திங்கள், 19 ஜூலை, 2010

23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர்
[புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்]



தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.


அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்:

விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர்.

மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் உலகின் மிகப் பயங்கரமான கெரில்லா கடற்படையாக இருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு அவர்கள் பலரை இணைத்து வருகின்றனர்.

இஸ்ரேலியத் தயாரிப்பான டோராப் படகைக் கொண்டு பெண் கடற்புலியொருவர் அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தார்.

பூகோள ரீதியாக தமிழீழத்தின் பாதுகாப்பானது கடலுடன் தொடர்புபட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் எண்ணுகிறார்.

தங்களின் கடற்படை பலம் வாய்ந்ததாக இருந்தாலே தங்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் தரைப் பகுதியினைப் பாதுகாக்க முடியும் என்றும் எதிரியை விரட்டியடிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

விடுதலைப் புலிகளின் கடற்படையானது படிப்படியாக வளர்ச்சி பெற்று வருவதற்கு இதுவே காரணம்.

user posted image
நன்றி ஈழவிசன்

பிரபாகரன் மற்றும் அவரின் சகாக்கள் பலருக்கும் கடலுடன் வரலாற்று ரீதியான பிணைப்பும் உள்ளது.

விமான ஓடுபாதையை விட பிரபாகரனின் மனதை நெருங்கியது கடலாகும்.

விடுதலைப் புலிகளிடம் தொடக்கத்தில் சில மீன்பிடி இழுவைப் படகுகளும் கண்ணாடியிழைப் படகுகளுமே இருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே மக்களையும் பொருட்களையும் வடக்கிலிருந்து தென்னிந்தியாவிற்கு கொண்டு சென்று கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆயுதக்கப்பல்கள் மட்டுமல்லாது சரக்குக் கப்பல்களையும் பயன்படுத்துமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர். கடந்த சில வருடங்களில் அவர்கள் துரித வளர்ச்சியடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக விடுதலைப் புலிகளின் கே.பி என்பவர் உள்ளார். கப்பல்களில் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்கள் கொண்டுவரப்படுமாயின் அதன் செயற்பாடுகளை சூசை கவனிக்கிறார்.

கே.பி. மற்றும் சூசை ஆகியோரின் செயற்பாட்டினால் இன்று விடுதலைப் புலிகளின் கடற்படையானது போராளிகள், மாலுமிகள், கப்பற் பொறியியலாளர்கள் மற்றும் கப்டன்கள் என வளர்ச்சி கண்டுள்ளது.

கடற்புலிகளின் பொறுப்பாளராக 1991 ஆம் ஆண்டு சூசை நியமிக்கப்பட்டார். இவரின் செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பக்கபலமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக யுத்தத்தில் நீண்ட காலத்திற்கு முன்னர் ஏற்பட்ட காயத்திற்காக சூசைக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கவும் விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் கப்பற் பலமானது 10 முதல் 15 வரையாக உள்ளது என்று டொக்டர் விஜய் சக்குஜா கடந் ஆண்டு மதிப்பீடு செய்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் செயற்பாடுகள் சிங்கப்பூரிலிருந்து சோழன் கப்பல் வாங்கப்பட்டதையடுத்தும் கேரளாவில் கடல்புறா கப்பல் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தும் 1984 ஆம் ஆண்டு தொடங்கின.

அவர்களிடம் தற்போது நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய 11 கப்பல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக தென்னாப்பிரிக்காவிடமிருந்த�
� கொள்வனவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பலுடன் அவர்களின் கப்பல்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது என்று புலனாய்வுப்பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கப்பல்கள் கடந்த காலத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தன. சீன ஆயுதங்களை எடுத்து வருகையில் பல்லவன் கப்பல் சென்னையில் வைத்துக் கைப்பற்றப்பட்டது.

1990 ஆம் ஆண்டு சன்பேர்ட் கப்பல் மலேசிய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டது. ஹொரிசன் கப்பல் 1996 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது.

அண்மையில் கப்பலைச் சோதனையிட அனுமதியளிக்காமையினால் சோரின் மற்றும் கொய்மார் ஆகிய கப்பல்கள் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானது.

மரம், அரிசி, உரம் போன்றவற்றைக் கொண்டு செல்வதில் இவர்களின் கப்பல்கள் ஈடுபடுகின்றன. சில கப்பல்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குக் கொண்டுவரப்படுகிறது.

உக்ரெயினிலிருந்து ரி.என்.ரி, ஆர்.டி.எக்சும் கம்போடியாவிலிருந்து சாம்- 7 உம் கப்பல்களில் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் உள்ளன.

பல படகுகள் ஒன்றாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று திடீரென கடற்படையின் ராடர் இயந்திரத்தில் தெரியத்தக்க வகையில் வந்து உடனடியாக தாக்குதலை நடத்திய பின்னர் ஒவ்வொன்றும் திசைக்கொன்றாக செல்வதால் எந்த படகிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை அடையாளம் காண்பது கடற்படையினருக்கு சிரமமாக உள்ளது.

இது விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறைகளில் ஒன்றாக உள்ளது. அவர்களின் டோராப் படகுகளும் ஏனைய படகுகளும் தொழில்நுட்ப ரீதியில் அதிகம் முன்னேறியவையாக உள்ளன.

15 வினாடிகளுக்குள் புலிகளின் வெடிபொருள் நிரப்பிய படகுகள் வந்து தாக்குதலை நடத்துகின்றன. விடுதலைப் புலிகள் தங்கள் படகுகளில் குறைந்தபட்சம் இரண்டு 80 குதிரைவேக என்ஜின்களைப் பொருத்தியுள்ளனர்.

user posted image
நன்றி ஈழவிசன்


1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பல்வேறு தாக்குதல்களினால் கடற்படையின் ரோந்துச் சேவைகள் வலுவிழந்திருந்தன.

இஸ்ரேலிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு விடுதலைப் புலிகள் டோரா மற்றும் சுப்பர் டோராப் படகுகள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

1990 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது கடற்படையின் எடிதார கப்பல் தாக்குதலுக்கு இலக்கானது.

ஓராண்டிற்குப் பின்னர் இதேபோன்றதொரு தாக்குதலுக்கு கடற்படையின் அபித கப்பல் இலக்கானது.

யுத்த நிறுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் விமான ஓடுபாதையை அமைத்துள்ளமை பற்றிக் கவனம் செலுத்துபவர்கள் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவனம் செலுத்துவதில்லை.

எனினும் விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையை ஓரிரு நிமிடங்களில் குண்டுவீசித் தகர்த்துவிடலாம் என்றும் அவர்களின் விமான ஓடுபாதை குறித்த விவாதத்திற்கு பதிலளிக்கும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுத்த நிறுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விடுதலைப் புலிகளின் கடற்பலமானது தற்போது அதிகரித்து வருகின்றது. கண்காணிப்புக்குழுவின் தலைவராக இருந்த ரிக்வே டெலெப்சன் விடுதலைப் புலிகளுக்கு சார்ப்பானவர் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

விடுதலைப் புலிகளின் கடற்பலத்தை கண்கூடாக அறிந்திருந்த அவரால் தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறும் போது கூட அதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்க முடியாது போனது. சாலை மற்றும் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கடற்படை தங்களின் செயற்பாடுகளை பலம் மிக்கதாகக் கொண்டு நடத்துகிறது.

இது தனது எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துச் செல்லவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புப் பார்வையிலிருந்து கப்பல்களையும் அப்புறப்படுத்துகிறது. ஒரு கப்பலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வது இலகுவான முறையாக இருந்தாலும் இதற்கென அதிக நேரம் வேலை செய்தாக வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் அனேகமாக கடும் நடவடிக்கைகளை எடுக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு பூ யுவான் யா - 225 எனும் பெயரைக் கொண்ட சீன மீன்பிடி இழுவைப் படகின் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் பயணம் செய்த 26 பேரில் 9 பேரே காப்பாற்றப்பட்டனர். பூ யுவான் யா - 225 வை கடற்படையினரே பயன்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று விடுதலைப்புலிகள் நம்பினர்.

கடற்படையினரைப் போன்று விடுதலைப் புலிகள் தங்களின் உறுப்பினர்களை கடற்கரையோரம் நிறுத்தி வைப்பதில்லை. அதேபோன்று அவர்களை அதிக இடைவெளியிலும் நிறுத்துவதில்லை. அப்படிச் செய்தால் அவர்களால் விரைவில் தாக்குதல்களுக்கு ஒன்று சேர்வது இயலாமல் போகும்.

கடற்புலிகளிடம் அவர்களின் புலனாய்வுத்துறையும் உள்ளது. அவர்களின் சுழியோடிகளினால் கடற்படை முகாம்கள் பற்றியத் தகவல்களை அறியமுடியுமாக உள்ளதுடன் மூழ்கும் கடற்படைக் கப்பலிலிருந்து தேவையானவற்றைப் பெற முடியுமாகவும் உள்ளது. அவர்களின் நீர்மூழ்கி ஸ்கூட்டர்கள் பலவகையிலும் அவர்களுக்கு உதவுகிறது. கடற்புலிகளின் கப்பல்கள் ராடார் வசதிகள் இரவு நேரங்களில் பயணிப்பதற்கான வசதிகளுடன் தரையுடன் சம்பந்தப்பட்டதான ராடார் வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆட்களை ஏற்றியிறக்கும் நடவடிக்கைகளிலும் கடற்புலிகள் பெரும் பணியாற்றுகின்றனர். சிறிலங்கா படையினரால் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாக்கப்படுகையில் அவர்கள் கரையோரத்திற்கு வரும்போது கடற்புலி உறுப்பினர்கள் அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

2000 ஆம் ஆண்டு கடற்புலிகள் திருமலை கடற்படை முகாமிற்குள் ஊடுருவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். கடந்த இரு தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் பல மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் பெருமளவு உயிரிழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக