லண்டனில் இருந்து வெளிவருகின்ற “ஒரு பேப்பர்” என்னும் பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் நிறைய இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். கட்டுரை எழுதி அனுப்பிய பிற்பாடுதான் „அவரும் இந்தியாவைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார், இவரும் இந்தியா சம்பந்தமாகத்தான் எழுதியிருக்கிறார்“ என்று சொல்வார்கள். அந்த அந்த நேரங்களில் பரப்பாக இருக்கின்ற விடயங்கள் பற்றி பலரும் எழுதுவது இயல்பான விடயம்தான்.
இப்படித்தான் „நாடு கடந்த அரசு“ பற்றிய அறிவிப்பு வந்தவுடன் ஒரு பேப்பரில் அதைப் பற்றி ஏழு கட்டுரைகள் வந்தன. என்னுடைய கட்டுரையும் அதற்குள் அடக்கம். அதே போன்று கடந்த முறை பல இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் ஒரு பேப்பரில் இடம் பெற்று விட்டன. இந்திய எதிர்ப்புப் பரப்புரையை ஒரு பேப்பர் முன்னின்று நடத்துவது போன்று ஒரு தோற்றத்தையும் இது ஏற்படுத்தியிருக்கலாம்.
இதில் அப்படி ஒன்றும் தவறும் இல்லை. இந்தியா பற்றிய தெளிவை தமிழ் மக்களுக்கு வழங்குவது ஊடகங்களின் கடமை. இந்தியாவின் காலில் விழுந்தால் தமிழ் மக்களின் உரிமை கிடைத்து விடும் என்று நம்புகின்ற அரசியல் அறிவிலிகள் பல மட்டங்களில் காணப்படுகின்ற நிலையில் இது மிகவும் தேவையானது.
…………………………….
„இந்தியா என்கின்ற வந்தி“ என்று நான் எழுதிய கட்டுரைக்கு பல தமிழ்நாட்டுத் தோழர்கள் வரவேற்பை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் சில ஈழத் தமிழர்களுக்கு ஒரு அச்சம் வந்து விட்டது. இப்படி தொடர்ந்து இந்தியாவை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தால்;, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சுற்றுலா செல்வதற்கு விசா பெறுவது சிக்கலாகி விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இப்படியான மனிதர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. தினம் தினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றியும்;, இந்திய வல்லாதிக்கத்தின் பிடியில் சிக்குப்பட்டிருக்கும் பல இனங்களின் விடுதலை பற்றியும் பேசுகின்ற பொழுது தமது சுற்றுலா பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று எண்ணுகின்ற மனிதர்களும் எமக்குள் இருக்கின்றார்கள் என்பது வேதனையானது.
…………………………….
தமிழீழத்திற்கான ஆயதப் போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தவர்கள் சொன்ன காரணங்களில் ஒன்று „இந்தியாவை மீறி தமிழீழத்தை எம்மால் அடைய முடியாது“ என்பது. ஆகவே தமிழீழப் போராட்டத்தைக் கைவிட்டு இந்தியா அனுமதிக்கின்ற ஒரு அரைகுறைத் தீர்வோடு தமிழர்களை இணங்கிப் போகும்படி இவர்கள் அறிவுறித்தினார்கள்.
அரைகுறைத் தீர்வுகள் தமிழினத்திற்கு நீண்ட கால நோக்கில் பலத்த அழிவையே கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்த விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உறுதியாக நின்றார்கள். இப்பொழுதும் அப்பொழுதும் இந்தியாவை மீறி தமிழீழத்தை அமைப்பதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன.
இந்தியாவில் வெல்லப்பட முடியாத ஒரு படையணியை கட்டி எழுப்புவது என்பது அதில் ஒரு வழி. இதையே விடுதலைப் புலிகள் முயற்சித்தார்கள் என்று சொல்ல வேண்டும். இந்தியா தமிழீழத்தை அமைக்க விடாது என்பதிலும் ஒரு நேரத்தில் இந்தியாவோடு மோத வேண்டி வரும் என்பதில் தேசியத் தலைவர் தெளிவாகவே இருந்தார்.
முடிந்தவரை மோதலை தவிர்க்க முயல்வது என்பதன் அடிப்படையில் சில விட்டுக் கொடுப்புக்களையும் அவர் செய்தார். ஆயினும் 87இல் இந்திய ஈழப் போர் மூண்டது. கரந்தடிப் போர் முறையில் சண்டையிட்டபடி ராஜதந்திர வழிகளையும் கையாண்டு அந்த நெருக்கடியில் இருந்து தமிழீழப் போராட்டத்தை தேசியத் தலைவர் காப்பாற்றினார்.
அதன் பின்பு நடைபெற்ற ராஜீவ்காந்தி அழித்தொழிப்பு நடவடிக்கையின் பயனாக இந்தியா ஒரு பத்தாண்டு காலம் தமிழீழப் போராட்டத்தில் தலையிடாமல் சற்றுத் தள்ளியே நின்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழீழப் விடுதலைப் புலிகளின் படைபலத்தை தேசியத் தலைவர் அதிகரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா மீண்டும் தலையிட்டு தமிழீழப் போராட்டத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கத் தொடங்கியது. ஓயாத அலைகள் மூன்றில் இந்தியாவின் தலையீட்டை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியாவோடு முடிந்தளவு நட்பாக போவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தனர். இந்தியாவால் வெல்லப்பட முடியாத பலத்தை அடையும் வரை இந்தியாவுடனான மோதலை தவிர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் அனைத்து வழிகளையும் கையாண்டனர். வெல்லப்பட முடியாத பலம் என்கின்ற இலக்கை அடைந்து விட்டால் இந்தியா வேறு வழியின்றி தமிழீழத்தை சகித்துக் கொள்ளும் என்பது விடுதலைப் புலிகளின் கணிப்பாக இருந்திருக்கக் கூடும்
…………………………….
இன்றைக்கு இந்தியா சொந்தம் கொண்டாடும் காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் வைத்திருக்கிறது. ஒரு பகுதியை சீனா வைத்திருக்கிறது. இந்தியா வாயை மூடிக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவாவது இந்தியாவை விட பலமானது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா அளவிற்கு பலமானது அல்ல. அப்படியிருந்தும் பாகிஸ்தானுடனான போரில் தனக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை கணக்குப் போட்டு விட்டு இந்தியா வாயை மூடிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் காஸ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நின்று விடவில்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு போராளிகளை பயிற்சி கொடுத்து அனுப்புகிறது. மும்பை போன்ற இடங்களில் நடத்தப்படுகின்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால் இந்தியா பாகிஸ்தானோடு போருக்குப் போகவில்லை.
இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது.
இதைப் பற்றி பின்பு பார்ப்போம். இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். வெல்லுவது கடினம் என்றாலோ, போரில் தனக்கு ஈடு செய்ய முடியாத அழிவு வரும் என்றாலோ எதிரியை சகித்துக் கொண்டு இந்தியா பேசாது இருந்து விடும். தமிழீழ தேசத்தையும் வெல்லப்பட முடியாத ஒரு நாடாக விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றமும், தமிழீழப் போராட்டத்தை இல்லாமல் செய்வதில் இந்தியா காட்டிய உறுதியும் எமது இலக்கை நாம் அடைய முடியாதபடி செய்து விட்டது.
…………………………….
இந்தியாவை அனுசரித்தும் சமாளித்தும் குறுக்கால் ஓடி தமிழீழத்தை உருவாக்கும் எமது முயற்சி வெற்றியை தரவில்லை. மிகப் பெரிய அழிவுகளைத்தான் எமக்கு தந்திருக்கின்றது. இப்பொழுது மீண்டும் சிலர் இந்தியாவின் மனதை மாற்ற முடியும் என்று புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வெளியுறவு பற்றி வகுப்பெடுக்க முனைகின்றார்கள்.
சீனா சிறிலங்காவை பயன்படுத்தி இந்தியாவின் தென்பகுதியை அச்சுறுத்துமாம். ஆகவே இந்தியா தமிழீழத்தை ஆதரிக்க வேண்டுமாம் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் எழுதியும் கூறியும் வருகிறார்கள். இதனால் இந்தியாவின் மனது மாறி விடும் என்று நம்புகின்றார்கள். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காத ஒன்றை தாம் சிந்தித்து விட்டதாகவும் இவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவினை ஆள்கின்ற ஆரிய பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையை பற்றி சிந்திக்காது, இந்தியாவை தமிழீழத்திற்கு ஆதரவாக மாற்றலாம் என்று நம்புவது மிகப் பெரும் ஏமாற்றத்தையே மீண்டும் கொடுக்கும்.
இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி தமிழீழத்தை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது இல்லை. அவர்கள் இந்தியா பற்றி தெளிவாகவே இருந்தார்கள். கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி பலர் பலவிதமாகப் பேசுவார்கள். காங்கிரஸ் கட்சி தோற்று பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியா தம்மை ஆதரிக்கும் என்று விடுதலைப் புலிகள் நம்பியதாக சிலர் கூறுகிறார்கள். இது மிகப் பெரிய தவறான கூற்று. விடுதலைப் புலிகள் ஒருபோதும் அப்படி நம்பியிருக்கவில்லை.
இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டில் பெரிதான மாற்றம் எதுவும் வந்துவிடப் போவது இல்லை என்பது விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரியும். ஆயினும் விடுதலைப் புலிகள் காங்கிரஸ் கட்சி தோற்பதை விரும்பினார்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிடுவது போன்று அறைகூவலும் விடுத்தார்கள். ஆனால் இதற்கான காரணம் வேறு. காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களைப் பெறுவதன் மூலம் ஒரு வலுவற்ற ஆட்சி இந்தியாவில் உருவாகும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்தியாவில் வலுவற்ற ஆட்சி உருவானால் அப்பொழுது ஏற்படும் குழப்பங்களை சமாளிப்பதற்கே இந்தியாவிற்கு நேரம் போதுமாக இருக்கும். இந்த நிலையில் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஈழப் பிரச்சனையில் தலையிடுவதற்கு துணியும் என்றும் அவர்கள் கணித்திருந்தார்கள். மேற்குலக நாடுகள் தலையிடுவதன் மூலம் அழிவுகளை தடுப்பதோடு ஒரு தற்காலிக ஓய்வையும் அமைதியையும் உருவாக்க முடியும் என்று விடுதலைப் புலிகள் நினைத்தார்கள். ஆனால் முன்பு இருந்ததை விட இந்;தியாவில் ஒரு வலுவான ஆட்சியே உருவானது. இதனால் மேற்குலக நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்னடித்தன.
…………………………….
மொத்தத்தில் இந்தியாவை அருகில் வைத்துக் கொண்டே அதைக் கையாள்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனைத் தரவில்லை. எமது முதலாவது வழி முறை தோல்வியை தழுவி விட்டது. பலத்த அழிவையும் தந்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ளாது மீண்டும் இந்தியாவை நம்பிக் கொண்டு யாராவது புறப்பட்டால் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தான் தெரிவிக்க முடியும்.
இப்பொழுது இரண்டாவது வழி பற்றி நாம் பேச வேண்டும். இரண்டாவது வழி என்பது இந்தியாவை இல்லாமல் செய்வதுதான். ஏற்கனவே சொன்னது போன்று இந்தியா தமிழீழத்திற்குப் பக்கத்தில் இருக்கக் கூடாது. தமிழீழ தேசத்திற்கு இன்றைக்கு இருப்பது இரண்டு எதிரிகள்தான். ஒன்று சிறிலங்கா மற்றது இந்தியா. இந்தியாவை வெற்றி கொள்ளாது எம்மால் சிறிலங்காவை வெற்றி கொள்ள முடியாது.
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல நாடுகள் விருப்பத்தோடும் கட்டாயத்தோடும் இணைக்கப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் இந்தியா. தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து வடபகுதியில் உள்ள காஸ்மீர் வரை விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். ஒரிசாவில் இருந்து புதுடில்லிக்குப் போவதை “இந்தியாவிற்கு போகிறோம்” என்று சொல்கின்ற மக்கள் வாழ்கின்ற நிலப்பரப்புதான் இந்தியா.
பீகாரில் இருந்து ஆந்திரா வரை மாவோயிச தீவிரவாதிகளின் ஆதிக்கம் வேறு இருக்கின்றது. இந்தியாத் துணைக் கண்டத்தின் பல காடுகளும் கிராமங்களும் இவர்களின் செல்வாக்கில்தான் இருக்கின்றன. சிறிலங்காப் படைகளின் முற்றுகை இறுக்கமடைந்திருந்த நிலையில் தேசியத் தலைவர் தப்பிச் செல்லக் கூடிய இடமாக மாவோயிச தீவிரவாதிகளின் காடுகள் சிலரால் சுட்டிக்காட்ப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கின்றார்கள்.
ஆயினும் விடுதலைப் புலிகள் இந்தியாவில் உள்ள போராளி இயக்கங்களோடு சரியான முறையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. அவர்களின் காடுகளில் தமது தளங்களை உருவாக்கியருக்கவில்லை. இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், இந்தியாவை அதிகம் கோபப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையில் இவைகளை தவிர்த்து விட்டார்கள்.
இப்பொழுது நாம் விடுதலைப் புலிகள் செய்யத் தவறியவைகள் பற்றியும் பேச வேண்டும். இந்தியாவில் விடுதலைக்குப் போராடும் மக்களோடு இணைந்து வேலை செய்வது பற்றி நாம் விவாதிக்க வேண்டும். தமிழீழ தாகத்தை கைவிடாது விடுதலைக்கான வழிகள் பற்றி தொடர்ந்து பேசுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக