புதன், 7 ஏப்ரல், 2010

விமானம் வீழ்த்தப்பட்டது - வரலாற்று நிகழ்வு

நேற்று (30.04.2007) அன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 இரக குண்டுவீச்சு விமானமொன்று வன்னிப்பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.
அவ்விமானம் வீழ்ந்துவிட்டதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசதரப்போ அதைப்பற்றி மூச்சும் விடவில்லை. அதன்காரணத்தால் மற்றச் செய்தி நிறுவனங்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
விமானம் எங்கு வீழ்ந்தது? வானோடிக்கு என்ன நடந்தது? போன்றவற்றுக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை.
கடலுக்குள் விழுந்திருக்க வேண்டுமென்று புலிகள் தரப்புச் செய்திகள் சொல்கின்றன.

விமானம் தாக்குதலுக்குள்ளாகி புகைகக்கியவாறு திரும்பியதை வன்னிமக்கள் பார்த்திருக்கிறார்கள். கக்கிய புகையின் அடிப்படையில் அவ்விமானம் மீளமுடியாத நிலையிலிருந்ததாகவே கருதப்படுகிறது. அதேநேரம் கொழும்பு வான்படைத்தளத்திலோ அல்லது வேறெங்குமோ புகைகக்கியபடி விமானமொன்று தரையிறங்கியதாகத் தகவலில்லை. பொதுமக்களுக்குத் தெரியாமல் தரையிறங்கக்கூடிய எவ்விடமும் சிறிலங்கா அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குளில்லை.
எனவே புலிகளின் செய்தியை நம்பாத நடுநிலையாளர்கள்கூட விமானம் எங்கோ வீழ்ந்திருக்கிறது என்று தாராளமாகக் கருதலாம்.

மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து இரண்டு அவ்ரோ இரக விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28, 29 ஆம் திகதிகளில் இவ்விரு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஈழப்போராட்டத்தில் விமான எதிர்ப்பில் புதிய எழுச்சியொன்று அத்துடன் தொடங்கியது. பன்னிரண்டு ஆண்டுகளின்பின் அதே நாட்களில் மிகையொலி விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டு புதியமுறையிலான வடிவமொன்றைக் கொடுத்துள்ளது.

*****************
இதுவொரு வரலாற்று நிகழ்வு. ஈழப்போராட்டத்தில் முதன்முதலாக மிகையொலி குண்டுவீச்சு விமானமொன்று களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.
மிகையொலி விமானங்கள் இலங்கையில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கடந்த பதினைந்தாண்டுகாலத்தில் ஒருதடவைகூட இவ்வகை விமானங்கள் களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டதில்லை - ஏன் சேதமாக்கப்பட்டதுகூட இல்லை.

1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். (அதற்கு முன் ஏதாவது தாக்குதல் இவ்விமானங்களால் நடைபெற்றிருந்தால் அறியத்தரவும்).
இவ்விமானங்களின் வருகைக்கு முன், விமானச் சத்தத்தைக் கேட்டு, அது வட்டமிடுவதைப் பார்த்து, எங்கே குண்டுவிழப்போகிறதென்று ஊகித்துத்தான் மக்கள் காப்புத் தேடிக்கொள்வார்கள். ஆனால் இவற்றின் வருகைக்குப்பின் குறிப்பிட்ட காலம் அப்படியெல்லாம் செய்யமுடியாமற் போனது. இவற்றின் வேகம் காரணமாக சத்தத்தைக்கொண்டு விமானத்தைக் கணிக்க முடியாதிருந்தது. இதன் இரைச்சலே மக்களைக் கிலிகொள்ள வைத்தது. தொடர்ந்த போராட்டத்தில், இவ்வகை மிகையொலி விமானங்களே குண்டுவீச்சில் முதன்மைப் பங்கை வகித்தன. மிக அதிகளவான சேதத்தையும் ஏற்படுத்தின.

புலிகளால் அவ்வப்போது குண்டுவீச்சு விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படும். மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து சில விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஆனால் மிகையொலி விமானங்களெவையும் வீழ்த்தப்படவில்லை. இவற்றின் அதிகூடிய வேகம், தானியங்கியாகச் செயற்படும் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை என்ற காரணிகளால் இதன்மீதான தாக்குதல்கள் அனைத்தும் முழுவெற்றியை அளிக்கவில்லை. தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் - குறிப்பாக ஓயாத அலைகள் - 2 க்குப்பின்னான காலப்பகுதியில் இவ்வகை விமானங்களை குறிப்பிட்ட உயரத்தின்கீழ் தாழப்பதிந்து குண்டுபோட முடியாமல் செய்வதில் மட்டுமே எதிர்ப்புத் தாக்குதல்கள் வெற்றீட்டின. இதன்மூலம் குண்டுவீச்சைத் துல்லியமற்றதாக்கியது பெரும் அனுகூலமாக அமைந்தது. எனினும் எல்லாநேரத்திலும் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தும் சாத்தியமிருக்கவில்லை. எதிர்ப்புத் தாக்குதலுக்கு ஆகும் மிகப்பெரிய செலவு ஒருகாரணம்.

ஒருகட்டத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்துமளவுக்குச் சென்றிருந்தது. நேற்றுவரை, தாம் தாக்கப்படுவோமென்ற பயமேதுமின்றித்தான் விமானங்கள் குண்டுவீச்சை நடத்திக்கொண்டிருந்தன. இடைப்படட காலத்தில் மிகப்பெரிய அழிவை இவ்விமானங்கள் தமிழர் தரப்புக்கு - மக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் ஏற்படுத்தியிருந்தன. இவ்வகை விமானங்களிலொன்று நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்டது.
***********************

மிகையொலி விமானங்களில் 'கிபிர் (Kfir) எனப்படும் இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்கள் யாழ்ப்பாண இடப்பெயர்வை ஒட்டிய காலத்தில் சிறிலங்கா அரசபடையால் பயன்படுத்தப்பட்டத் தொடங்கின. தொன்னூறுகிளின் இறுதியில்தான் ரஸ்யத் தாயரிப்பான மிக் இரக விமானங்கள் களத்துக்கு வந்தன.
கிபீர் ஒப்பீட்டளவில் வேகம் கூடியது. அதனால் இரைச்சலும்கூடியது. மக்களை உளவியல் ரீதியில் அதிகம் வெருட்டியது கிபிர் விமானம்தான். ஆனால் மிக் வகையோடு ஒப்பிடும்போது துல்லியம் குறைவாகவே இருந்தது. இரைச்சல் மூலமும் வேகம் மூலமும் பெரும் பயத்தை உண்டுபண்ணினாலும் துல்லியக்குறைவு காரணமாக இது அதிகளவில் பாதிப்புக்களைத் தரவில்லையென்று சொல்லலாம்.

மிக் விமானம் ஒப்பீட்டளவில் வேகம் குறைவென்றாலும் தாக்குதல்திறன் அதிகமானது. போராளிகளுக்கு அதிகம் சிக்கலைக் கொடுத்தது மிக் விமானம்தான். துல்லியமாக பல தாக்குதல்களை அவ்வகை விமானங்கள் நடத்தியிருந்தன. வேகம் குறைவென்றபோதும் இதுவரையான அனைத்து விமான எதிர்ப்பு நடவடிக்கைகளின்போதும் தப்புவதற்கு அவ்வேகம் போதுமானதாக இருந்தது.

புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசபடையினரின் வான்டையினரின் தாக்குதல்கள் என்றுமில்லாத வகையில் மிகக்கடுமையாக இருந்தன என்பதோடு பாரியளவில் சேதத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அண்மைக்காலத்தில் அரசவான்படை ஏற்படுத்திய கிலியைப் போலவோ சேதத்தைப்போலவோ முன்னர் இருந்ததில்லை. வெல்லப்பட முடியாத சக்தியாகவே இது இருந்தது.

நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வோடு தற்காலிகமாகவேனும் சிறிலங்கா வான்படையின் தாக்குதல்ளும் செயற்பாடுகளும் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்படும். இவ்வகையான வெற்றிகள் தொடர்ந்தும் கிடைக்குமா அல்லது அரசவான்டை தொடர்ந்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறியே.

எனினும் முதன்முதலில் மிகையொலி விமானமொன்றைச் சுட்டுவீழ்த்திய நிகழ்வு, ஈழப்போராட்டத்தில் ஒரு மைல்கல் என்பதை மறுக்க முடியாது. அதைப்பதிவாக்கவே இவ்விடுகை.

ஆனையிறவு

இன்று ஆனையிறவுப் படைத்தளம் தமிழர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.
சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் "வீழ்த்தப்பட முடியாத தளம்" என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.

1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, 'புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்' என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.

1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். 'ஆனையிறவு' என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.

ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. புநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.
அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.

ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.

1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி - ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.

உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் "ஆகாயக் கடல் வெளிச் சமர்" என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.

அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி "யாழ்தேவி" என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.

யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.

இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.
ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக அனையிறவு மீது புலிகள் கைவைக்கவேயில்லை.

ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு - வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கஞ் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.

பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, 'முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்' என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.


தரையிறக்கத்துக்குத் தயாரானநிலையில் புலியணியின் சிறப்புப் பிரிவொன்று.
பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'மாமுனைத் தரையிறக்கம்' புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.
முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கி நீரேரியூடாக நகர்கின்றன.


தளபதி பால்றாஜ் அவர்களோடு ஏனைய போராளிகள்.


இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்றாஜ் தலைமையிலான அவ்வணியினர்.

இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் வினியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 22.04.2001 22.04.2000 அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.


மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.
ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.

ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது.
ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.
****************************************
வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் 'ஆனையிறவு'தான். ஆனால் வந்த பதில், 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர்'.
***************************************
ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்.
***************************************
ஆனையிறவு வெற்றியையொட்டி நிறையப்பாடல்கள், கவிதைகள் எல்லாம் வந்துவிட்டன. நீங்கள் ஒரு பாடலைக் கேளுங்கள். எனக்குப்பிடித்த பாடல்.
பாடலைப் பாடியோர்: சாந்தன், சுகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக