடர்ந்தபோதே நெடுநாளைய தமிழரின் கனவை நனவாக்கவெனத், தங்களின் உயிர்விலையால் ஆனையிறவு கொடிய அரக்கனை அழித்து வெற்றிகொள்ளும் நெடிய பாதையை திறந்துவைத்து சரித்திரம் படைத்தனர்.
கரும்புலிகளின் உன்னத தியாகத்தின் வடிவில் அமைந்த வீரத்துடன் புலிகள் அணி, இத்தாவிலில் நிலை கொண்டது.

2000ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 26ஆம் நாள் அதிகாலை 01.15மணிக்கு குடாரப்பு ஊடாக இத்தாவில் சென்ற சிறப்பு அணி தனது நிலையை உறுதிப்படுத்தி நிலை கொண்டு அரண் அமைத்தது.

70பேர் கொண்ட சிறப்பு அணி முன்சென்று அரணமைத்து, எறிகணைகள் ஆதரவுச் சூட்டெடுத்து, எதிரி முன்னேற விடாமல் தடுக்க எல்லாத் தயார்ப்படுத்தலையும் செய்து முடிக்க, இத்தாவிலில் எதிரிக்கும், புலிகளுக்கும் சிறிதளவு யுத்தம் வெடித்த போதே பொழுதும் விடிந்தது. அதே கணம் திட்டமிட்டபடி எல்லா அணிகளும் இத்தாவில் பகுதியை வந்தடையத் தொடங்கின.

26ஆம் நாள் பொழுது விடிந்தது. வேட்டுச்சத்தங்களுடனும், எறிகணை வெடிப்பினூடேயுமாகும். அன்று தொடர்ந்தது வெறும் சண்டையல்ல, சரித்திரம் கூறும் நிகழ்வு. சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக எழுந்த மானப்போர் என்பதனால் நீயா நானா என்று வீறிட்டெழுந்தார்கள் விடுதலைப் புலிகள். போகேக்க கடலால போய் வரேக்க கண்டிவீதி தரையால வரவேண்டும் என்ற தலைவரின் வீரமந்திரம் தாங்கிய உயிர்களாய் ஒவ்வொரு போராளியும் போரிடத் தொடங்கினர்.
தரையால போகின்ற பாக்கியம் சிலருக்கே கிடைத்தாலும் தங்கள் இன்னுயிர்த் தோழர்கள் தலைவரின் சொல் ஏற்று ஆனையிறவு அரக்கனைக் கொன்றொழித்து வெற்றியுடன் செல்வதைக் கண்டு இத்தாவிலில் வீரகாவியமான மாவீரர்கள் நிச்சயம் மகிழ்ந்திருப்பர்.

இத்தாவிலில் 26ஆம் திகதி அதிகாலை 2.15இற்கு கேட்ட முதலாவது வேட்டோசையுடன் பல்லாயிரக் கணக்கான நவீனபடைய சாதனங்களைக்கொண்ட சிங்கள அரக்கர்களுக்கும், உயரிய மனோதிடத்தை நவீன படைய சாதனமாகக் கொண்ட விடுதலைப்புலிகளுக்கும் சண்டை தொடங்கியது. புலிகள் விட்டுக்கொடுக்காமல் பல்லாயிரம் படைகளையும், அவனது நவீன படைய உத்திகளையும் எதிர்த்து பல இன்னல்களுடன் துணிவுடன் போரிட்டனர்.

ஒரு நாள் இரண்டு நாளென தொடர்ந்த சண்டை 34 நாட்களை அடைந்தது. பசி,தாகம், களைப்பு, நித்திரையின்மை, தொடர் வேலைகள், ஓய்வே இல்லை என்ற நிலையிலும் தளராது ஈடுபட்டு இறுதி நாள்வரை உறுதியுடன் போராடி சிங்கள அரசபடைகளுடனான படைய சமநிலையை நிரூபித்து பல வருடமாக எதிரியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டிருந்த ஆனையிறவை கைப்பற்றினர் என்பது வெறும் கதையல்ல. வரலாற்று செயலுருவில் நிரூபித்துக்காட்டிய தமிழரின் வீரம் மட்டுமல்ல. சமகால வரலாற்றில் நிரூபித்து தமிழீழ விடுதலைப் புலிகளினதும், தமிழீழத்தினதும் புதிய விடுதலைப்புலியுணர்வுடன் கூடிய வீரமாகும்.