ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

முள்ளிவாய்க்காலில் இன்று மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 174 பொதுமக்கள் படுகொலை;212 பேர் படுகாயம்

விமல்காந்த், சென்னை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் சிறிலங்கா வான்படையின் மிக், கிபீர், எவ்-7 ரக வானூர்திகள் இணைந்து குண்டுத் தாக்குதலை நடத்தின.
சிறிலங்கா வான்படையினரால் சுமார் 20 நிமிடம் வரை நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலின் போது 16 குண்டுகள் வீசப்பட்டன.
இத்தாக்குதலில் மக்களின் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் ஆழிப்பேரலை மீளமைப்பின் போது கட்டிக்கொடுக்கப்பட்ட 6 வீடுகளும் முற்றாக அழிந்துள்ளன.
இத்தாக்குதலில் 126 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் 134-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனா்.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் காப்பகழிகள் பல மூடப்பட்டதனால் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே பகுதியில் மீண்டும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதன்போது 20 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4:00 மணியளவில் 12 குண்டுகளையும் 4:50 மணிக்கு 8 குண்டுகளையும் வீசியுள்ளன.
இக்குண்டுத்தாக்குதலில் 48 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக