ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

நான் பால்ராஜ் குறூப் என்று சொல்லிக் கொள்வதில் உலகத்தை வென்றுவிட்ட பெருமை



பால்ராஜ் மறைவு:
இராணுவ ரீதியாக புலிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வெற்றிடம்!


வித்தகன்

விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியான பால்ராஜின் மறைவு விடுதலைப்புலிகளை மட்டுமன்றி முழுத் தமிழினத்தையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 25 வருடங்களாக போர்க்களங்களில் சாதனைகள் படைத்திட்ட ஒரு ஈடு இணையற்ற தலைசிறந்த தளபதியை இயற்கைக்கு பறிகொடுத்துள்ளனர் விடுதலைப்புலிகள்.

சில மாதங்களுக்கு முன்னரே இலங்கை விமானப்படையின் தாக்குதலில் தமது அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை இழந்த விடுதலைப்புலிகள் தற்போது தமது கட்டளைத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜை இழந்துள்ளனர். மிகக் குறுகிய காலத்துக்குள் இரு பிரிகேடியர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு இழந்துள்ளது. தமிழ்ச்செல்வனின் மறைவு அரசியல் ரீதியிலும் பால்ராஜின் இழப்பு இராணுவ ரீதியிலும் புலிகளுக்கு வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 25 வருடங்களாக போர்முனைகளில் வித்தகம் புரிந்த ஓர் போரியல் விஞ்ஞானியாகவே பால்ராஜ் விளங்கினார். அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்பின் போரியல் வரலாற்றில் மட்டுமன்றி சர்வதேச இராணுவ போரியல் வரலாற்றில் கூட தனது மதிநுட்பமான, தாக்குதல் திட்டங்களை பதிய வைத்த ஓர் அபரிமிதமான திறன் படைத்த இராணுவ நிபுணராகவும் பால்ராஜ் காணப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் 1983 ஆம் ஆண்டு பால்ராஜ் தன்னை இணைத்துக்கொண்ட போது அவருக்கு வயது 18. பாலசேகரம் என்ற இயற் பெயரைக் கொண்டவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினால் வழங்கப்பட்ட பெயரே பால்ராஜ். 21-11.1965 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜின் சிறுபராயம் அவரின் தாயாரான இராசமின் ஊரான வடமராட்சி கரவெட்டியிலே கழிந்தது. ஆனால், பின்னர் தந்தை கந்தையாவின் ஊரான முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்க்கு பால்ராஜின் குடும்பத்தினர் சென்றுவிட்டனர்.

அங்கு தனது கல்வியை தொடர்ந்த பால்ராஜ் 1983 இல் கொழும்பில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் கொடூர நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்று வேண்டுமென்ற வேட்கையில் ஆயுதப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ் ஆயுதப் போராட்டக்குழுக்கள் இருந்த போதும் பால்ராஜின் தெரிவு பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பாகவே இருந்தது.

1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பால்ராஜை ஆயுதப் பயிற்சிக்காக விடுதலைப்புலிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 9 ஆவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட பால்ராஜ் தனது அதீத திறமைகள் காரணமாக அணித்தலைவராக பயிற்சிக்கு பொறுப்பானவரினால் நியமிக்கப்பட்டதுடன் புதியவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் பணிக்கப்பட்டார்.

பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய பால்ராஜ் வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து பல தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகளுக்கெதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை பால்ராஜ் நடத்தினார். 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப் படைகளுக்கெதிரான போர் மூண்டிருந்த நிலையில் மணலாற்றில் வைத்து மேஜர் பசீலனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பால்ராஜ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதன் பின்னர் அப்போது மணலாறுப் பகுதியில் தங்கியிருந்த பிரபாகரனை பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் அவர் மரணமடைந்த பின்னர் லெப்டினன்ட் கேணல் நவத்துடனும் செயற்பட்டார். வன்னிக் காட்டில் வைத்து இந்தியப் படைகளை சின்னாபின்னமாக்கி, விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்தியாவும் இந்தியப் படையும் வைத்திருந்த தப்பபிப்பிராயத்தை தகர்த்த நடவடிக்கைகளில் பால்ராஜின் பங்கு அளப்பரியது.

மேஜர் பசீலனின் மறைவுக்கு பின்னர் வன்னி மாவட்ட இராணுவத் தளபதியாக பிரபாகரனால் நியமிக்கப்பட்ட பால்ராஜ் இந்தியப் படைகளுக்கு வன்னி மண்ணையே புதைகுழியாக்கினார். ஒரு சிகரெட் புகைத்து முடிப்பதற்குள் விடுதலைப்புலிகளை அழிப்போமென சபதமிட்ட இந்தியப் படைத்தளபதிகள் வன்னி மண்ணில் தமது ஜவான்களை தினமும் பலிகொடுத்தமைக்கு பால்ராஜே காரணமாகவிருந்தார்.

விடுதலைப்புலிகளை அழிக்க வந்த இந்தியப்படைகள் தாம் அழிவடைந்த நிலையில் இந்தியா திரும்பிய பின்னர், தொடங்கிய அடுத்தகட்ட ஈழப்போரில் வன்னியிலுள்ள இலங்கை இராணுவத்தின் முகாம்கள் விடுதலைப்புலிகளால் துடைத்தழிக்கப்பட்டன. துல்லியமான தகவல்கள், தெரிவு செய்யப்பட்ட இலக்குகளென பால்ராஜ் மேற்கொண்ட தாக்குதல்கள் இம்மியளவு கூட பிசகியதில்லை.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய மையப் பகுதிகளிலிருந்த இராணுவ முகாம்கள் பால்ராஜ் தலைமையேற்று நடத்திய தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டன. முல்லைத்தீவை விரிவாக்கும் இராணுவத்தின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தி வெற்றிகண்டவர் பால்ராஜ்.

வவுனியாவிலிருந்து படையினர் மேற்கொண்ட "வன்னி விக்கிரம" நடவடிக்கையை முறியடித்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்றையும் சுட்டுவீழ்த்தி இராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலையும் வழிநடத்தியர் பால்ராஜ்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவில் உக்கிரமடைந்த சமரை எதிர்கொள்ள விடுதலைப்புலிகள் சிறப்புப் படையை அமைத்த போது விடுதலைப்புலிகளின் முதலாவது சிறப்புப் படைப் பிரிவான சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் முதலாவது விஷேட கட்டளைத் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். முல்லைத்தீவில் ஒரு பிரிகேட் இராணுவ படையணியை முற்றாக அழிக்கும் திறன்பெற்ற விடுதலைப்புலிகள் ஆனையிறவில் ஒரு டிவிசன் படையினரை அழிக்கும் வகையில் திறன் பெற்றதற்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவே காரணமாகவிருந்தது.

எந்தக் களமுனையில் விடுதலைப்புலிகளுக்கு தொய்வு ஏற்பட்டாலும் அங்கு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும் பால்ராஜும் களமிறக்கப்படுவார்கள். திடீரென நடத்தப்படும் சிறப்புத் தாக்குதல்களுக்கும் பால்ராஜும் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவுமே களமிறக்கப்படுவார்கள்.

1993 ஆம் ஆண்டு பூநகரி தளம் மீதான தவளைப் பாய்ச்சலுக்கு புலிகளின் சிறப்புப் படைகள் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் கிளாலியை நோக்கி "யாழ்தேவி" படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

இராணுவத்தின் கிளாலி நோக்கிய யாழ்தேவியை தடம்புரளச் செய்வதற்கு உடனடியாக பால்ராஜும் அவரது படைப்பிரிவுமே களமிறக்கப்பட்டனர். களம் விரைந்த சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவினர் பொட்டல் வெளிகளில் மண்ணுடன் மண்ணாக உருமறைப்பு செய்து கிடந்து, இராணுவம் 10 அடி எல்லைக்குள் வந்த நிலையில் எழுந்து நடத்திய தாக்குதலால் யாழ்தேவி தடம்புரண்டதுடன் இராணுவமும் பேரழிவை சந்தித்து இராணுவ நடவடிக்கையை கைவிட்டு திரும்பியது.

இதன் பின்னர் இடம்பெற்ற புலோப் பளைச் சமரில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவினரின் தாக்குதல்களை முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் ஷெல் ஒன்று மிக அருகாக விழுந்து வெடித்ததில் முழங்கால் பகுதியில் படுகாயமடைந்தார். இத்தாக்குதலின் போது பால்ராஜின் உயிரைக் காப்பதற்காக சில போராளிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இதன் பின்னரே பால்ராஜின் ஒரு கால் சற்று ஊனமடைந்தது.

வன்னியில் மட்டுமன்றி யாழ்.குடாநாட்டில் படையினர் மேற்கொண்ட "முன்னேறிப் பாய்ச்சல்" நடவடிக்கைக்கெதிராக `புலிப் பாய்ச்சல்' நடவடிக்கையை நடத்தி ஒரு `புக்காரா' ரக போர் விமானத்தையும் பால்ராஜ் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி சுட்டுவீழ்த்தியது. அதேபோன்று ஆனையிறவு போர் முனையிலும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியால் விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது.

இவ்விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்காக கப்டன் கலைஞன் என்ற போராளி பால்ராஜால் பாராட்டப்பட்டு பின்னர் விமான எதிர்ப்பு பீரங்கிப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். சிறந்த போராளிகளை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதில் பால்ராஜ் பின்னிற்காதவர் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணமாகும். கலைஞன் என்ற இப்போராளி முதலில் பால்ராஜின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராகவே இருந்தார்.

யாழ். குடாநாட்டில் படையினர் நடத்திய `முன்னேறிப் பாய்தல்' நடவடிக்கையின் பின்னர் 40 ஆயிரம் படைகளை பயன்படுத்தி படையினர் மேற்கொண்ட `சூரியக் கதிர்' இராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் பால்ராஜ் களமிறக்கப்பட்டார். ஆனால், நில அமைப்புகளையும் போரியல் தந்திரங்களையும் கருத்தில்கொண்டு தமது எதிர் நடவடிக்கையை கைவிட்டு புலிகள் யாழ். குடாநாட்டிலிருந்து பின்வாங்கினர்.

அதன் பின்னர் வன்னியை தலைமையகமாகக் கொண்டு விடுதலைப்புலிகள் நடத்திய ஓயாத அலைகள் 1,2,3 ஊடறுப்பு தாக்குதல்கள், குடாரப்பு தரையிறக்கமென அத்தனை பாரிய படை நடவடிக்கைகளுக்கும் பால்ராஜே தலைமையேற்றார். வெற்றியும் பெற்றார். இதனாலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் `தலைசிறந்த போர்த் தளபதி என்ற வகையில் நான் பால்ராஜை ஆழமாக நேசித்தேன்' என்று கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக பால்ராஜ் தலைமையில் நடந்த குடாரப்பு தரையிறக்கத்தை குறிப்பிடலாம்.

ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைமுகாம் தகர்ப்பு முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு போல் இம்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் தெளிவாகவிருந்த பால்ராஜ், அதற்காகவே மிகவும் அபாயகரமான குடாரப்பு தரையிறக்கத் திட்டத்தை தயாரித்திருந்தார்.



தற்பாதுகாப்பு தாக்குதலுக்கேற்றவாறே ஆனையிறவு களமுனை அமைந்திருந்தது. ஆனால், அதை தாக்குதலுக்கேற்ற களமாக மாற்றிய பிரபாகரனின் திட்டத்திற்கு பால்ராஜ் செயல் வடிவம் கொடுக்க தயாரானார்.

ஆனையிறவு தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்பட்டபோது குடாரப்பு தரையிறக்கத்துக்கான மிகவும் ஆபத்தான, வெற்றி பெறும் சாத்தியம் குறைவான திட்டத்தை பால்ராஜ் முன்வைத்து இதற்கு பிரபாகரனின் அனுமதியை கோரினார்.

குடாரப்பு தரையிறக்கம் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரபாகரன் அதற்கு இணங்கவில்லை. ஆனாலும், தனது திட்டத்தில் பிடிவாதமாகவிருந்த பால்ராஜ் இத்திட்டத்தின் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்ள முடியுமெனக் கூறியதுடன் அதற்காக 1200 பேரைக் கொண்ட விஷேட படையணியொன்றும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு தாக்குதலை இராணுவம் எதிர்பார்த்திருக்காதென்பதால் இத் தரையிறக்கம் வெற்றியளிக்குமெனவும் வாதிட்டார்.

பால்ராஜின் போரியல் ஆற்றல் பிரபாகரனுக்கு நன்கு தெரிந்திருந்த போதும் ஒவ்வொரு போராளிகளையும் தனது குழந்தைகளாக கருதும் அவர் ஒருவேளை இத் தரையிறக்கம் தோல்விகண்டுவிட்டால் அதனால் ஏற்படும் அழிவுகளைப் பற்றி பால்ராஜுக்கு தெளிவுபடுத்தினார். குடாரப்பில் 1200 பேரைக் கொண்ட விஷேட படையணி தரையிறக்கப்பட்டால் அவர்கள் திரும்பி வரவேண்டுமானால் ஆனையிறவை வெற்றி கொண்டு ஏ9 வீதியூடாகவே வரவேண்டும். ஆனையிறவை வெற்றிகொள்ள முடியாவிட்டால் மீண்டும் கடல்வழியாக திரும்பி வருவதற்கு வாய்ப்புகளில்லை.

ஏனெனில், ஆனையிறவு படைத்தளம் மூன்று புறம் கடல் நீரேரியால் சூழப்பட்டுள்ளது. புலிகளின் தரையிறக்கத்தை எதிர்பார்க்காத இலங்கை கடற்படை புலிகளின் விஷேட படையணி தரையிறங்கியவுடன் கடல் வழியூடான புலிகளின் தொடர்புகளை துண்டிக்க முற்படும். அவ்வாறான நிலையில் புலிகளின் தரையிறக்கத் திட்டமோ அல்லது ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலோ தோல்வியடைந்தால் தரையிறங்கிய அணி திரும்பிவருவதற்கு ஏ9 வீதியை தவிர வேறு வழியில்லை.

அதனால் தான் `1200 பேருடன் நீங்கள் குடாரப்பில் தரையிறங்கினால் ஆனையிறவு தளத்தை நாம் வெற்றிகொண்டால் மட்டுமே நீங்கள் திரும்பி வரமுடியும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் நாம் இழக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என பால்ராஜுக்கு கூறிய பிரபாகரன் பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்துக்கு அனுமதி வழங்கினார். பிரபாகரனின் எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுத்தே பழக்கப்பட்டுப்போன பால்ராஜ் பிரபாகரனின் இந்தக் கவலையையும் தனது மதிநுட்பத்தால் போக்கினார்.

குடாரப்பு தரையிறக்கம்

26-03-2000 ஆம் ஆண்டு அதிகாலையில் 1200 விடுதலைப்புலிகளைக் கொண்ட சிறப்புப் படையணி பால்ராஜ் தலைமையில் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் அதிரடியாகத் தரையிறங்கியது. கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசையின் வழிகாட்டலில் கடற்புலிகளின் அதிவேகப் படகுகளான `குருவி'கள் மூலம் இந்த விஷேட படையணி வெற்றிகரமாகத் தரையிறங்கி நிலையெடுத்துக் கொண்டது.

இராணுவத்தின் 54 ஆவது, 53 ஆவது படையணிகளின் இரு பிரிகேட்டுகள் உட்பட 15 ஆயிரம் வரையிலான இராணுவத்தினர் ஆனையிறவில் குவிந்திருக்க, அவற்றுக்கு நடுவில் 1200 விடுதலைப்புலிகள் தற்கொலைக்கு ஒப்பாக பால்ராஜ் தலைமையில் தரையிறங்கியிருந்தனர்.

இந்தப் படையணியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி உட்பட இன்னும் பல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் 13 இராணுவத்தினருக்கு சமனாகவே களமிறக்கப்பட்டிருந்தனர்.

பால்ராஜ் தலைமையில் 1200 விடுதலைப்புலிகளும் குடாரப்பில் தரையிறங்கியிருக்க இன்னும் 3 படைப் பிரிவுகளைச் சேர்ந்த 450 விடுதலைப்புலிகள் நீரேரியை கடந்து ஏ9 வீதியை பளைக்கும் முகமாலைக்கும் இடையில் ஊடறுத்தனர்.

தமது கோட்டைக்குள் விடுதலைப்புலிகள் தரையிறங்கிவிட்டதால் பேரதிர்ச்சியடைந்த இராணுவ தலைமைப்பீடம் கொழும்பிலிருந்து பலாலிக்கு வந்து தரையிறங்கியது. அப்போது இராணுவத் தளபதியாகவிருந்த லெப் ஜெனரல் சிறீலால் வீரசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி ஆகியோர் மேஜர் ஜெனரல் பலேகல்லவுடன் பலாலி வந்திறங்கினர்.

இதையடுத்து, தரையிறங்கிய விடுதலைப்புலிகள் மீது அரசின் முப்படையும் முழு வேகத் தாக்குதல்களை தொடுத்தன. ஆட்லறிகள், விமானங்கள், கடற்படைக்கப்பல்கள் குண்டுமழை பொழிய பால்ராஜ் தலைமையிலான அணிமீது பாய்ந்தது இராணுவம். இந்த தாக்குதலில் இராணுவமும் தனது விஷேட கொமாண்டோக்களையும் பிரிகேட்களையும் களமிறக்கியது. விடுதலைப்புலிகளின் விஷேட படையணிக்கும் இராணுவத்தின் விஷேட படையணிகளுக்குமிடையில் பெரும் போர் மூண்டது.

பால்ராஜ் தலைமையில் தரையிறங்கிய விஷேட படையணியுடன் இலங்கை இராணுவம் 34 நாட்களாக போரிட்டது. இராணுவத்தின் யுத்த டாங்கிகளாலும் பறக்கும் டாங்கிகளென வர்ணிக்கப்படும் எம்.ஐ.24 ரக யுத்தக் ஹெலிகளாலும் பால்ராஜின் படையணியை நிலைகுலையவோ அல்லது பின்னகர்த்தவோ முடியவில்லை. மாறாக புலிகளின் தாக்குதலில் பல டாங்கிகள் சிதறடிக்கப்பட்டன. விஷேட படையணிகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.

தரையிறங்கிய விடுதலைப்புலிகளை அழிக்க முடியாததினால் ஆத்திரமடைந்த இராணுவ உயர்பீடம் தாக்குதலில் ஈடுபட்ட விஷேட படையணியான 53 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் காமினி ஹெட்டியாராச்சி, மற்றும் கேணல் ரொசான் சில்வா ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு மேஜர் ஜெனரல் சிசிர வீரசூரியவை நியமித்தது. அவராலும் முடியாது போகவே இராணுவத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை களத்தில் இறக்கியது. ஆனாலும், இராணுவத்தின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆனையிறவு பெருந் தளத்தை விடுதலைப்புலிகளின் ஏனைய படையணிகள் சுற்றிவளைத்து தாக்கிக் கொண்டிருக்க. அத்தளத்தின் இதயப்பகுதிக்கும் வெறும் 1200 போராளிகளுடன் தரையிறங்கி இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பால்ராஜின் படைநகர்த்தல் தொடர்பில் சர்வதேச நாடுகளின் இராணுவ வல்லுநர்களே தமது ஆச்சரியங்களை வெளிப்படுத்தியிருந்ததுடன் இத் தரையிறக்கத்தை தற்கொலைக்கு ஒப்பானது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கத்தின் மூலம் வன்னிக்கும் யாழ் குடாநாட்டுக்குமிடையில் பல மைல் விஸ்தீரணத்தில் பரந்து விரிந்து கிடந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் தகர்த்தழிக்கப்பட்டது. ஆயிரக் கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகை இராணுவ தளபாடங்கள் புலிகள் வசமாகின. தன்மானப் போராக இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற ஆனையிறவு சமரில் தமிழினம் வெற்றிக்கொடி நாட்டியது.

ஆனையிறவு தளத்தை கைப்பற்றுவதற்காக முன்னர் விடுதலைப்புலிகள் நடத்திய ஆகாய, கடல், வெளிச்சமரை, கட்டைக்காட்டில் இராணுவத்தின் பெரும் படையணியொன்றை தரையிறக்கியதன் மூலமே இராணுவத்தினர் முறியடித்திருந்தனர். இதனைப் படிப்பினையாக வைத்தே தமது அடுத்த முற்றுகையின் போது கட்டைக்காட்டு தரையிறக்கத்துக்கு பதிலடியாக குடாரப்பு தரையிறக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென திட்டம் வகுத்தவர் பால்ராஜ். அதில் அவர் வெற்றியும் கண்டார். ஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே முத்தாய்ப் பாய் அமைந்ததுடன் அது ஒரு புதிய போரியல் வரலாற்றினையும் ஏற்படுத்தியது.

இது மட்டுமன்றி 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற மாங்குளம், கொக்காவில் படைமுகாம்கள் தாக்கியழிப்பு, 1991 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாய, கடல், வெளிச்சமர், 1993 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மண்கிண்டிமலை படைமுகாம் தகர்ப்பு, அதே ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பூநகரி இராணுவ முகாம் தகர்ப்பு, யாழ்தேவி படை நடவடிக்கை முறியடிப்பு.

1995 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிப்பாய்ச்சல், 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட (ஓயாத அலைகள் - 1) முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்ப்பு, 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பரந்தன் ஆட்லறி பீரங்கி தளம் மீதான ஊடறுப்பு சமர் அதே ஆண்டின் பெப்ரவரி மற்றும் செப்டெம்பரில் நடத்தப்பட்ட (ஓயாத அலைகள் - 2) கிளிநொச்சி தளம் தகர்ப்பு. 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட (ஓயாத அலைகள் - 3). 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு, கூட்டுப்படைத்தளம் தகர்ப்பு மற்றும் தீச்சுவாலை முறியடிப்பு என்பன பால்ராஜ் தலைமையேற்று நடத்திய முக்கிய சமர்களாகும்.

பால்ராஜின் ஒவ்வொரு தாக்குதல்களும் விடுதலைப்புலிகளை இராணுவ வலிமையில் முன்நோக்கி நகர்த்தியது. பால்ராஜ் தலைமையில் இடம்பெற்ற மண்கிண்டிமலைத் தாக்குதல் விடுதலைப்புலிகளுக்கு முதன்முதலில் 81 மி.மீ. ரக பீரங்கியை பெற்றுக்கொடுத்தது. பூநகரிச் சமர் யுத்த டாங்கியையும் கடற்படைப் படகுகளையும் பெற்றுக் கொடுத்தது. முல்லைத்தீவுச் சமர் 122 மி.மீ. ரக பீரங்கிகளை பெற்றுக் கொடுத்ததுடன் இராணுவத்தின் 21 ஆவது படையணியின் 5 ஆவது பிரிகேட்டை முற்று முழுதாக அழித்தது.

போரியல் நடவடிக்கைகளில் மட்டுமன்றி மனிதநேய நடவடிக்கைகளிலும் பால்ராஜ் தனித்துவமானவர். இலங்கை அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத்த காலத்தில் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் தங்கியிருந்த பால்ராஜ் அங்கு ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தில் அகப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால், அதன் பின்னர் அங்கு பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடனும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் பல மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்தார்.

இதன் பின்னர் வன்னி திரும்பிய பால்ராஜ் போராளிகளுக்கு போரியல் பயிற்சிகளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பால்ராஜினால் வளர்த்தெடுக்கப்பட்ட பலர் இன்று தளபதிகளாக உயர்ந்து நிற்கின்றனர். களங்களில் பலியாகிய போராளிகள் கூட சாதனைகள் புரிந்தே சரித்திரமாகியுள்ளனர். சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு போராளியும் 10 படையினருக்கு சமமாகவே பால்ராஜால் வளர்த்தெடுக்கப்பட்டனர்.

பால்ராஜின் படைப்பிரிவில் இணைவதற்காக தம்மை வருத்திக் கொண்ட போராளிகள் பலருள்ளனர். சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் சேர வேண்டுமானால் கடின பயிற்சி முக்கியம். அதில் தேர்ச்சி பெற்றால் தான் பால்ராஜ் படைப்பிரிவில் இணைய முடியும் என்பதால் அப்பயிற்சிகளில் திறமை காட்ட போராளிகள் ஒவ்வொருவரும் படாதபாடுபடுவார்கள். ்நான் பால்ராஜ் குறூப்ீ என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொரு போராளிக்கும் உலகத்தை வென்றுவிட்ட பெருமையிருக்கும்.

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விஷேட தளபதியாக பால்ராஜ் முதலில் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பெடுத்த பின்னர் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விஷேட தளபதியாக லெப். கேணல் கில்மனும், அதன் பின்னர் சுசீலனும் இருந்தனர். தற்போது விஷேட தளபதியாக கோபித் உள்ளார்.

போர்நிறுத்த காலத்தில் தலைசிறந்த போராளிகளை உருவாக்கும் பணியிலீடுபட்டிருந்த பால்ராஜ் இருதய நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கடல்புலிகளை சேர்ந்த லெப். கேணல் வரதா அல்லது ஆதி என்றழைக்கப்படும் போராளிக்கும் பால்ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணமே செய்துகொள்வதில்லையென்ற முடிவிலிருந்த பால்ராஜ் தலைவரினதும் சக தளபதிகளினதும் வற்புறுத்தலுக்கமையவே திருமணம் செய்து கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலையில் சில நடவடிக்கைகளுக்காக தங்கியிருந்த போது பாம்பு கடித்ததில் பால்ராஜின் மனைவி லெப். கேணல் வரதா உயிரிழந்தார்.

மனைவியின் பிரிவுத் துயர் ஒருபுறமும் இருதய நோயின் தாக்கம் மறுபுறமும் அழுத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது படை நடவடிக்கைகளிலும் போராளிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளிலும் பால்ராஜ் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அண்மைக் காலமாக அவரின் நடவடிக்கைகள் மன்னார், மணலாறு களமுனைகளிலேயே அதிகமாகவிருந்தது.

அதீத உழைப்பு கடின முயற்சிகளால் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட பால்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், தொடர்ந்து சிகிச்சை பெற விரும்பாத பால்ராஜ் கள நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரம் காட்டினார். இவ்வாறான நிலையிலேயே கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் பால்ராஜ் மரணமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக