வியாழன், 11 மார்ச், 2010

மீண்டும் போருக்கு செல்வோம் -கண்மணி.


சீனத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட மார்க்சிய ஆசான் தோழர் மாவோ வெறும் போராளி அல்ல. ஒரு தலைச்சிறந்த கவிஞர், இலக்கியவாதி. எப்பொழுதும் கலகலப்பாக மக்களை வைத்திருப்பதில் மகா திறமை வாய்ந்தவர். நமது தேசியத் தலைவரும் சற்றேறக்குறைய அதேபோன்றே குணம் வாய்ந்தவராக இருந்தார். பேசும் போதெல்லாம் சிரிக்க சிரிக்க பேசும் ஒரு ஆற்றல் அந்த மாபெரும் போராளியின் மனதில் சம்மனம் இட்டு அமர்ந்திருந்தது. எதை எதிர்கொள்ளும்போதும் துணிவோடும், திட்டமிட்டும், தளராமலும் செய்யும் தேசிய தலைவர் ஒரு குழந்தைத் தனமான மனம் கொண்டவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்குள்ளும் இலக்கியம் கரைபுரண்டு ஓடியது. அவர் உலகிலுள்ள புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்து படித்தார். அந்த தேடல்தான் அவரை இந்த உலக மக்களை எல்லாம் தேட வைத்தது. நாம் தோழர் மாவோ பற்றி சொல்லிக் கொண்டிருந்தோம் அல்லவா? தோழர் மாவோ, கதைகள், கவிதைகள், நாடகங்கள் மூலம் சீன விவசாய கம்யூனிஸ்ட் தோழர்களை தம்முடைய சொல்லாற்றலால் ஒருங்கிணைத்து தட்டி எழுப்பினார். ஒருமுறை தோழர் மாவோ தமது விவசாய தோழர்களிடம் ஒரு கதை கூறினார்.

''சீனாவில் ஒரு கிராமத்தின் அருகே ஒரு பெரிய மலை இருந்தது. அந்த மலைக்குப் பின்னால் அழகிய, ஆராவாரத்தோடு ஓடும் ஒரு நதி மிகச் சிறப்பாக, ரம்மியமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதி நீரின் தேவை கிராமத்திற்கு மிக மிக அவசியமானதாக இருந்தபோதும், அந்த நதியை கிராமத்திற்குள் விடாமல் மலை தடுத்து நின்றது. ஒரு முதியவர் எப்படியாகிலும் அந்த மலையை தகர்த்து நதிநீரை கிராமத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று செயல்படத் தொடங்கினார்.

தமது கிராமத்திற்கு தடையாக இருக்கும் அந்த மலையை தகர்த்தெறிய, தாம் முயற்சி செய்ய துவங்கினார். தம் கிராமத்தின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் அந்த மலையை உளியால் தினம்தினம் உடைக்க தொடங்கினார். காலையில் செல்லும் அந்த முதியவர் இரவு வரை தமது பணியை இடைவிடாமல் தொடர்ந்தார். இதை போகும், வரும் வழிப்போக்கர்கள் நின்று நிதானித்து அவரைப் பார்த்து கேலிப் பேசிவிட்டு செல்வது நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. சிலர் அந்த முதியவரிடம், கிழவா! நீ என்ன செய்கிறாய்? என்று நக்கலாக கேட்பதும், அதற்கு அந்த கிழவர் அமைதியாக இருப்பதும் சில நேரங்களில் பதிலளிப்பதுமாக இருந்தார். ஒவ்வொருமுறையும் அவர் சொல்வார், ''நான் இந்த மலையை உடைத்து நதியை என் கிராமத்திற்கு கொண்டுவரப் போகிறேன்" என்று.

இது அவரிடம் கேள்வி கேட்கும் பார்வையாளர்களுக்கு பரிகாசமாய் தோன்றியது. அவர்கள் அந்த முதியவரின் வார்த்தையைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். கிழவா! மலை எவ்வளவு பெரியது. இதை உடைக்கும்வரை நீ உயிரோடு இருப்பாயா? என்று அந்த முதியவரைப் பார்த்து அவர்கள் பெரும் அறிவாளிகள் போல் கேள்வியினை தொடுத்தார்கள். அதற்கு அந்த முதியவர் சொன்னார், ''நான் உயிரோடு இருக்கும்வரை இந்த மலையை உடைப்பேன், எனக்குப் பிறகு என் மகன் உடைப்பான். அவனுக்குப் பின் என் பேரனும், கொள்ளுப்பேரனும் தொடர்வார்கள். இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் நாங்கள் வென்றேத் தீருவோம். ஒருநாள் இந்த மலை உடைத்தெறியப்படும்" என்று நெஞ்சுயர்த்தி, கம்பீரமாய் பதிலுரைத்தார்.

இதை வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதைகள், மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள். முதியவரின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் உள்ளார்ந்து நேசித்து அந்த மலையை தேவதைகள் அப்படியே தூக்கி வேறு இடத்தில் நிறுத்தினார்கள். நதி ஆராவாரத்தோடு அந்த கிராமத்திற்குள் புதுப்புனலாய் பாயத் தொடங்கியது".

கதையை இங்கு நிறுத்திய மாவோ இந்த கிராமிய கதையில் வரும் கிழவன் செய்யும் வேலையைத் தான் நாம் செய்கிறோம் என்று பதிலுரைத்தார். நெடிய மலைகள் பொடியாகும். இருமார்ந்த சிகரங்கள் தகரும். புதுவெள்ளம் பாய்ந்து வரும். இந்த மகத்தான உண்மையை மிக எளிய கதையால் புரிய வைத்த மாவோ நம்மிடம் சொல்கிறார், நமக்கான நாடு அமையப்போகிறது. அந்த பணியை தேசிய தலைவர் துவக்கி வைத்தார். அது அவருடைய தலைமையிலேயே நிகழும். அந்த தேவதைகளைப் போல காலம் தமிழீழத்தை மீட்டு, தமிழர் வாழ்விலே புதுப்புனலாய், பொன்னருவியாய், தேன்தென்றலாய், தெம்மாங்குப்பாடலாய், நம் உள்ளங்களை தாலாட்டப் போகிறது. அந்த காலம் மிக மிக அருகில் தான் இருக்கிறது. ஆனால் இந்த நிலையை எட்ட நாம் நமது கடந்தகால நிகழ்வுகளை பின்னோட்டமாய் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு இந்த நேரமெல்லாம் நம்முடைய துயரின் எல்லை கடந்திருந்தது. எமது மக்கள் உடல் சிதறி ஆங்காங்கே இரைந்து கிடந்தார்கள். இது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதாரப்பூர்வமாக செய்தியாக வந்திருக்கிறது. ஐ.நா.வில் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அதிர்ச்சி நிறைந்த இத்தகவலை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில், ''சிங்கள பேரினவாத அரசு, உலக நாடுகளை தமது சதி நிறைந்த திட்டத்தால் தவறாக வழிநடத்தியது. உலக நாடுகளிடம் சிங்கள பாசிச அரசு பெரும் பொய்களை கட்டவிழ்த்துள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்". 14 வருடங்களாக ஐ.நா. சபையில் பணியாற்றிய கோர்டன் வைஸ் தமது பதவியை விட்டு விலகியப் பின் அளித்த நேர்க்காணலில், நமது நெஞ்சங்களை பதறச் செய்யும் செய்திகளால் நிரப்பியிருக்கிறார். இறுதிக்கட்ட சமர் என்று சிங்கள பாசிச அரசு அறிவித்து நடத்திய இன அழித்தொழிப்பில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டதை அவர் உறுதி செய்திருக்கிறார்.

சிங்கள பேரினவாத அரசும், பார்ப்பனிய இந்திய அரசும் உலக பேராதிக்க அரசுகளும் ஒன்றிணைந்து அழித்தொழித்த தமிழின மக்களின் தொகை 10,000 தொடங்கி 40,000 வரை இருக்கும் என அவர் கூறும் செய்தி நம்மை நெஞ்சை உறையச் செய்கிறது.

''இந்தப்போரின் கடைசி நேரத்தில் சற்றேறக்குறைய 3 லட்சம் பொதுமக்களும், போராளிகளும் நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் அளவே உள்ள சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டனர் என தெரிவித்த அவர், போரின் போது புலிகளை அடிப்பதற்காக சிறிய மற்றும் பலம் வாய்ந்த கருவிகள் தாக்கும் எல்லைக்குள்ளேயே அவர்கள் முடக்கப்பட்டார்கள் என்றும் இந்தநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உடல் சிதறி இறந்தார்கள்" எனவும் அவர் கூறுகிறார்.

இந்த தகவல் எந்த நிலையிலும் போராளிகளிடமோ, அல்லது பொதுமக்களிடம் இருந்தோ நாம் பெறவில்லை என்றும், இது போர் நடந்தபோது அங்கே இருந்த பார்வையாளர்கள் கொடுத்த தகவல்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு அனைத்துலக நாடுகளை தமது தவறான வழிக்காட்டுதலால் நடத்திச் சென்றது. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட ஒரு பேரழிவை அம்மக்கள் சந்தித்தார்கள். ஆனால் திட்டமிட்டே இறந்த மக்களின் தொகையை மிகக் குறைத்து சிங்கள இனவாத அரசு கூறுகிறது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது நமக்கு அதிர்ச்சிக்குரிய தகவல் மட்டுமல்ல, நம்மை எழுச்சிக் கொள்ள வைக்கும் தகவலும் கூட. நம்மை முடக்கிப்போடும் தகவல் அல்ல. நம்மை முன்னேறத் தூண்டும் தகவலாக இது இருக்கிறது. காரணம் நாம் மாவோ கதையில் கேட்டதைப் போல உளி கொண்டு தொடர்ந்து செதுக்கிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம். இது, நமக்கான நாடு அமையும்வரை மாறப்போவது கிடையாது.

எம்மின மக்களுக்கு எமது எண்ணங்களையும், எழுச்சி நிறைந்த வார்த்தைகளையும் தொடர்ந்து தருவதிலே நாம் களத்திலிருக்கப்போகிறோம். எந்த நிலையிலும் விழமாட்டோம் என்கின்ற உயரிய லட்சியம் அவர்களுக்குள் எழுச்சியோடு வளர வேண்டும். இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலிருக்கும் எம்மின உறவுகளுக்கெல்லாம் லியூயாசி என்கின்ற சீனத்துக் கவிஞர் எழுதிய இந்த கவிதை வரிகளை மீண்டும் நினைவுப்படுத்துகின்றோம்.

என் இதயம் உண்மையில் நிரம்பிவழிகிறது.
கடந்த காலத்திற்காக வருந்தமாட்டேன்.
ஓ! தெற்கிலிருந்தும் வெற்றி செய்தி வருகிறது.
என் ஊரும், பழக்கமான ஏரியும் தான்
என் உறைவிடம், ஒரு தவப்பீடம்.
என்னை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்றாலும்
நெடுநாள் அங்கே தங்கமாட்டேன்.
வீணாகி விட்டன என் வாழ்நாட்கள்
மெத்த வருந்துகிறேன் அதற்காக.

ஆம்! எம் இனிய உறவுகளே! நாம் நமது சொந்த மண்ணில் தலைசாய்த்து, அந்த காற்று பாடும் தாலாட்டை கேட்டு கண்ணுறங்கும் நாள்தான் நம்முடைய வாழ்நாளின் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். எப்போதும் தோற்றுப்போக நாம் பிறக்கவில்லை. வெற்றிப் பெறவே பிறந்திருக்கிறோம். அதற்காக நம்மை நாம் அர்ப்பணிக்கப்போகிறோம். ஆற்றலோடு களம் அமைக்கப் போகிறோம். எதற்கும் அஞ்சாமல் சமர் செய்யப் போகிறோம். ஏனெனில் நமக்கான ஒரு இலட்சியம் உண்டு.

நாம் எல்லோருக்குமான ஒரு கனவு உண்டு. அது தமிழீழம். நம் சொந்த நாடு. நம் தாய்நாடு. தாய் மடியிலே உண்டு, உறங்கி எழுவதிலிருக்கும் உண்மை மகிழ்ச்சி எந்நிலையிலும் அந்நிய மடியில் நமக்கு கிடைக்கப் போவதில்லை. அதற்காக எந்நிலையிலும் நம்மை நாம் தயாராய் வைத்துக் கொள்வோம். அதற்காக நம்மை நாம் தயாரிப்போம். நமக்கான ஒரு நாடு அமையும்போது என்ன செய்ய வேண்டும் என்று நாம் திட்டமிடுவோம். காரணம் நமது பயணம் இதோ விரைவில் முடிய இருக்கிறது. அந்த முடிவு நம்மை முடிவில்லா மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. அதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம். தோழர் மாவோ சொல்லியதைப் போல,

நாம் மீண்டும் எழுவோம்.
ரத்தத்தை துடைத்துக் கொள்வோம்.
வீழ்ந்த தோழர்களை புதைப்போம்.
மீண்டும் போருக்கு செல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக